Thursday, September 24, 2009

உ.போ.ஒ. வசனங்களும் வசனகர்த்தா இரா.முருகனும்

உன்னைப்போல் ஒருவன் விமர்சனத்தில் அதிகம் பாராட்டைப்பெற்றதும், சர்ச்சைக்குள்ளானதும் இரா. முருகனின் வசனங்கள். ஆனால், அதிகம் தேடிப் படித்திருக்காவிட்டால், யார் வசனம் என்று தெரிந்திருக்காது. ஏனெனில், பட போஸ்டர் டிசைனிங்கிலும் வசனகர்த்தா பெயர் இல்லை. படத்தின் ஆரம்ப டைட்டிலிலும் வசனகர்த்தா பெயர் இல்லை. (நல்லாத்தான் கவனிச்சேன். மிஸ் பண்ணியிருந்தா சொல்லுங்க.) படம் முடிந்தபின் வரும் டைட்டிலில், இவர் பெயர் வருகிறது. எத்தனை பேர் இதை நின்று கவனிப்பார்கள்? எத்தனை தியேட்டர்களில் இதை முழுவதுமாக போடுகிறார்கள்? சரி, விடுங்க. தேவைன்னா தேடி தெரிஞ்சுக்க போறாங்க...



இரா.முருகன், கணினித்துறையில் பணியாற்றும் எழுத்தாளர். சுஜாதாவிற்கு பிறகு, தமிழில் அறிவியல் புனைவுகளை எழுத இவர்தான் இருக்கிறார் என்கிறார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்பு, இவர் எழுதிய 'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்' என்ற கவிதையை சுட்டிக்காட்டி சுஜாதா சாவி இதழில் எழுதியிருந்தாராம். முன்பின் தெரியாத முருகனை, சுஜாதா முதலில் அறிமுகப்படுத்தியது அதில்தானாம்.

இப்ப, படத்தின் வசனங்களை கேட்கும்போதும், சுஜாதா சாயல் தெரிகிறது.

“மன்னிக்குறோமா, இல்ல... மறந்துடுறோம்... மறதி ஒரு தேசிய வியாதி”

பல இடங்களில் தியேட்டரில், இவர் வசனங்கள் கலகலப்புக்குள்ளாக்கியது.

நடிகரிடம், கமிஷனர் - இவங்கல்லாம் யாரு?
நடிகர் - இவுங்கெல்லாம் என் உயிர்.
கமிஷனர் - உயிர் எல்லாம் கொஞ்சம் வெளியே நிக்கட்டும்.


கமலிடம் மோகன்லால் - தீவிரவாதிகளை விட்டுட்டா, பாம்களை எடுத்துடுவே’ன்னு என்ன கியாரண்டி?
கமல் - கியாரண்டி வாரண்டி எல்லாம் தர, நான் என்ன பிரஷர் குக்கரா விக்குறேன்?


முதல்வர் குரலுக்கு, முதல்வர் குணாதிசயங்களோடு கூடிய வசனங்கள்.

முதல்வர் - நிலைமை எப்படியிருக்கு மாரார்?
கமிஷனர் - இட்ஸ் ஆல் இன் காட்ஸ் கேண்ட்.
முதல்வர் - அய்யய்யோ... அது சிக்கலான கையாச்சே!

கமிஷனர் - எண்ட குருவாயூரப்பா!
முதல்வர் - கேரள கடவுளா? தமிழ் கடவுள்கள் நிறைய இருக்க, அவ்வளவு தூரம் போகணுமா?


பிறகு, தலைமை செயலரிடம்,

“தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு வருமா?”

“எல்லாத்தையும் நீங்களே ஹேண்டில் பண்ணுங்கம்மா!”

“ஒவ்வொரு கட்சிக்கும் டிவி இருக்கே?”

“எதிர்க்கட்சிக்காரன் அறிக்கை விட்டுடப் போறான்!”


நாட்டு நிலவரத்தையும் வசனத்தில் கொண்டு வந்திருந்தார்.

டிவி ரிப்போர்ட்டரிடம் கமல்,

”நியூஸ்க்காக மைக்கும் கையுமாக அலையும் ஆயிரம் ரிப்போர்ட்டர்ஸ் இருக்கிறார்கள்.. செய்திகளை உருவாக்குகிற நியூஸ் மேக்கர்ஸுக்குத் தான் இப்போது பஞ்சம்”

தீவிரவாதி பேசும் அரசியல் டபுள் மீனிங் வசனம்.

”குஜராத்ல மோதிப்பார். மோதிப்பார்த்தா தெரியும். தீர்ந்துடுவ”

இந்த படத்தின் திரைக்கதை வடிவம் புத்தகவடிவில் வந்தால், நன்றாக விற்கும் என்று தோன்றுகிறது. இரா.முருகனின் பிற புத்தகங்களுக்கும் இனி மவுசு கூடக்கூடும். நான் இதுவரை எதுவும் படித்தத்தில்லை. இனி படிக்க வேண்டும்.

அந்த கவிதை.

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்

மூடுவண்டித் திரைக்குப் பின்
முனகிநீ புரண்டிருக்கக்
காற்றணைக்கும் லாந்தர்
கைப்பிடித்துக் கூட வந்து
ஊர் உறங்கும் வேளை
பேர்தெரியா மருத்துவச்சி
வாசலிலே நின்றபோது
பேச்சுக் குரலெழுந்து
நித்திரை கலைந்த
நாய்கள் அதட்டும்.

பின்னிரவுப் பனியும்
பீடிப் புகையுமாய்
வாசலிலே நின்று
வானம் வெறித்திருக்க,
வெள்ளம் அழித்த அறுவடையை,
வீட்டுச்சுவர்கள் விழுந்ததை,
நீல மூக்குத்தி கடன்
நிலுவையில் மூழ்கியதை,

பால் மரத்த பசுமாட்டை,
பஸ் அடித்த வெள்ளாட்டை,
ஆயிக்குத் திவசம் தர
அய்யருக்கு அலைந்ததை,
காளிக்குத் தரவேண்டிய
கழுத்தறுத்த சேவல்களை,
ஆசையாய் நீ கேட்டு,
வாங்காதுபோன வட்டுக் கருப்பட்டியைச்
சுற்றும் நினைவுகள்
சூழ்ந்து குழம்ப,
நேரம் மறந்து நின்றபோது
ஆரோ வந்து சொன்னார்
அழகான குழந்தையென்று.

ஆற்றுச் சலசலப்பில்
காலை விடிந்தபோது
உலகம் புதுசாச்சு
உள்ளமும் நேராச்சு.

.

6 comments:

Cable சங்கர் said...

நல்ல கவனிப்பு சரவணகுமரன்

சரவணகுமரன் said...

நன்றி கேபிள் சங்கர்

ஜெட்லி... said...

முருகன் அவர்களை பற்றி நன்றாக செய்திக்கு நன்றி...... படத்தின் வசனத்தை எழுதியதுக்கு
மிக்க நன்றி.....

நான் படம் பார்க்கும் போது போதை ரசிகர்கள் கைதட்டி
கேக்க விடாமல் செய்து விட்டார்கள்...

சரவணகுமரன் said...

நன்றி ஜெட்லி... வசனத்தை கேட்கணும்’ன்னா, கூட்டம் இல்லாத நாளா போய் பார்த்தாத்தான் உண்டு...

Karthik said...

Nice info and I like those dialogues.I have seen about his poem when i was reading sujatha's "katrathum petrathum".U can get that ebook through the following URL:

http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0185.html

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி கார்த்திக்