Tuesday, January 5, 2010

தூத்துக்குடி கடல்

தூத்துக்குடி கடற்கரை ரொம்ப அமைதியானது. அலைகள், கரையின் அருகிலேயே ஆரம்பித்து, ஒரு மீட்டருக்குள் முடிந்து விடும் வகையை சேர்ந்தது. பாறைகள் எதுவும் இருப்பதில்லை. நேருஜி பூங்கா, ரோச் பூங்கா போன்றவைகளும், கடலுக்கு அருகிலேயே இருந்தாலும், புதிய துறைமுகம் அருகில் இருக்கும் கடற்கரை தான் பார்க்கும்படியானது.



நான் பள்ளியில் படிக்கும்போது, ட்யூசன் முடித்துவிட்டு, விளையாட நேருஜி பூங்கா சென்றிருக்கிறேன். கண்றாவியாக இருக்கும். ரோச் பூங்கா - பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, அங்கிருக்கும் புதர்கள் மூலமாக சமூக விரோத காரியங்கள் நடக்க உதவியாக இருந்தது. பிறகு, புதர்கள் ஒழிக்கப்பட்டபிறகு, தருவை மைதானத்தில் கிரிக்கெட் விளையாட இடமில்லாத போது, கிரிக்கெட் விளையாட உதவியது. கார்க் பால் நன்றாக எழும்பும். தற்போது ஒரளவுக்கு சீரமைக்கப்பட்டு, ஊஞ்சல், ராட்டினம் போன்றவைகளும், நடக்க நடைபாதையும் இருக்கிறது. பார்க்கிங் காசு வேறு வாங்குகிறார்கள். இந்த ரோச் என்பவர் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தூத்துக்குடி நகராட்சியின் முதல் தலைவர்.



தாமிரபரணி படத்தில் கஞ்சா கருப்பு, ”நாலு பயவுள்ளகளை உட்காரவுட்டா போதும். பீச் உருவாக்கிடலாம்” என்பார். கடற்கரைக்கான இலக்கணங்களில் ஒன்றாகி விட்டது, காதல் ஜோடி. நான் அப்படி யாரையும் இங்கு கண்டதில்லை. நான் போவது எப்போதோ ஒரிருமுறை. விசேஷ விடுமுறை நாட்களில் மட்டும் கூட்டம் கூடும். ஸ்பெஷல் பஸ் ஓடும். பூங்காவில் குழந்தைகள் கூட்டம் விளையாடிக்கொண்டிருக்கும். நாலு பேர் தள்ளுவண்டி கடை போட்டு, சுண்டல், பஜ்ஜி, அப்பளம் விற்பார்கள்.



மற்றபடி எல்லா நாட்களிலும், காலை நேரங்களில் மீன் விற்பனை ஏல முறையில் நடக்கும். கடலில் இருந்து வரும் படகில் இருந்து நேராக மீன்கள் விற்பனைக்கு வரும். இதற்கென்று இரண்டு மூன்று இடை தரகர்கள் இருப்பார்கள். மீனவர்கள் மீன்களை வகை வகையாக பிரித்து, கரையில் கொட்ட, தரகர்கள் விற்பனையை தொடங்குவார்கள். மீனைப்பொறுத்து ஐம்பதிலோ, நூறிலோ ஆரம்பிப்பார். சுற்றி இருக்கும் சில்லரை வியாபாரிகளும், வீட்டிற்கு மீன் வாங்க வந்திருப்போரும், என்னைப்போல் வெட்டியாக பார்ப்பதற்கு வந்திருப்போரும் ஏலத்தில் பங்கு கொண்டு தங்கள் விலையை சொல்லுவார்கள். ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் என்றும் கூடும். அஞ்சு, பத்து என்றும் கூடும். ப்ரோக்கரேஜாக, காலை வைத்து சில மீன்களை தரகர், அவர் பக்கம் தள்ளிவைத்துக்கொள்வார்.



சமீப காலங்களில், நிறைய குடும்ப தலைவிகள் மீன் வாங்க நேரடியாக இங்கு வந்து விடுவதால், ஏலத்தில் மீன்களின் விலை அதிகமாக தான் போகிறது. இருந்தாலும், மார்க்கெட்டுக்கு இது பெட்டர். மீன்களை வெட்டிக்கொடுக்கவும், இறால்களை உருவிகொடுக்கவும், நண்டுகளை உடைத்துக்கொடுக்கவும் இங்கேயே ஆட்கள் இருக்கிறார்கள். அக்டோபஸ் போன்ற சில ஜந்துகளும் இருக்கும். எனக்கு தான் பெயர் தெரியவில்லை.



இங்கு துறைமுக கடற்கரையில் காலை ஏழு எட்டு மணிக்கு மீன்கள் வர தொடங்கும். இங்கு வருவதை விட, பழைய துறைமுகத்திலும், திரேஸ்புரம் கரையிலும் அதிகம் வரும். பழைய துறைமுகத்திற்கு நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு படகுகள் கடலில் இருந்து திரும்பும். திரேஸ்புரத்தில் காலையில் இருந்து மதியம் வரை சென்று வாங்கி கொள்ளலாம்.



இது தவிர, மீன் மார்க்கெட்டும் இருக்கிறது. தெருவில் சைக்கிளிலும், கூடையில் விற்பவர்களும் உண்டு. சில மீன்கள், காய்கறிகளின் விலையை விட குறைவாக இருப்பதால், நிறைய வீடுகளில் தினமும் சமையலில் மீன் இருக்கும். செவ்வாய், வெள்ளியில் மட்டும் சாம்பார் வைத்துக்கொள்வார்கள். இன்னும் அந்த காஸ்ட் அட்வான்டேஜ் இருக்கிறதா என்ற தெரியவில்லை.



நாட்டில் சர்க்கரை வியாதிக்காரர்கள் எண்ணிக்கை கூடியிருப்பது எல்லோருக்கும் தெரியும். இவர்கள் அனைவரையும் டாக்டர்கள் நடக்க சொல்ல, அவர்களும் பீச்சிலோ, பீச் ரோட்டிலோ நடக்க கிளம்பிவிடுகிறார்கள். அது என்னடா, நடந்தா பீச்சுல தான் நடக்கணுமா? என்று கேட்டிருக்கிறேன். கான்வாஸ் ஷூ வேறு. ஆனா, அப்படியே கரையோரம் நடப்பது, நன்றாகத்தான் இருக்கிறது. பேச ஒரு ஆள் கிடைத்தால் சூப்பர்.



இல்லாவிட்டாலும் பரவாயில்லை. முடிவில்லா கடற்கரையில், கால் வலிக்கும் வரை எதையாவது நினைத்துக்கொண்டு, பராக்கு பார்த்துக்கொண்டே நடக்கலாம். கரையில் வாழும் சிறு வண்டுக்கள், மணலை உருட்டி போட்டிருக்கும் கோலங்களை பார்த்துக்கொண்டு நடக்கலாம். கீழே கிடக்கும் சங்கு, சிப்பி போன்றவற்றை கையில் எடுத்து சிறு ஆராய்ச்சி செய்துக்கொண்டு நடக்கலாம். வயதான மீனவர்கள் கரையோரம் அமர்ந்து வலை தைப்பதை பார்த்துக்கொண்டு நடக்கலாம். எவ்வளவோ இருக்கிறது. கடலையே பார்த்துக்கொண்டு இருந்தாலும், சலிக்கவா போகிறது?

சுனாமி சமயத்தில், இங்கு சில இடங்களில் மட்டுமே கடல் நீர் உள்ளே வந்தது. திருச்செந்தூரில், கடல் உள்வாங்கியது. அந்த சமயத்தில், இந்த கடற்கரையோரம் ஒரு கும்பல் சுனாமி பார்க்க வந்திருக்கிறது. வருது, வருது என்று கிளப்பிவிட்டு கொண்டும், ஓடி கொண்டும் ஓட வைத்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இப்போதும் பவுர்ணமி சமயம், கடல் நீர் கரையை தாண்டி வெகு தூரம் வந்து நிற்கும். காலையில் சென்றால், தண்ணீருக்குள் நடந்து தான் கரைக்கு செல்ல வேண்டி இருக்கும்.



இந்த கடலினால், தூத்துக்குடிக்கு நிறைய தொழிற்சாலைகள் வந்திருக்கிறது. வந்துக்கொண்டு இருக்கிறது. இருதினங்கள் முன்பு கூட, கர்நாடகாவில் மேதா பட்கர் தலைமையில் நடந்த போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட அனல் மின் நிலைய திட்டம் ஒன்று தூத்துக்குடிக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு அனல் மின் நிலையம் இருக்கிறது. இன்னும் நிறைய ரசாயன தொழிற்சாலைகள் இருக்கிறது. எல்லாவற்றின் கழிவும், இந்த கடலுக்கு தான். அதனால் தானோ, என்னவோ, மொத்த சோகத்தையும் உள்வாங்கிக்கொண்ட ஒரு தாயை போல் அமைதியாக இருக்கிறது.

.

31 comments:

MSK said...

//சில மீன்கள், காய்கறிகளின் விலையை விட குறைவாக இருப்பதால், நிறைய வீடுகளில் தினமும் சமையலில் மீன் இருக்கும். செவ்வாய், வெள்ளியில் மட்டும் சாம்பார் வைத்துக்கொள்வார்கள்.//
எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் தான். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு பருப்பு காய்கறி வாங்கி சாம்பார் மற்றும் பொரியல்/கூட்டு செய்ய 40 முதல் 50 ரூபாய் வரை ஆகும். 10 ரூபாய்க்கு 'சாலை' மீன் மற்றும் அரை முறி தேங்காய் வாங்கினால் அருமையாக மீன் சாப்பாடு செய்து விடலாம்.

மதார் said...

நான் 4 வருசத்துக்கு முன்னே IPT போனது தான் நியாபகம் வருது . துறைமுகம் பார்த்தோமோ இல்லியோ நல்லா சுத்தினோம் . நீங்க சொன்ன அதே பார்க்ல ஒரு ராட்டினம் அதுல வச்சு என் friend என்னை சுத்தின சுத்துல மயங்கிட்டேன் . மணல்ல வீடு கட்டி விளையாண்டு , அங்கிருந்த படகுல titanic படத்துல வர மாதிரி நின்னு போஸ் குடுத்தது பழைய நியாபங்கள் நினைவுபடுத்திடீங்க.............

வடுவூர் குமார் said...

waves and beaches are just like Muscat beaches.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கிங்க.

Anonymous said...

//சமீப காலங்களில், நிறைய குடும்ப தலைவிகள் மீன் வாங்க நேரடியாக இங்கு வந்து விடுவதால், ஏலத்தில் மீன்களின் விலை அதிகமாக தான் போகிறது. //
இப்போ பிராமணர்களும் மீன் சாப்பிடுவதால் தான்...

புகைப்படங்கள் மிகவும் அருமை நண்பரே...

sampath said...

எனக்கு போர்ட் ட்ரஸ்ட் பெருமாள் கோவில் ரொம்ப பிடிக்கும். தூத்துக்குடி பீச்க்கு வரும் போது பெருமாள் கோவிலும் அருகில் இருக்கும் தர்மல் பவர் ஸ்டேசன் வாசல் வரை சென்று வருவேன்.
ஸ்பிக் நகரில்லிருந்து கோவில் வரை சைக்கிளில் சென்று வருவோம்.

prabhu said...

Nanum antha oorkaran than,MSK sonna mathiri 10 rupaiku oru kudumabame sapityruken,Nalla oor but ennala anga irukka mudiyam [pochi,5 rupayku kudal kari,3 rupayku soup ,Anubavichi solren innoru kalam varuma????

Anonymous said...

நானும் தூத்துக்குடி தான் , நான் கடந்த 5 வருடமாக ரஷ்யாவில் இருக்கிரேன் , நான் டமிலிஷ் வாசகன் , நம்ம் ஊரை
அனைவருக்கும் தெரியும் வன்னம் எலுத வேன்டும் என்ட்ரு நினைத்து இருந்தேன் , ஆனால் ஒரு சிரு தயக்கம்
இருந்தது, ஆனால் இபொலுது தான் நம் ஊர் வாசகர்கல் இவ்வலவு பேர் இருப்பது தெரிந்தது, ஊங்கல் பனி சிரக்க
வால்த்துக்கல்.............sorry for the spelling mistakes....i dont know hw to type in tanil words.thatsy sorry for that.........

சரவணகுமரன் said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி MSK

சரவணகுமரன் said...

நன்றி மதார்

சரவணகுமரன் said...

ஓ! அப்படியா? வடுவூர் குமார்

சரவணகுமரன் said...

நன்றி தமிழ் வெங்கட்

சரவணகுமரன் said...

ஆமாம் சம்பத்... அந்த பெருமாள் கோவில் நன்றாக இருக்கும்.

சரவணகுமரன் said...

நன்றி ரஷ்ய வாசகரே... தமிழில் எழுத NHM writer போன்ற மென்பொருளை உபயோகிக்கவும்.

மாடல மறையோன் said...

//அக்டோபஸ் போன்ற சில ஜந்துகளும் இருக்கும். எனக்கு தான் பெயர் தெரியவில்லை//

That is not Octopus; but squib.

அக்டொபஸைப்போல இருக்கும். தூத்துக்குடியில் அதைக் ‘கணவாய்’ என்றழைப்பார்கள். பொதுவாக கடற்கரையோர மக்களே விரும்பி உண்பர். வெள்நாட்டில் மிகவும் பிரபலமா table fish.

மாடல மறையோன் said...

//இப்போ பிராமணர்களும் மீன் சாப்பிடுவதால் தான்...//

தூத்துக்குடியில் இஃது உண்மைதான். மீன் விற்பவர்களைக்கேட்டால் இது தெரியும்.

மாடல மறையோன் said...

//எனக்கு போர்ட் ட்ரஸ்ட் பெருமாள் கோவில் ரொம்ப பிடிக்கும்..//

It is Venkatesaperumaal koil. Chief Engineer of Tuticorin Port Trust constructed the temple. Mr Gopalan is his name; and his son Ramanujan was my classmate in Higher Secondary.

மாடல மறையோன் said...

//இங்கு துறைமுக கடற்கரையில் காலை ஏழு எட்டு மணிக்கு மீன்கள் வர தொடங்கும். இங்கு வருவதை விட, பழைய துறைமுகத்திலும், திரேஸ்புரம் கரையிலும் அதிகம் வரும்.//

நீங்கள் குறிப்பிடும் கடற்கரை Greenguard gate போலிருக்கிறது. அங்கேதான் பீச் அழகாக இருக்கும்.

ரோச் பூங்காவிற்குப்பின் அழகான் மணல் நிறைந்த கடற்கரை இருப்பதாக எனக்கு நினைவில்லை.

படங்கள் அருமை.

மாடல மறையோன் said...

ஆளுக்குத்தக்க விலை சொல்லுவார்கள். நீங்கள் படித்த ஆசாமி போல் டீக்கான உடையில் சென்றால், கொஞ்சம் அதிகமாகச் சொல்வார்கள்.

பேரம் பேசத்தெரிந்தவர்களை அழைத்துச் சொல்வது நன்மை பயக்கும்.

மாடல மறையோன் said...

இன்று யாரோ ஒருவர் தமிழ்மணத்தில் தூத்துக்குடி மீன்குழம்பு வைப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார்.

மாதேவி said...

தூத்துக்குடி கடற்கரையும், படங்களும், உங்கள் அனுபவங்களும் நன்றாகவுள்ளன.

சரவணகுமரன் said...

//அக்டொபஸைப்போல இருக்கும். தூத்துக்குடியில் அதைக் ‘கணவாய்’ என்றழைப்பார்கள்//

கரெக்டு...

//தூத்துக்குடியில் இஃது உண்மைதான். //

இது நமக்கு தெரியாதுப்பா...

//It is Venkatesaperumaal koil. Chief Engineer of Tuticorin Port Trust constructed the temple. Mr Gopalan is his name; and his son Ramanujan was my classmate in Higher Secondary.//

தெரியாத தகவல்

//படங்கள் அருமை.//

ரொம்ப நன்றி

//ஆளுக்குத்தக்க விலை சொல்லுவார்கள். //

ஆனா, ஏலத்தில் நாமத்தானே விலை சொல்லுவோம்.

//இன்று யாரோ ஒருவர் தமிழ்மணத்தில் தூத்துக்குடி மீன்குழம்பு வைப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார்.//

மதார் அவர்கள்.

நிறைய தகவல்களை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க் நன்றி.

venkat said...

//எல்லாவற்றின் கழிவும், இந்த கடலுக்கு தான். அதனால் தானோ, என்னவோ, மொத்த சோகத்தையும் உள்வாங்கிக்கொண்ட ஒரு தாயை போல் அமைதியாக இருக்கிறது.\\
?....!!..?

சரவணகுமரன் said...

வாங்க வெங்கட்

செல்வக்குமார் said...

வீடுபேறு

குழம்புக்கென்று வாங்கிவந்ததில்
ஒன்றுடனாவது
குழந்தைகள் விளையாடட்டுமென்று
உயிருடன் கொண்டுவந்து
வீட்டில் விடும்போது
வேடிக்கையாய்ச் சொன்னேன்
இவன் நம்ம ஊர்க்காரனென்று
அதையே பெயராய் வைத்து
அறையைச் சுற்றி ஓட
ஓடவைத்துக் களைத்துக்
குழந்தைக்ள் தூங்கியபின்
வீடு முழுவதும் தேடிப்பார்த்தேன்

கதவைத் திறந்து
வழி சொல்லியனுப்பிய
குழந்தைகள் கருணையைப்
போற்றியபடி
வழி தடுமாறும்போதெல்லாம்
அண்மையில் நிற்பவர்களின்
காலைச் சுரண்டி வழிகேட்டபடி
தூத்துக்குடி கடல்நோக்கி
விரைந்து கொண்டிருந்தது
இந்திரப்பிரஸ்தச் சந்தையில்
நான் வாங்கிய நண்டு


(வடக்கு வாசல் / இலக்கிய மலர் 2008 )
dear kumaran
i am also a tuticorinarian . i like ur post. this poetry was published in a delhi tamil magazine.

augustus/selvakumar

சரவணகுமரன் said...

நன்றி செல்வக்குமார். அருமையான கவிதை.

vijayscsa said...

Hi saravanan,

Great, to see your web log on tuty... did you study from karappettai.

Anonymous said...

கடலில் கழிவைத்தள்ளி விடுவது எங்கும் உண்டு. தூத்துக்குடி கடலில் மட்டுமல்ல

அன்புடன் அருணா said...

எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடிதான்!

MANIS said...

yov, neer thoothukudikarara? nalla than eluthira. padikka nalla irukku. thidirnnu yunga pathivedu parkum santharpam kidaika, ippo nan thangal rasigan. melum thoothukudi karan.
antha irandam gate, pillaiyar koil konda, antha basket ball ground, SAV school thane, padam, neenga yarai irukkum endru kandupudikka muandru parthu mudiyavillai. santharpam kidaithal santhipom.

Anonymous said...

chala meen kolambu pathi oru post podu mapla