Monday, August 31, 2009

எஸ். ராமகிருஷ்ணனின் துணையெழுத்து



எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆல்பம் படத்தில் இருந்தே, படங்களுக்கு வசனம் எழுதி வந்தாலும், நான் அவரை கவனிக்க ஆரம்பித்ததும், ரசிக்க ஆரம்பித்ததும், ’உன்னாலே உன்னாலே’ படத்தில் இருந்து தான். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே, இந்த படத்தின் வசனங்கள் மீது எனக்கொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், ஜீவா இயக்கத்தில் இதற்கு முன்பு வந்த ’உள்ளம் கேட்குமே’ படத்தில் இருந்த சுஜாதாவின் வசனங்கள். முக்கியமாக, அந்த கல்லூரி பேர்வெல் காட்சியில் ஷாம் பேசும் வசனங்கள்.



அந்த படத்தில் வசனங்களுக்கு இயக்குனர் ஜீவா கொடுத்த முக்கியத்துவமும், அதற்கு அடுத்த படத்தில் எஸ். ராமகிருஷ்ணனை எழுத அழைத்ததும், இவரிடம் ஏதோ இருக்கிறது என்றெனக்கு உணர்த்தியது. படத்தை இசையுடன் தூக்கி பிடித்த வசனங்களும், என் எதிர்பார்ப்பை ஈடுகட்டியது. படத்தின் டைட்டில் காட்சியில் வரும் வசனங்களில் இருந்தே, ரசிகர்களை ஈர்க்க துவங்கியது.


காட்சிகளைக் காண, படங்களை க்ளிக் செய்யவும்.

இலக்கிய உலகில் இயங்கி வந்த எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துக்களுக்கு, சினிமா இன்னொரு தளத்தில் வெளிச்சம் கொடுத்ததென்றால், ஆனந்த விகடனில் வெளிவந்த துணையெழுத்து கட்டுரை தொடர் ஜனரஞ்சக வாசகர்களிடம் இவர் எழுத்தை பரவலாக்கியது. துணையெழுத்து, தேசாந்திரி தொடர்கள் வெளிவந்த சமயம், தொடர்ந்து படிக்கவில்லையென்றாலும், அவ்வப்போது வாசித்து வந்திருக்கிறேன். தற்போது, துணையெழுத்தை புத்தகவடிவில் வாசித்தேன்.

----

தினசரி வாழ்க்கையை இவர் காணும் பார்வை வித்தியாசமானது. அழகானது. ராமகிருஷ்ணன் என்றால் பயணங்கள் என்று சொல்லுமளவுக்கு, இவர் வாழ்வோடு பயணங்கள் கலந்திருக்கிறது. இவர் தன் வாழ்க்கை பயணத்தில் கடந்து வந்த இடங்களை, மனிதர்களை, நிகழ்வுகளை, இத்தொடரில் பதிவு செய்திருக்கிறார். நாம் சாதாரணமாக காணும் ஒரு விஷயத்தை, இவர் எழுத்தில் காணும் போது, இவருடைய பார்வையும், எழுத்தாளுமையும் தெரிகிறது.

ரயில்வே ஸ்டேஷன் போனால், உங்களுக்கு என்ன தோன்றும்? எழும்பூர் ரயில் நிலையத்தில் மறைந்திருக்கும் உணர்வுகளை, இவர் இப்படி புலப்படுத்துகிறார்.

இன்றைக்கும் எழும்பூர் ரயில் நிலையத்தினுள் ரயில் வந்து நிற்கும்போதெல்லாம் மனம், தானே காலத்தின் பின்னே போய்விடுகிறது. இதே ரயில்நிலையத்தில் எத்தனை கலைஞர்கள், படைப்பாளர்கள் வந்திறங்கி இருக்கிறார்கள்? அவர்களில் அறியப்பட்ட ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் எங்கே ஒளிந்துவிட்டார்கள்? கல்வெட்டைவிடவும் தொன்மையானது ரயில் நிலையப் படிக்கட்டுகள். அதில் பதிந்துள்ள பாத வரிகளைப் படிப்பதற்கு இன்றும் வழியில்லை.

இவரது எழுத்துக்கள் எளிமையானது. அதே சமயம் ஆழமானது. புத்தகங்கள் மேல் இவர் கொண்ட காதல், எவ்வளவு தூரமானாலும் இவரை பயணப்பட வைக்கிறது. பயணங்கள் என்பது ஊர் ஊராக சுற்றி அலைந்து, அங்கிருக்கும் கல், கட்டிட அழகை ரசித்து அதனுடன் நின்று புகைப்படம் எடுத்து கொள்வதல்ல என்பதை தனது எழுத்துக்களால் உணரவைக்கிறார். அரசர்கள், அரசியல்வாதிகள் வாழ்ந்த இடங்கள் மட்டும் கவனத்திற்குரியவை அல்ல. ஒவ்வொரு மனிதனின் அறையும் அவனுடைய உணர்வுகளால் நிரம்பிக்கிறது என்கிறார். தான் விருப்பப்பட்டும் காண இயலாத புதுமைப்பித்தனின் மேன்ஷன் அறைக்கு, வாசகனையும் அழைத்து செல்கிறார் தனது எழுத்துக்களால்.

புத்தகங்களைத் தேடி, பழங்கால ஓவியங்கள், சிலைகளைத் தேடி, எழுத்தாளர்களைத் தேடி, வாசகர்களைத் தேடி, ஏன்... மகன் கழுதையை பார்த்ததில்லை என்பதற்காக, மகனுடன் நகரமெங்கும் கழுதைக்காகக் கூட அலைந்திருக்கிறார்.

சிறுவயதிலிருந்து கழுதைகள் மீதிருந்த வசீகரம் மாறவே இல்லை. அதிலும், கழுதைகளின் மௌனம் புரிந்துகொள்ளப்பட முடியாதது. இயல்பிலேயே கழுதைகளுக்கு ஒரு துயர சாடை இருக்கிறது. அதன் கிழிந்த மூக்கு, தான் ஒரு சாது என்று சொல்லாமலேயே சொல்வதாக இருக்கும்.

காதலைப் பற்றி, காதலர்களைப் பற்றி,

உலகில் இரண்டு வகை மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று, காதலை வெளிப்படுத்தி ஜெயித்தவர்கள் அல்லது தோற்றவர்கள். மற்றவர், காதலை வெளிப்படுத்தத் தயங்கியோ, மறைத்தோ, கடந்து வந்துவிட்டவர்கள். அழுகை, சிரிப்பு, கோபம், வேதனை என்பதுபோல காதல் என்பது ஒரு உணர்ச்சி. ஒருவேளை இந்த யாவும் ஒன்றாகக் கலந்ததொரு உணர்ச்சி என்றுகூடச் சொல்லலாம்.

காதலிப்பவர்கள்தான் உலகில் அதிகம் கோபப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. உட்கார்ந்து பேசுவதற்கு இடமில்லாமல் இருக்கிறதே என்று நகரத்தின் மீது, சாலையில் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்களே என்று சகபயணிகள் மீது, இவ்வளவு சீக்கிரத்தில் ஆர்டர் செய்த ஓட்டர் சர்வர் மீது, சட்டைப்பை, ஹேண்ட்பேக்கை, டயரியை வீட்டில் உள்ளவர்கள் ரகசியமாகத் தேடிப் பார்க்கிறார்களே என மொத்த குடும்பத்தின் மீது, இஷ்டம்போல இரவும் பகலும் வருவதில்லையே என சந்திர, சூரியர்கள் மீது என எதன் மீதுதான் கோபம் வராமல் போகிறது?


நான் இந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்காமல், தினமும் ஒவ்வொரு கட்டுரையாக வாசித்து வந்தேன். புது அனுபவமாக இருந்தது. இந்த புத்தகம் வாசித்து முடித்த பிறகு, எஸ். ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் மேலான மதிப்பு கூடியது. (சண்டக்கோழி குட்டி ரேவதி விவகாரம் தவிர,) எந்த வம்புதும்பிற்கும் செல்லாமல் தொடர்ந்து எழுதி வருவது, அவர் மீதான மரியாதையை, என்னுள் இன்னமும் கூட்டுகிறது.

இந்த புத்தகம் வாசித்தபிறகு, நமது பார்வையிலும் சில மாற்றங்கள் வரும். அது அவர் எழுத்தின் வெற்றி அல்லாமல், வேறென்னவாக இருக்க முடியும்? அவர் பாணியில் சொல்வதென்றால், அவருடைய புத்தகங்களில், ஒவ்வொரு எழுத்திலும் இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், பக்கங்களில் பிரதியெடுக்கப்பட்டு, உலகெங்கும் வாசிக்கும் வாசகர்களுக்குள் புத்தகங்கள் மூலம் தொடர்ந்து இன்னமும் இறங்கி கொண்டிருக்கிறார்.

.

3 comments:

நரேஷ் said...

எஸ்ராவின் துணையெழுத்தும் சரி தேசாந்திரியும் சரி என்னை மிகக் கவர்ந்த நூல்கள்....

துணையெழுத்துதான் நான் படித்த அவருடைய முதலெழுத்து....அவருடைய எழுத்து ஏற்படுத்திய அனுபவம்தான் அவரது சிறுகதைத் தொகுப்பை கடந்த புத்தக திருவிழாவில் வாங்க வைத்தது....அவரது சிறுகதைகளை வாசியுங்கள், அற்புதம்....

சரவணகுமரன் said...

நரேஷ்,

நிறைய பேர் துணையெழுத்தில் இருந்துதான், எஸ். ராவின் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்து இருப்பார்கள் போல?

விரைவில் சிறுகதைகள் வாசிக்கிறேன்...

cheena (சீனா) said...

அன்பின் சரவண குமர

துணையெழுத்து - சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில், நண்பர் கார்த்திகைப் பாண்டியனின் பரிந்துரையின் பேரில் வாங்கிப்னேன். இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை. படிக்கிறேன். பிறகு பேசுகிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா