![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzavBZ9t_2-DEFjPscRqXYQHTNa6ciEobeVgmeVE8gjjfuONEiF3MNn-tmmGMC6cDzMhiYqbdDG46xXV362MG1mH6qrx829UOeJFPUNxx2DqM0oGQlOfLsM-ZNY4qicu6PVRhoUnRY/s400/ilayaraja-vairamuthu.jpg)
இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.
மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.
---
திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.
பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.
ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.
---
நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.
என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.
---
அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.
ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.
என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.
நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.
வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.
நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.
நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.
உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.
‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.
அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.
---
எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.
பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.
உன் அறிக்கைதான்.
ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.
உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.
இது இருதயத்திற்கு ஆகாதே.
---
நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.
ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.
இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.
---
நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.
உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.
ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.
---
உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.
உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.
நான் கொதித்தேன்.
"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.
மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.
இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.
---
நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?
‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.
மழை வந்தது.
நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.
ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா?
இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?
---
வைரமுத்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரையுலக வாழ்க்கையிலும் சந்தித்த மனிதர்களில் தன்னை ஏதெனும் ஒரு விதத்தில் பாதித்தவர்களை பற்றி தனக்கே உரிய நடையில் எழுதியிருக்கும் புத்தகம் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கலைஞர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஏ.வி.எம். சரவணன், சாலமன் பாப்பையா என நமக்கு தெரிந்தவர்கள் பற்றிய தெரியாத விஷயங்களை, அவர்களின் உயர்ந்த பண்புகளை சிலாகித்து, சிலாகிக்க வைக்கிறது வைரமுத்து எழுத்துக்கள்.
---
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வைரமுத்து.
219 பக்கங்கள்.
ரூ. 70.
சூர்யா லிட்ரேச்சர் லிமிடெட்.
திருமகள் நிலையம்.
.
50 comments:
நல்ல பகிர்வு!
நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
Good one to be shared.
இந்த பதிவை அளித்த உமக்கு வைரமுத்துவின் தீவிர ரசிகனின் நன்றிகள்.
அருமையான பதிவை வழங்கியதற்கு நன்றி
அருமையான பதிவை வழங்கியதற்கு நன்றி
அருமையான பதிவை வழங்கியதற்கு நன்றி
அருமையான பதிவை வழங்கியதற்கு நன்றி
உண்மையில் நல்ல,அரிய பதிவு.சில ஆண்டுகட்கு முன்பு, இவ்விருவரும் ஒரு பாடலுக்காக இணையப்போகிறார்கள் என்று சில வார இதழ்களில் படித்தேன்...ஆனால் நடந்ததாக ஞாபகம் இல்லை.உண்மையில் அவர்கட்கு இடையில் என்ன கருத்து வேற்றுமை என்பதையும், தெரிந்தால்/முடிந்தால் ஒரு பதிவாக வெளியிடவும். நன்றி.
பகிர்வுக்கு நன்றி!
உனக்கு எழுத முடிகிறது , எழுதிவிட்டாய்
நானோ ......
கோபி
அருமையான பதிவு சரவணகுமரன்....
சில மணி நேரத்துக்கு முன்னால் ராசாவுக்கு "பத்ம பூஷன்" விருது வழங்கப்பட்ட செய்தி வந்தது. இது அவருக்கு வாழ்த்து சொன்னது போல தான் இருக்கு. என்னை போல வைரமுத்துவின் தூய நெஞ்சங்கள்ளுக்கு இது ஒரு ஆறுதல்.
அது சரி! எந்த காரணத்தினால இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டாங்களாம்? அதை பத்தி இவரு ஒண்ணும் சொல்லலியே!
இது எவருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இல்லை.
ஆனாலும் படித்த தினம் முதல் இன்று வரை என்னை உறுத்தும் - வைரமுத்துவிடம் கேட்க நினைக்கும் - இந்நிமிடம் வரை பதிலில்லா கேள்வி இது.
- ஒரே வருஷத்தில் சூரியனை உங்கள் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தவர் ;
- இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தவர் ;
- உங்கள் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தவர் ;
- சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் உங்களை வீட்டுக்கு வந்து அழைத்துப் போனவர் ;
- நீங்கள் கார் வாங்குகிற காலம் வரை தன் காரில் உங்களை உங்கள் வீட்டில் இறக்கி விட்டுப் போனவர் ;
- தன் வீட்டிலிருந்து தனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் உங்களுக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் தான் அருந்தாதவர் ;
உங்கள் மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பும்படி நீங்கள் என்ன செய்தீர்கள் கவிப்பேரரசே ?
அன்புடன்
முத்துக்குமார்
குமரன் ,
சாருவின் அறிமுகத்தால் இங்கே வந்தேன் மிக நல்ல பதிவு !!!!!
தோன்றுவதை சொல்வது இருக்கட்டும். ஏன் இந்த பதிவுக்கு மைனஸ் ஓட்டு. நல்லவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்களோ? வாழ்க அவர்கள் பணி.
இவ்வளவு தூரம் தனக்கு உதவிய இசைஞானி வக்கீல் நோட்டீஸ் விடுகிற அளவுக்கு வைரமுத்து என்ன செய்தாரென்று சொல்லவே இல்லையே?
இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்புமளவுக்கு வைரமுத்து என்ன செய்தார் என்பது இன்றைய சூழ்நிலையில் தேவையில்லாதது.
இருவரும் சேர்வதற்க்கு சினிமா, அரசியல் புள்ளிகள் முயற்சி செய்து வெற்றி பெற்றால் தமிழ்சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் நல்லது.
இது இளையராஜாவும், வைரமுத்துவும் தங்களது ஈகோவைக் கைவிட்டால் மட்டுமே முடியும்!!
நன்றி ராமலக்ஷ்மி
வாங்க நெகமம்
நன்றி ஆ! இதழ்கள்
நன்றி விசா
நன்றி மகாராஜன்
நன்றி ஜமீல்
நீங்களோ?... கோபி!
நன்றி நரேஷ்
நன்றி Thameez
அது எனக்கும் தெரியாது ரவிஷா. தெரிஞ்சிக்கிட்டு சொல்றேன்.
முத்துக்குமார், அதை இளையராஜாவிடம் கேட்கணும்
வருகைக்கு நன்றி மணி
ஜோதிஜி, இந்த மைனஸ் ஓட்ட எங்க போயி பார்க்கிறது?
தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன், ஸ்ரீனி.
நன்றி மாயாவி
Good Information
Thanks a Lot
-Shiva
Vairamuthu is always Great... I m very seriously following charuonline.. I m a one of the big fan of charu.. :-)
இந்தக்கவிதையை படித்த பின்னர் இது பற்றி ஒரு பதிவு போடலாமென்று நினைக்கிறேன், நீங்கள் அனுமதித்தால் உங்கள் லிங்கை கொடுத்து இந்தக்கவிதையை பற்றிய எனது சந்தேகங்களை பதிவிடவா?
நன்றி சிவா
வருகைக்கு நன்றி ரஞ்சித்
எப்பூடி,
கண்டிப்பாக...
thanks
very nice.
appadiye ovvonnnaa pottuttaaa padichukkuvom ;)
ilayarajas only defect.
his 'bad attitude'.
http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/20839.html
உங்கள் பதிவை பயன்படுத்தி உள்ளேன்.
இளையராஜா ஏன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதன் பின்னணி குறித்து நான் கேள்வி எழுப்பக்காரணம், வைரமுத்து அது குறித்து சொல்லாமல் ஒரு பக்கச்சார்பாய் எழுதியமையே. இதுவரை இளையராஜா தரப்பில் இருந்து 'ஏன்' என்பதற்கான பதில் வராமலிப்பதால் வைரமுத்து வெள்ளந்தியான அப்பாவி மனிதர் என்பது போலவும் இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அவரை தொல்லைக்கு ஆட்படுத்திவிட்டதுபோலவுமான ஒரு தோற்றம் ஏற்படுகிறது இதில்.
போதாக்குறைக்கு "கலகம் காதல் இசை" என்று எழுதியவர் தனது வலைமனையில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது இளையராஜாவுக்கு பொழுதுபோக்கு என்று இந்த நிகழ்வை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.
இந்த கட்டுரையை வைரமுத்துவின் புத்தகத்தில் வாசித்த காலத்திலேயே எழுந்த கேள்வி இது.
அன்புடன்
முத்துக்குமார்
ந.நவில்
//இந்த கட்டுரையை வைரமுத்துவின் புத்தகத்தில் வாசித்த காலத்திலேயே எழுந்த கேள்வி இது.//
இன்றுவரை விடை தெரியாத கேள்வி.
ஆனால் இந்த உலகில் யாவரும் தன்னிலை விழக்கம் மட்டுமே தருகிரார்கள், உண்மையில் நடந்தது என்ன என்பது ?
இளையராஜா இசையமைத்த ஒரு படத்தின் மொழிமாற்றம் விவகாரமாக வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டது.
அது பாரதிராஜாவின் தயாரிப்பு என்று வைரமுத்து தரப்பு பதில் சொன்னதாகவும் அதன்பின் இசைஞானி அமைதியாகிவிட்டதாகவும் சினிமா உலகில் பேச்சு
வைரமுத்து யோக்கியமானவர் என நான் சொல்லமாட்டேன் அதுவும் ஈழத்தமிழர் விடயத்தில் படு கேவலமாக நடந்திருக்கிறார்..
சின்ன வயதில் படித்த மறக்க முடியாத நூல்களில் ஒன்று. அதிலும் மறக்க முடியாத பாகம் இது. சில நேரங்களில் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும் (அவர்களை மறந்து அவர்களின் படைப்புகளை மட்டும் சுவைக்கும் வேளைகளில்). சில நேரங்களில் இருவரையுமே கண்டால் பற்றிக் கொண்டு வரும். எது எப்படியோ, இது ஓர் அருமையான எழுத்து.
ennamo solreenga,,nanga kettukkarom,,vera vali illai
Post a Comment