Sunday, August 15, 2010

பெங்களூரில் சோழர் கோவில் - சுதந்திர தின ஸ்பெஷல்

”சுதந்திர தினத்திற்கு என்னப்பா ப்ளான்?”

“காலையில் எந்திரிச்சு, குளிச்சு, கோவிலுக்கு போய் இந்தியா நல்லா இருக்கணும்’ன்னு வேண்டிக்க போறேன்!”

“என்னது?!!!”

---

அவன்கிட்ட காமெடியாக சொன்னாலும், கோவிலுக்கு போவது தான் ப்ளான். இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது, இது கண்ணில் பட்டது. இன்னும் தேடி பிடித்து வாசித்ததில், சோழர் காலத்து ஊர் என்றும், முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவில்களில் ஒன்று என்றும் தெரிய வந்தது. இந்த பக்கங்களின் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை. இங்கே சில புகைப்படங்களைப் பார்த்த போது, ரொம்ப பழைய காலத்து கோவில் என்பது மட்டும் புரிந்தது.

கண்டிப்பாக பார்க்க வேண்டும் என கிளம்பிவிட்டேன்.

---

பெங்களூர் ஓசூர் ரோட்டில், பொம்மன்னஹள்ளி சிக்னலில் பேகூர் ரோட்டில் சென்றால், சிறிது தூரத்தில் பேகூர் என்ற கிராமம் வருகிறது. கிராமம் என்பதை விட, பெங்களூரின் ஒரு ஏரியா என்று சொல்லிவிடலாம். ஊரோடு ஊராக கலந்துவிட்டது.

ஒரு ஏரி இருக்கிறது. ஏரியின் பக்கத்தில் இந்த கோவில். ஏரியின் மறுபக்கம் ப்ளாட் போட்டு விற்று, வீடுகள் பெருகி விட்டது. இங்கே இடத்தின் மதிப்பு சதுர அடிக்கு 1500 மேல்.பழைய கோவிலுக்கு முன்பு, ஒரு புதிய கோவில் கட்டும் பணி நடந்துக்கொண்டிருந்தது. கோவில் சின்னது தான். வரிசையாக நிறைய லிங்கங்கள் இருந்தது. கோவிலுக்குள் ரொம்ப தாழ்வாரமாக இருந்தது. குனிந்துக்கொண்டே செல்ல வேண்டியிருந்தது. நிறைய சிற்பங்கள் பார்த்தேன். கூரையின் மேல்பக்கமும் சிற்பங்கள் இருந்தது.

பழைய கோவிலுக்கு என்றே ஒரு மணம் இருக்கிறது. அப்படி ஒரு மணத்தை சுவாசித்துக்கொண்டே சாமி கும்பிடும் அனுபவம், நவீன கோவில்களில் கிடைக்காது. பக்கத்தில் பழைய காலத்து கிணறு ஒன்றும் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஒரு பேமிலி புளியோதரை கட்டி கொண்டு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இந்த கோவில் எனக்கு பிடித்து போய்விட்டது.

---

ஒரு நடுத்தர வயது தம்பதி கோவில் பூசாரியிடம் வந்து கோவிலைப் பற்றி கன்னடத்தில் ஏதோ கேட்டார்கள். ’வைப்ரேஷன்’ என்று நடுவே சில வார்த்தைகள் வந்து விழுந்தது. இப்படி ஒட்டுக்கேட்டதில் புரிந்தது. ‘இங்கே எங்கோ அமர்ந்து பூஜித்தால், உள்ளுக்குள் அதிர்வு ஏற்படுமாமே?’ என்பது அவர்கள் கேள்வி. அதற்கு பூசாரி சில இடங்களை சொல்லி அனுப்பினார்.

நான் கிளம்பி, கோவிலை ஒரு ரவுண்ட் வந்தேன். பின்பக்கத்தில் கோபுரத்தை பார்க்க நன்றாக இருக்க, கேமராவை எடுத்தேன். பொசிஷன் செய்து, க்ளிக் செய்ய, சுவிச் ஆப் ஆகிவிட்டது. திரும்ப, திரும்ப முயற்சி செய்ய, வெளிவந்த லென்ஸ் உள்ளே செல்லாமல், அப்படியே அணைந்தது. ”என்னடா இது! வைப்ரேஷனா இருக்குமோ?” என்று நினைத்துக்கொண்டே கிளம்பினேன்.

வீட்டுக்கு வந்து சோதித்துப்பார்த்தால், பேட்டரி ப்ராப்ளம்.

---

ஒரு சுதந்திர தின தகவல்.

நாம் விசேஷமாக கொண்டாடும் சுதந்திர தினத்தை, எந்த விசேஷமும் இல்லாமல், திட்டமும் இல்லாமல், சட்டென்று நினைவுக்கு தோன்ற, ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சொன்னது மவுண்ட்பேட்டன். மதராஸப்பட்டினத்தில் பார்த்திருப்பீகளே?

“அதிகார மாற்றம் எப்போது நடைபெறவுள்ளது?”

“கூடிய விரைவில்”

”முக்கியமான இந்த நிகழ்வுக்கு ஒரு தேதி குறித்திருப்பீர்களே?”

“ஆமாம்” உண்மையில் இல்லை!

“எந்த தேதி?”

ஐப்பானை வெற்றிக்கொண்ட 15ஆம் தேதி மவுண்ட் பேட்டனுக்கு நினைவுக்கு வந்தது.

“ஆகஸ்ட் 15”

அவ்வளவு தான். நாம் வருடா வருடம் கொடியேற்றி மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

நன்றி : மருதனின் “இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு”.

---

ஒரு சுதந்திர தின கருத்து.

இந்தியா என்ற அமைப்பின் மேல் நம்பிக்கை இல்லாமல், ஏன் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என எழுப்பப்படும் கேள்வி பார்வையில் பட்டது.

வாழ்க்கையில் கொண்டாடப்படும் நிகழ்வுகள் எதுவும் மறுக்கப்படக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவை இவர்கள் வெறுப்பதற்கான காரணங்கள் எதற்கும் இந்தியா என்ற அமைப்பு அடிப்படையாக இருப்பது கிடையாது. காரணம் - சில அரசியல்வாதிகள். அதிகாரிகள். அவர்களை மாற்றுவதற்கான வழியை தான் காணவேண்டுமே ஒழிய, இந்தியாவை எதிர்ப்பதற்கான வழியை அல்ல.

அன்பு, வெறுப்பு - இதில் அன்பு வழியை தேர்ந்தெடுத்தால், எல்லைக்கோடுகள் மறையும். வெறுப்பு வழி, மேலும் பிரிவினையை வளர்க்கும். சிறு சிறு துன்பங்கள் நேர்ந்தாலும், நம்பிக்கையுடன் அன்பு வழியை தேர்ந்தெடுப்போம். வேறுபாடுகளை குறைப்போம். களைவோம்.

துண்டு, துண்டாக சிதறாமல், ஓர் மனித இனமாக மாற கனவு காண்போம்.

.

4 comments:

sakthipriya said...

kulathunga solan-ah
elai
kuloothunga solan-ah

சரவணகுமரன் said...

சரி செய்துவிட்டேன், சக்திப்ரியா. நன்றி.

சரவணகுமரன் said...

தொடர்புடைய இன்னொரு பதிவு

http://tbcd-tbcd.blogspot.com/2007/07/blog-post_30.html

BalHanuman said...

>>”என்னடா இது! வைப்ரேஷனா இருக்குமோ?” என்று நினைத்துக்கொண்டே கிளம்பினேன்.

>>வீட்டுக்கு வந்து சோதித்துப்பார்த்தால், பேட்டரி ப்ராப்ளம்.

:-)