Saturday, November 29, 2008

எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல்

இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது.

தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே?

தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க.

தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களை தாக்குனோம்.

தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல. நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காக ஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

தீவிரவாதி 1: எனக்கென்னமோ, ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரி இருக்குது.

தீவிரவாதி 2: என்ன?

தீவிரவாதி 1: ஏதோ, தகவல் பரிமாறிக்கணும்'ன்னு நம்ம பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர கூப்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்ததும், அவர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணனும். மாட்டிக்க கூடாது.

தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லை. ஏன்னு சொல்லு?

தீவிரவாதி 1 (யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளிய வந்திடலாம். அதானே? சரியா?

தீவிரவாதி 2: ஆமாம். ஆமாம். அதே மாதிரி, அடுத்த முறை இந்தியாவுல கொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.

தீவிரவாதி 1: ஏன்?

தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்க, நிறைய டிவி சானல்கள் இருக்காங்க. நம்மளோட சாட்டிலைட் போன் மூலமா, பேச மட்டும்தான் முடியுது. ஆனா, அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட்'யே பண்றாங்க. அது மட்டும் இல்லாம, கமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும் சொல்றாங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.

தீவிரவாதி 1: கரெக்ட். அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம்? சவுத் இந்தியாவுல பண்ணிரலாமா? சென்னை எப்படி?

தீவிரவாதி 2: அங்க வேண்டாம்.

தீவிரவாதி 1: ஏன்?

தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம். ஆனா அங்க இருக்குற அரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சொல்லுவாங்க. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியை சொல்லுவாங்க. கடைசில நம்மள மறந்திடுவாங்க.

தீவிரவாதி 1: ஒ!

தீவிரவாதி 2: அதுமட்டும் இல்ல. டிவிக்காரங்களும், இந்த அளவுக்கு உதவுவாங்கன்னு சொல்ல முடியாது. அவுங்கவுங்க கட்சிகாரங்களையும், சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.

தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம். அதுக்குள்ளே இன்னொன்னு பண்ண முடியுமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே?

தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம். ஹோட்டல்'ல தாக்குதல் பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல்'லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லி இருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சா கோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு. தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையா இருப்பி அடிப்போம்?


தீவிரவாதி 1: அதானே? ஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேல நம்பிக்கையே போயிடுச்சி.

தீவிரவாதி 2: ஏன்?

தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...

அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.

Thursday, November 27, 2008

டைட்டில் போட்டாங்கடோய்!!!

ஒரு படத்தின் டைட்டில்தான் அதற்கு முகவரியிலிருந்து ரேஷன் கார்டு வரை. ஒரு படத்தில் எது இல்லாவிட்டாலும் இது இருக்கும். சார்ட் பேப்பரில் எழுதி காட்டிக் கொண்டிருந்த டைட்டில், இன்று லட்சங்கள் செலவழித்து கிராபிக்ஸில் காட்டும் அளவுக்கு மாற்றங்கள் அடைந்துள்ளது.

ஒரு இயக்குனர் தனது புத்திசாலித்தனத்தையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்துவதற்க்கான முதல் சுற்று இடம் இது. ஒரு படத்தில் நடித்தவர்களின் பெயரையும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரையும் காட்டுவதற்கு மட்டும் உதவுவதல்ல டைட்டில். ஒரு படத்தின் தன்மையை பார்வையாளர்களுக்கு உணர்த்தி அவர்களை கதையின் களத்திற்கு தயார்படுத்தவும் உதவுவது டைட்டில்.

வித்தியாசமான டைட்டில்கள் சுவாரஸ்யம் கொடுப்பவை. பாக்யராஜ் படங்களில் இடையில் போடப்படும் டைரக்ஷன் டைட்டில் கார்டு, தியேட்டரில் கலகலப்பையும் சலசலப்பையும் உண்டு பண்ணுபவை. இது கதையின் திருப்பங்களிலும் சுவாரஸ்யங்களிலும் இயக்குனரின் பங்கை பார்ப்பவர்களுக்கு உணர வைக்கும் யுக்தி. ரஜினி ஆரம்பித்து வைத்த சூப்பர் ஸ்டார் வகை டைட்டில்கள், முன்னணி நடிகர்களின் ரசிகர்களிடையே கரகோஷத்தை வர வைப்பவை. (சூப்பர் ஸ்டார் டைட்டிலில் இப்ப பல வகை வந்து விட்டாலும், பட்டையை கிளப்பியது தேவாவின் இசையில் வந்ததுதான்).

எண்பதுகளின் இறுதியில் வந்த காமெடி படங்களில் போடப்படும் கார்ட்டூன் டைட்டில்கள், எனக்கு சிறு வயதில் படத்தால் ஏற்படுத்த முடியாத ஆர்வத்தை கொடுத்தது. கலடைஸ்கோப் டைட்டில்கள், பிலிம் நெகடிவ் டைட்டில்கள் அந்நேரத்தில் பிரபலமானவை. படத்தின் தீமுடன் வந்த ஸ்பைடர்மேன், ஹல்க், பிளப்பர் போன்ற ஆங்கில படங்களின் டைட்டில்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழிலும் இது போன்று முருகதாஸ் கஜினியில் முயன்றிப்பார்.

டைட்டில் உருவாக்கத்தில் யாருடைய குறுக்கீடும் அதிகம் இல்லாமல் இயக்குனரின் முழுமையான பங்கு இருக்கும் சூழ்நிலையில் ஹீரோவின் பெயருக்கு அடுத்தப்படியாக இயக்குனரின் பெயரை ஸ்பெஷலாக காட்ட வாய்ப்புகள் உண்டு. சில இயக்குனர்கள் சிறப்பான முக்கியமான காட்சிகளின் பின்னணியில் தங்களது பெயரை போடுவார்கள். உதாரணத்திற்கு, முத்து, படையப்பாவில் ரஜினி ஜெயிக்கும்போது போடப்படும் கே.எஸ்.ரவிக்குமார் பெயரையும், தில், கில்லியில் விக்ரம், விஜய் வெற்றியின் போது போடப்படும் தரணியின் பெயரையும் குறிப்பிடலாம். பேரரசு கொடுக்கும் அலப்பரையை பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்தி முதல்வன் ‘நாயக்’கில் டைட்டிலின் போது டிவி ஷூட்டிங் ஸ்பாட்டை காட்டுவார்கள். முடிவில் டைரக்டர் சீட்டைக் காட்டி ஒரு கவுண்டவுன் போட்டு, ஒன்று என்று வரும்போது ஷங்கர் பெயரை போடுவார்கள். நம்பர் ஒன் டைரக்டராம். படம் வெற்றி பெற்றிந்தால் ஆளை கையில் பிடித்திருக்க முடியாது. டூயட் எடுக்க போகிறேன் என்று சந்திராயனில் நிலவுக்கு சென்றிருப்பார். முதல்வன் படத்தில் வரும் சேனல்கள் பலவற்றை காட்டும் டைட்டில், சத்தத்துடன் வரும் எழுத்தை காட்டும் அந்நியன் டைட்டில், பழைய ஸ்டைலில் இருந்து புதிய ஸ்டைலுக்கு மாறும் சிவாஜி டைட்டில் என்று இவர் படத்து டைட்டில்கள் கவனம் பெறுபவை. எல்லாவற்றிலும் மெனகேடுபவர், இதையா விடுவார்?

சிம்பிளாக கவனத்தை பெறுவதற்க்கான வழி, இயக்குனரின் பெயரை மட்டும் கருப்பு பின்னணியில் எவ்விதமான ஒலியும் இல்லாமல் போடுவது. பெருவாரியான சீரியல்களில் கடைப்பிடிக்க படுவது இந்த முறைதான்.

படங்களில் காட்டப்படும் நடிகர்களின் பெயர் வரிசை முறை, எத்தனை வருடம் ஆனாலும் ஒரே மாதிரியானதுதான். முதலில் கதாநாயகன், பின்பு கதாநாயகி, நகைச்சுவை நடிகர்கள், வில்லன், குணச்சித்திர நடிகர்கள், கடைசியில் துணை நடிகர்கள் என்று ஏதோ கல்யாண பந்தியில் போடும் உணவு வகை போல் மாற்றாமல் இருக்கிறார்கள். அது ஏன்தான் தெரியல, கதாநாயகி கேரக்டர் எவ்ளோ மொக்கையா இருந்தாலும், வில்லன்/வில்லி அல்லது ஏதோ குணசித்திர கதாபாத்திரம் ஸ்ட்ராங்'ஆ இருந்தாலும் கதாநாயகி பேருக்கு அப்புறம் தான் மத்தது எல்லாம்.

கடந்த சில வருடங்களாக ஒரு படத்தின் தயாரிப்பில் உழைக்கும் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும் நிலையில், முக்கியமானவர்கள் தவிர மற்ற அனைவரின் பெயர்களையும் படத்தின் கடைசியில் சின்னதாக போடுவார்கள். இதை தியேட்டரில் யாரும் பார்ப்பதில்லை. ஆப்பரேட்டரும் போடுவதில்லை. அது கூட பரவாயில்லை. தமிழ் சேனல்களிலும் போடுவதில்லை. தக்குனுண்டு காட்டும் அந்த நொடிக்கு காத்திருப்பது எத்தனை உள்ளங்களோ? சரோஜாவில் ஆப்பரேட்டர் ப்ரொஜக்டரை அணைக்கும்வரை இழுத்து வைத்திருந்தார், வெங்கட் பிரபு.

சமநிலையில் உள்ள இரு ஹீரோக்கள் படம் என்றால், யார் பேரை முதலில் போடுவது என்ற குழப்பம் வரும். ஆரம்பத்திலேயே இப்படி என்றால், மூணு மணி நேரம் முடிவதற்குள் அவ்வளவுதான். இதனால்தான், தமிழில் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இல்லையோ? பிதாமகனில், விக்ரம் பெயர் தான் முதலில் வரும். சீனியாரிட்டி இல்லையா? சிவாஜி கடைசியாக நடித்த படங்களில் அவர் பெயர்தான் முதலில் வரும். படையப்பாவில்? ரஜினி பெயர்தான்.

ஒரு நல்ல சினிமா ரசிகன் டைட்டிலை தவற விட விரும்ப மாட்டான். புதியதாக சினிமாவில் நுழைபவர்கள் தங்கள் பெயர் டைட்டிலில் வருவதற்காக காத்திருந்து, ஆர்வமுடன் எதிர்பார்த்து, அப்படி அது வந்து, முதல் முறை தங்கள் பெயரையே திரையில் பார்க்கும்போது அவர்களுக்கு எழும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. அதுவே சாதிக்க துடிக்கும், புகழடைய விரும்பும் கலைஞன், தன் பெயர் போடும்போது தியேட்டரில் கைத்தட்டல் எழுவதற்காக ஏங்குவான். இது ஒரு மனிதன் சினிமாவுடன் கொண்டிருக்கிற பலவகை தொடர்பை காட்டுகிறது. ஒரு காலத்தில் நடிகர்களுக்கு மட்டும் கை தட்டி கொண்டிருந்த ரசிகர்கள், இன்று டைரக்டர், இசையமைப்பாளர் ஆகியோருக்கும் தனது ஆதரவை, ரசனையை கைதட்டி வெளிகாட்டி கொண்டிருக்கிறார்கள். கைத்தட்டல் வாங்கும் துறைகள் அதிகமாகுவது, சினிமாவின் வளர்ச்சியை காட்டும்.

நீங்களும் சுவையான டைட்டில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்?

பா. ராகவனின் "என் பெயர் எஸ்கோபர்"

புத்தகம் விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. புத்தகம் பற்றிய கருத்தை சொல்கிறேன். அவ்வளவுதான். (ஒ! அதுதான் விமர்சனமா?)

புத்தகத்தை விமர்சனம் பண்ணும் முன்பு, என்னுடைய வாசிப்பு பழக்கத்தை பற்றி சொல்லி விடுகிறேன். பக்கத்து வீட்டில் சிறுவர் மலர் வாங்கி படித்த பழக்கம், பின்பு வாடகை காமிக்ஸ், அம்புலி மாமா என்று வளர்ந்து, அரசு நூலகத்தில் உறுப்பினராக்கி, இன்று கிழக்கு பதிப்பகம் ஓசியாக கொடுத்த "என் பெயர் ஈஸ்கோபர்" புத்தகத்தை ப்லாக்'கில் விமர்சனம் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. சாப்பாட்டுக்கு கூட்டோ, பொரியலோ இல்லாட்டியும் பரவாயில்லை, ரெண்டு பக்கம் பேப்பர் (சாப்பிட இல்லை, வாசிக்க) கிடைத்தால் போதும் எனும் அளவுக்கு வாசிப்பு ஆர்வம் உண்டு. ஆரம்பத்தில், கதை, சினிமா புத்தகங்கள் மேல் இருந்த விருப்பம், பின்பு தன்னம்பிக்கை, தனிமனித பொருளாதாரம், வரலாறு என்று சென்று இப்போது அரசியலில் வந்து நிற்கிறது. நாளை எப்படியோ?


பத்ரியும் பா.ராகவனும் அவரவர் பதிவுகளில் இதை பற்றி கூறி இருந்த போது, நான் இந்த புத்தகத்தை தேர்தெடுத்ததற்கு ஒரே காரணம், எழுதியது பா.ராகவன் என்பதுதான். அவர் எனக்கு எழுத்தில் அறிமுகமாகியது "நிலமெல்லாம் ரத்தம்" தொடர் மூலம். அப்போது என் அண்ணனின் நண்பர் அவரை புகழ்ந்து தள்ளினார். அதன் பின்பு, எங்கெல்லாம் அவர் எழுதிய கட்டுரை, தொடர் கண்ணில் பட்டதோ, வாசிக்க தொடங்கினேன். சமீபத்தில், பெங்களூர் புத்தக கண்காட்சியில் கூட இவருடைய டாலர் தேசம் புத்தகத்தை வாங்கலாமா? என்று நினைத்தேன். சைஸை பார்த்து எண்ணத்தை விட்டுவிட்டேன். (படிக்க கஷ்டம் இல்லை. அப்ப, பர்ஸ் ரொம்ப பாவமா இருந்தது :-)) மற்றபடி, புத்தகத்தை திறக்கும் வரை, எஸ்கோபர் யார் என்று தெரியாது.

எஸ்கோபர் ஒரு இன்டர்நேஷனல் கடத்தல் மன்னன். "மை நேம் இஸ் பில்லா" என்கிற மாதிரி "என் பெயர் எஸ்கோபர்" என்று டைட்டில் வைத்திருப்பார்கள் போல. நான் பொதுவா இந்த மாதிரி கடத்தல்காரங்க, கொள்ளைகாரங்க புத்தகங்கள் எல்லாம் வாங்குவது இல்லை. எண்ணங்களே வாழ்வை வழிநடத்தும் என்பதை நம்புபவன் நான் (கிழிஞ்சுது!). சில இடங்களில், வீரப்பன், அம்பானி (! :-)) போன்றோர்கள் புத்தகங்களை வாங்க நினைத்தும் வாங்காதது இதனால்தான். நல்ல மனிதர்களை பற்றி, நல்ல விஷயங்களை பற்றி படிக்க எவ்வளவோ இருக்கிறது. அதை முடித்துவிட்டு இதற்கு வரலாம் என்று விட்டு விடுவேன். (இதுலாம் கொஞ்சம் ஓவர்ன்னு சொல்றது கேக்குது)

சுயக்கதை போதும். மேட்டர்'க்கு வாரேன்.

வீரப்பன் இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசியலுக்கு வந்திருக்கலாம். பிடிக்காத அரசியல்வாதிகளை போட்டு தள்ளியிருக்கலாம். மக்கள் ஆதரவோடு ரவுண்ட் அடிச்சிருக்கலாம். இது எல்லாத்தையுமே எஸ்கோபர் பண்ணியிருக்கிறார். அது மட்டும் இல்லை. அவரின் கடத்தல் "பிசினஸ் மாடல்" எவரையும் ஆச்சர்யப்படுத்தும். அவரின் போதை பொருள் கம்பெனியின் சட்டதிட்டங்கள், ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு சற்றும் குறைவானதில்லை. கடத்தல் பிளான், அரசியல் செல்வாக்கு, அமெரிக்கா'வுக்கான ஆப்பு, போட்டி கடத்தல் கூட்டம், அரசாங்கத்துடனான யுத்தம், விமான வெடிக்குண்டு, மக்கள் அரண், சரண், கண்டிஷன் கைது, கனவு சிறை என்று அத்தியாயத்துக்கு அத்தியாயம் பரபரப்பு. விறுவிறுப்பு தான். ஒரு கட்டத்தில் இது ஒருவருடைய வாழ்க்கை என்பதை மறந்து கதை போல் படித்து கொண்டிருக்கும் அளவுக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் உள்ளது.

இந்த புத்தகம் எஸ்கோபர் என்னும் தனிமனிதனை பற்றியது மட்டும் இல்லை. கொலம்பியா, அதனுடனான அமெரிக்கா தொடர்பு, சர்வதேச போதை கூட்டமைப்பு என்று பலதரப்பட்ட விஷயங்களை விளக்குகிறது. பா. ராகவனின் எழுத்து, சினிமா பார்க்கும் உணர்வை கொடுக்கிறது என்றால் மிகை இல்லை. சாதா சினிமா இல்லை. நக்கல் வசனங்கள் கூடிய ஆக்ஷன் சினிமா. பல இடங்களில் ரசித்து சிரித்தேன். உதாரணத்துக்கு சில,

கடத்தல் பணபரிமாற்றத்தை பற்றி இப்படி சொல்கிறார்,

"சினிமாக்கள் காட்டுவதுபோல் கடற்கரையோரம் சரக்கை எண்ணிப் பார்த்து பெட்டி மாறும் நாடகமெல்லாம் சாத்தியமே இல்லை. கையில் காசு. வாயில் கொகெயின்."

சிறை சூழ்நிலையை இப்படி சொல்கிறார்.

"கொசுக்கடி. தவிரவும் மூத்திர நெடி. கைதிகள் கொஞ்சம்கூட சுகாதாரம் தெரியாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். திருடுபவர்கள், கொள்ளையடிப்பவர்கள், கொலை செய்பவர்களானாலும் அடிப்படை சுகாதாரம் பழகவேண்டாமா?"

ஹோட்டல்'லில் பொய் பெயர் கொடுத்து எஸ்கோபரும் அவரது கூட்டாளிகளும் தங்குவதை பற்றி சொல்லும்போது,

"எஸ்கோபர் படு ப்ரில்லியண்டாக ஈக்வடாரில் அதிகம் புழக்கத்திலுள்ள பெயர் ஒன்றையே அளித்திருந்தான். அவனது ஆள்களும் ஆவடி மருதன், தூத்துக்குடி சிவசுப்பிரமணியன், மாயவரம் முத்துக்குமார், சத்தியமங்கலம் நவநீதகிருஷ்ண கண்ணன், அம்பத்தூர் சுஜாதா முத்துராமன் என்று எஃப்.எம். ரேடியோக்களுக்கு நேயர் விருப்பம் கேட்கிறவர்கள் மாதிரியே பெயரளித்திருந்தார்கள்."

இதெல்லாம் தமிழகத்தின் புகழ்பெற்ற பெயர்கள் ஆயிற்றே? :-)

சீரியஸ்யாக சொல்லும் இடங்களிலும் கலக்குகிறார். சொல்றேன் கேளுங்க...

"வீழ்த்துவது ஒன்றுதான் நோக்கம் என்றானபின் மண்ணில் வீழ்த்தினால் என்ன? மேலே அனுப்பினால் என்ன?"

"அது கல்லுக்குள் ஈரமல்ல. புல்லுக்குள் பீரங்கி."

இது போன்ற எழுத்துக்கள், அவரின் வசனத்தில் வெளிவர இருக்கும் "கனகவேல் காக்க"வுக்காக காக்க வைக்கிறது.

கடினமான விஷயங்களையும் எளிமையாக விளக்கிறார். போதை நெட்வொர்க்'யை டோராவின் பயணங்களுடன் ஒப்பிட்டு விவரிக்கிறார். அதுவே, சில இடங்களில், பேமானி, புரோட்டா, சனீஸ்வரன் போன்ற வார்த்தைகள், ஹாலிவுட் டப்பிங் படம் பார்த்த எபெக்டை கொடுக்கிறது.

அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை வகைகளை சொல்லுவது போல் போதை செடி வகைகளை சொல்லிவிட்டு போவதாகட்டும், சமையல் குறிப்பு போல் போதை பொருள் தயாரிக்கப்படுவதை சொல்லுவதாகட்டும் எழுத்தில் எளிமை. சுவாரஸ்யம். வரலாற்று உண்மை சம்பவங்களை இவ்வளவு சுவாரஸ்யமான எழுதுவதில் இவர் கிங். வரிக்கு வரி கலகலப்பூட்டுகிறார். வரலாறு பாடப்புத்தகத்தை உருவாக்க இவரை விட்டால், அப்புறம் தமிழ்நாட்டில் வரலாறு பாடம் பிடிக்கலை என்று எந்த பிள்ளையும் சொல்லாது.

கலக்கலான இந்த புத்தகத்தில் உள்ள ஒரு சின்ன குறைபாடு, சிறு சிறு எழுத்து பிழைகள். ஒரு பக்கத்தில் 'ள'க்கள், 'மி'க்களாக அச்சிடப்பட்டது, ஒரு கணம் என்னை ஏதோ ஹை டெக் தமிழ் என்று எண்ணவைத்து விட்டது.

படித்து முடித்த பின் ஒரு நிமிடம் யோசித்தேன். விடாமல் படிக்க வைக்கும் இந்த புத்தகத்திற்கு பின் உள்ள எழுத்தாளரின் உழைப்பு அசாதாரணமானது. குடுங்க சார், கைய? கை வலிக்கும் அளவுக்கு குலுக்கலாம்.

இந்த புத்தகம் படிப்பதால் என்ன பயன்? நல்ல வாசிப்பனுபவம். இவ்ளோ நடந்திருக்கு. இது தெரியாமலா இருந்தோம் என்று நினைக்க தூண்டும் சம்பவங்கள். அதிகபட்ச பலனாக, எஸ்கோபரை முன்னுதாரணமாக கொண்டு போதை தொழிலில் இறங்கலாம். ஆட்டம் ஆடி அடங்கலாம். சாத்தியமில்லை. ஒன்றும் வேண்டாம். சரித்திரத்தை சுவையாக சொல்லும் பா. ராகவனின் மற்றுமொரு புத்தகம். படிப்பவர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.

ஓசியில் கொடுத்தால் பினாயிலையும் குடித்து விட்டு, ஆட்சியையும் கொடுக்கும் தமிழர்களில் ஒருவன் என்பதால் என்னவோ, எனக்கு இந்த புத்தகம் ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்தது :-).

புத்தகம் வாங்க இங்கே செல்லவும்...

Wednesday, November 26, 2008

கோடிலிங்கேஷ்வரர் (புகைப்பட பதிவு)

பெங்களூர்'ல இருந்து ரெண்டு மணி நேரத்துல போற தூரத்தில இருக்கிறது கோடிலிங்கேஷ்வரர் கோவில். என்ன விசேஷம்? ஒண்ணு இல்ல. கிட்டத்தட்ட கோடி லிங்கங்கள் ஒரே கோவிலில்.



கோலார் தங்க சுரங்கத்தின் பக்கமுள்ள கம்மசந்தரா என்கிற சிறு கிராமத்தில் உள்ளது இந்த கோவில். போற வழியில் மன்மத ராசா ஷூட்டிங் லொகேஷன் பார்த்து கொண்டே செல்லலாம்.



இந்த கோவிலில் மட்டும் இல்லை. போகிற வழியிலும் நிறைய லிங்கங்களை பார்க்கலாம்.



கோவிலின் ஸ்தல புராணம் தெரியவில்லை. லிங்கங்களின் எண்ணிக்கை கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்தும்.



சின்ன சின்னதாக கோடி லிங்கங்கள் மட்டும் இல்லாமல், ஒரு பெரிய லிங்கமும் நந்தியும் இருக்கிறது.



பெரிய லிங்கத்தின் உயரம் நூத்தியெட்டு அடிகள்.



சின்ன லிங்கங்கள் 1974 இல் இருந்தே வைத்து வருகிறார்களாம்.



கோவில் இடம் பெரியதென்பதால் எந்த இடத்திலும் கூட்டம் இருப்பதாக தெரியவில்லை. அதேப்போல், சத்தமில்லாமல் அமைதியாக இருப்பதும் நன்றாக இருக்கிறது.

Wednesday, November 19, 2008

போடுங்கம்மா ஓட்டு!

ரெண்டு நாட்கள் முன்பு, பெங்களூரில் புதியதாக ஜனதா கட்சியின் தலைவரானா குமாரசாமி தன்னுடைய வெயிட்டை காட்ட ஒரு பேரணி நடத்தினார். சும்மாவே டிராபிக் ஜாம் ஆகும் பெங்களூர், இந்த முறை ஸ்டப்ட் பிரட் போல் எட்டு மணி நேரம் வரை அசையாமல் நின்றது.



ஏர்போர்ட் சென்றவர்கள் விமானத்தை விட்டார்கள். மூன்று-நான்கு மணிக்கு பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள், களைப்புடனும் பசியுடனும் வீட்டுக்கு பத்து பதினோரு மணிக்கு வந்து சேர்ந்தார்கள். ஆபீஸில் இருந்து பஸ்சிலும் கேப்களிலும் சென்றவர்கள், நடந்தாவது செல்வோம் என்று நடந்தார்கள். டிராபிக்'இல் மாட்டிய ஒரு முன்னாள் ஜனதா கட்சி அமைச்சர், கட்சி தொண்டர்களிடமும் மாட்டி அடி வாங்கினார்.



இதனால் இந்த பேரணிக்கும் ஜனதா கட்சிக்கும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்று சொல்லி இருந்த குமாரசாமி, என்ன நினைத்தாரோ இப்ப எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மக்களின் மறதி மேல் நம்பிக்கை வைத்தாரோ, அல்லது எப்படியும் பெங்களூர் மக்கள் நமக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று நினைத்தாரோ, எதிர்ப்பு சொல்லும் பெங்களூர் நகர மக்களை ஒரு பிடி பிடிக்க தொடங்கி விட்டார்.

"அவனவன் கிராமத்துல ஸ்கூல்'லுக்கு போக ஆறு கிலோமீட்டர் ஏழு கிலோமீட்டர் நடந்து போறான். இங்க ஒரு நாள் லேட்'ஆ வீட்டுக்கு போனத்துக்கு இந்த கூப்பாடு போடுறீங்களே, எப்பவும் சுகவாசியா இருக்குற நீங்க அந்த கிராமத்து மக்கள் நிலைமையை நினைச்சி பார்த்தீங்களா?"

"இவ்ளோ பேசுற நீங்க, ஜனநாயக கடமையான ஓட்ட ஒழுங்கா போடுறீங்களா? அதே சமயம், இதே போல் இசை நிகழ்ச்சிகள் நடக்குறப்போ ஆகுற டிராபிக் ஜாம் பத்தி ஒண்ணும் சொல்லுறது இல்லை"

இவர் அவர் தப்ப மறைக்க இப்படி எதிர் வாதம் வைத்தாலும், அதிலையும் ஒரு உண்மை இருக்கு. சேவல் படத்துல 'வழக்கம் போல்', வடிவேலுவ அடிக்க ஒரு கூட்டம் கூடும். அப்ப, வடிவேலு சொல்லுறது, "ஏன்யா, ஓட்டு போடுறப்போ கூட ஐம்பது சதவிகிதம் மக்கள் தான் வரீங்க. ஆனா, என்னைய அடிக்கும்போது மட்டும் இப்படி மொத்தமா வாரீங்களே?" தமாஷா தெரிஞ்சாலும் இதுதான் உண்மை.

இன்னைக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்து இருக்கும் பல பேருகிட்ட வாக்காளர் அடையாள அட்டை இருக்காது. இருந்தாலும், இவுங்க வேற ஊருல இருப்பாங்க. தேர்தல் சமயம் மட்டும் இதோட ஞாபகம் வரும். மத்த சமயமும், அரசு அலுவலகத்துக்கோ, அடையாள அட்டை வழங்கும் பள்ளிகளுக்கோ போக நேரமும் இருக்காது, மனசும் இருக்காது.

இதில் ஒரு மாற்றத்தை கொண்டு வர ஆரம்பிக்கபட்டது தான் "ஜாகோ ரே" (Jaago re) என்னும் அமைப்பு. இதற்கு அர்த்தம் "விழித்தெழுவோம்'ன்னு நினைக்கிறேன். (இந்த பேரை எல்லோருக்கும் புரியுறாப்புல பொதுவா ஆங்கிலேத்துலே வச்சிருக்கலாம். பரவாயில்லை, விடுங்க!). இதன் நோக்கம் இணையம், செல்பேசி தொழில்நுட்பம் மூலம் மக்களிடையே ஓட்டுரிமை பற்றிய விழிப்புணர்வை கொண்டுவருவதும், ஓட்டு போடுவதற்கான உதவிகளை செய்வதும் ஆகும்.

ஜனாகிரகா மற்றும் டாடா டீ நிறுவனங்களின் கூட்டு முயற்சியான இதன் திட்டம், நூறு கோடி மக்களை ஓட்டு போட வைப்பதாகும். முதல் கட்டமாக, அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற உதவி செய்கிறார்கள். நமது விண்ணப்பத்தின் பல்வேறு நிலையை செல்பேசி மூலம் தெரிந்தும் கொள்ளலாம். பின்பு, தேர்தலின் போது, தேர்தல் பற்றிய தகவல்களை தருகிறார்கள். மேலும் விவரங்கள், இங்கே.

மாற்றத்தை எதிர்பார்த்தோமானால், அதை நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

புகைப்படங்கள் நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா

Monday, November 17, 2008

அப்பா-பையன் கதை : இவர்கள் இயக்கினால்...

யாரும் இதுவரை அப்பா கதை சொன்னதில்லை என்று சேரன் 'தவமாய் தவமிருந்து' எடுத்தது போல், இப்ப கௌதம் மேனன் அவர் பாணியில் 'வாரணம் ஆயிரம்' எடுத்து தள்ளியிருக்கிறார்.

இதைப்போல் இன்னும் சில தமிழ் இயக்குனர்களுக்கு அப்பா பாசக்கதை எடுக்க ஆசை வந்தால்,

மணிரத்னம்

இவருகிட்ட பல ஐடியாக்கள் இருக்கும். வாசுதேவர்-கிருஷ்ணா, தசரதன்-ராமன் இப்படி ஏதாச்சும் புராணம் கதைய உல்டா பண்ணி எடுக்கலாம். இல்லாட்டி, ராஜிவ் காந்தி-ராகுல் காந்தி, ஷேக் - பருக் அப்துல்லா கதைகள இது அவுங்க கதை இல்லன்னு சொல்லி எடுக்கலாம். அப்படியும் இல்லாட்டி, நாசாவுல வேல பாக்குற ஒரு பையன், அவுங்க அப்பாவை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போறச்சே ஏற்படுற பிரச்சனைகளை பாலஸ்தின பிரச்சனையின் பின்னணியிலோ, ஈராக்-ஆப்கான் பிரச்சனையின் பின்னணியிலோ, காட்டிடலாம். இந்திய அளவுல ஒரு பரபரப்ப உண்டு பண்ணி, டமால் பண்ற மாதிரி போக்கு காட்டி, கடைசில புஸ் ஆக்கிடலாம்.

ஷங்கர்

ஊர்ல உள்ள சில பணக்காரர்கள், நடுத்தர வர்க்க குடும்ப தலைவர்கள் திடீரென கொலை செய்யப்படுகிறார்கள். அரசாங்கமும் குழம்பி, நாமும் குழம்பி, சி.பி.ஐ. எல்லாம் விசாரிச்சிட்டு இருக்கப்ப, பேங்குல அக்கௌன்டன்ட்'ஆ வேலை பார்த்திட்டு பாசுரம் சொல்லிட்டு இருக்குற மாதவ சேஷாத்திரி என்கிற ஹீரோ தான் இதற்கெல்லாம் காரணம்'ன்னு தெரியுது. ஏன் இதெல்லாம் பண்றாருன்னு பிளாஸ்பேக் வச்சி சொல்லுறாங்க. பிளாஸ்பேக்குல அவுங்க அப்பாவோட வயதான நண்பரை அவன் பையன் முதியோர் இல்லத்துல சேர்க்க முயற்சி பண்றதையும், அதை ஹீரோ அப்பா தடுக்க முயலுவதையும், அதனால் அடிப்பட்டு சாகுறதையும் உருக்கமா காட்டுறாங்க. அதனால் வெகுண்டு எழுந்த ஹீரோ, ஊர்ல யாருலாம் தங்களோட அப்பாவை முதியோர் இல்லத்தில சேர்க்குறாங்களோ, அவுங்களையெல்லாம் கம்ப்யூட்டர்'ல லிஸ்ட் போட்டு தூக்குறாரு. இந்த கதையை இருநூறு கோடில பாரின் டூயட், கிராபிக்ஸ் எல்லாம் வச்சி அமர்க்களமா எடுத்திடுவாரு நம்மாளு. படத்தோட பேரு "அப்பன்" அல்லது "தகப்பன்". ஏன்னா, "ன்"ங்கற எழுத்துல படப் பேரு முடிஞ்சாதான் அவருக்கு லக்கு.

விக்ரமன்

ஒரு அப்பாவுக்கு மூணு பசங்க. அந்த மூணு பசங்களும் பெரிய நிலைக்கு போக அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு. தன் சொத்தெல்லாம் இழந்து ஆளாக்குற அப்பாவை, மூத்த ரெண்டு பசங்களும் கண்டுக்கல. தறுதலையா இருக்குற மூணாவது பையன் மட்டும் அப்பா மேல பாசத்த கொட்டுறாரு. "நிலத்த வாழ வைக்குறது, வானத்தில இருந்து பெய்யுற மழை தண்ணீர். எங்கள வாழ வைக்குறது, உங்க கண்ணுல இருந்து வழியிற ரத்த கண்ணீரு"ன்னு லா லா முசிக்கோட வசனம் வுட்டு, அப்பாவோட சேர்ந்து ஊறுக்காய் கம்பெனி வச்சி, பெரிய தொழிலதிபர்கள் ஆகிறதுதான் கதை. தொழிலதிபர்கள் ஆனவுடன் மொத்த குடும்பமும் ஒண்ணா சேர்ந்து லா லா பாடுறாங்க.

செல்வராகவன்

இந்த கதை கொஞ்சம் வித்தியாசமா அதே சமயம் வில்லங்கமாவும், விவகாரமாகவும் இருக்கும். படத்தோட ஹீரோ ரோட்டுல போஸ்டர் ஒட்டுறவரு. எல்லா மனுஷனுக்கும் ஒரு அப்பாதான் இருப்பாங்க. ஆனா, இவருக்கு மட்டும் ரெண்டு அப்பாக்கள். எப்படிங்கறத, பிளாஸ்பேக்'ல அடி வயிறு கலங்குற மாதிரி சொல்லுறாரு. இந்த ரெண்டு அப்பாக்களுக்கும் ஹீரோ'வுக்கும் நடக்குற உணர்வுபூர்வமான பாச போராட்டம் தான் இந்த கதை. நடுவே, ரெண்டு அப்பாக்களும் ஹீரோவும் சேர்ந்து ஆட, பின்னணியில் டாக்டர், போலிஸ், பால்காரன், பேப்பர்காரன் எல்லாரும் ஆடுற குத்து பாட்டும் கண்டிப்பா இருக்கும்.

பேரரசு

ஹீரோவோட அப்பா பெரிய அரசியல்வாதி. ஊருக்கு நல்லது பண்ணுறவரு. அவரு தன்னோட பொண்ண, அதாவது ஹீரோ'வோட அக்காவ இன்னொரு அரசியல்வாதிக்கு கல்யாணம் பண்ணி வைக்குறாரு. அக்காவோட புருஷன், மாமனாரோட சொத்தையும் புகழையும் ஒரே கல்லுல ஆட்டைய போடுறதுக்காக, அவர கடத்தி ரகசிய அறையில் சிறை வைக்குறாரு. நக்சலைட் கடத்திட்டு போனதா சொல்லி, அனுதாப அலையில ஜெயிச்சி எம்.எல்.ஏ. ஆகிடுராரு. இடைவேளை வரை ஜாலியா சுத்திட்டு இருக்குற ஹீரோ, அவரு ஊரு போஸ்ட்மேன் கிட்ட விவரம் கேள்விப்பட்டு, வில்லன ரவுண்டு கட்டி அடிக்குறாரு. "ஏஞ்சலா ஏஞ்சலா, என்னை வெள்ளையாக்குன உஜாலா! ஊஞ்சலா ஊஞ்சலா, நமக்கு இடையில் யாரும் கிடையாது இடைஞ்சலா!" அப்படின்னு மட்டும் பாட்டு பாடமா, "அன்ப கொடுக்குறது அம்மா, பாசத்த கொடுக்குறது அக்கா, நட்ப கொடுக்குறது நண்பன். ஆனா, இதுக்கெல்லாம் தேவையான உயிரை கொடுக்குறது அப்பா"ன்னு டயலாக் வேற பேசுறாரு.

யப்பா... யப்பப்பா... :-)

Sunday, November 16, 2008

பெங்களூரில் புத்தக கண்காட்சி

பெங்களூர் பேலஸ் மைதானத்தில் கடந்த வெள்ளி (14-11-08) முதல் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சி அடுத்த ஞாயிறு (23-11-08) வரை இருக்கும்.

தமிழ், கன்னடம், ஆங்கிலம் என்று அனைத்து மொழி புத்தகங்களும் கிடைக்கிறது. தமிழ் புத்தக பதிப்பகங்களான விகடன், வானதி, திருமகள், காலச்சுவடு போன்றவை அரங்குகள் அமைத்துள்ளன. இதை தவிர இன்னும் சில கடைகளிலும் தமிழ் புத்தகங்கள் கிடைக்கிறது.

விலை உயர்ந்த சில ஆங்கில புத்தகங்கள் ஐம்பது, நூறு ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆன்மிக போதனையாளர்களின் புத்தக அரங்குகளிலும் தமிழ் புத்தககங்கள் கிடைக்கிறது.

இந்த வாரம் தவறவிட்டவர்கள், அடுத்த வாரத்தில் ஒரு விசிட் அடித்து கொள்ளுங்கள்.

Friday, November 14, 2008

சிலம்பாட்டம் - சிம்பு ஆட்டம்

மச்சான் மச்சான்
சிம்புக்கு இளையராஜா பாடியிருக்கும் மெலடி டூயட். யுவன் இசையில் இளையராஜா பாடியிருக்கும் முதல் டூயட் என்று நினைக்கிறேன். இப்பட பாடல்களில் உள்ள ஒரே மெலடி. இளையராஜா குரல் வித்தியாசமா வேற யாரோ மாதிரி இருக்கு. இளையராஜா பாடியது ஒண்ணுதான் இதன் சிறப்பு. பாட்ட எழுதி ரொம்ப நாள் ஆச்சோ?

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாத்தி போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே


வேர் இஸ் த பார்ட்டி

செம ஜாலியான பாட்டு இது. மப்புலே எழுதி, இசையமைச்சி, மப்புலேயே பாடுன மாதிரி இருக்கு. பாட்ட எழுதியது சிம்பு. கேட்டா, இதுல எழுத என்ன இருக்குன்னு கேட்பீங்க. ஒரே தமாஷ் தான், போங்க!. பார்ட்டி செல்லும் இளைஞ-இளைஞிகள் அனைவரும் தவறாமல் கேட்க வேண்டிய பாடல் இது. :-)

முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணும்'ன்னா
நாங்க காலேஜ்'க்கும் பஸ் ஸ்டாண்ட்’க்கும் போணும்முங்க
இப்பெல்லாம் ஒரு பொண்ணு வேணும்முன்னா
இந்த கிளப்'க்கும் பப்’க்கும் வரணுமொங்கோ


வச்சிக்கவா உன்ன மட்டும்

நல்லவனுக்கு நல்லவன் ரஜினி பாடலின் ரீமிக்ஸ். அப்படி ஒண்ணும் பெருசா மிக்ஸ் பண்ணல. அப்படியே தான் இருக்கு. அதுவும் நல்லதுக்குத்தான். சிம்பு 'வச்சிக்கவா வச்சிக்கவா'ன்னு இஷ்டத்துக்கு பாடி வெறுப்பேத்தி இருக்கார்.

நலந்தானா நலந்தானா

ஒரு பாட்டோட நிறுத்தாம பல இடங்களில் இருந்து உருவிய பாட்டு. தேவா போட்ட கானா மாதிரி இருக்கு. இத பாடியதும் சிம்பு தான்.

அடி ஊட்டலக்கடி ஜின்னு
நீ உருட்டி எடுத்த பன்’ன்னு
அடி எதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒண்ணு


தமிழ் என்ற நான்

இது ஹீரோ புகழ் பாடும் ஒரு டிபிக்கல் சிம்புதனமான சில்லரைத்தனமான பாட்டு. தயவுசெய்து கேட்காமல் தவிர்க்கவும்.

பாட்ட கேட்கும் போதே, படம் முழுக்க சிம்புவோட தலையீடு இருக்கும்னுதான் தோணுது. சிம்பு, சிலம்பரசன்னு பாடல் வரி எங்கும் இருக்கு. இதையெல்லாம், தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில், படத்தோட டைரக்டரும், இசையமைப்பாளரும் சிம்புவுக்கு 'ஆமாஞ்சாமி' போட்ட மாதிரி தான் இருக்கு.

Wednesday, November 12, 2008

விவேகானந்தரும் பெரியாரும்

விவேகானந்தரையும், பெரியாரையும் இணைத்து ஒப்பிட்டு ஒரே பதிவில் எழுத வேண்டியதற்கான காரணம், நான் இருவரை பற்றியும் ஒரே நாளில் ஒரு பயணத்தின் போது படித்தது மட்டுமே.

வசதியான வீட்டில் பிறந்தவர்கள் இருவரும். 1863 இல் கல்கத்தாவில் நரேந்திரனாக பிறந்தவர், விவேகானந்தர். அதேபோல், 1879 இல் ஈரோட்டில் பிறந்தவர், பிற்காலத்தில் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ. ராமசாமி. அவரவர் குடும்பங்களில் இருந்து சமுதாயத்துக்காக சேவை செய்ய முதன்முறையாக வந்தவர்கள் இருவரும்தான்.

இருவருமே சிறுவயதில் கடவுளை பற்றிய கேள்விகளை கேட்டுள்ளார்கள். பெரியார், காசியில் துறவியாக திரிந்து, பின்பு கடவுள் பற்றிய தன் புரிதலை பிடிவாதமாக பின்பற்றி, கடவுளை மறுத்து, போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். விவேகானந்தரும் சிறு வயதில் கடவுள் பற்றிய கேள்விகளை கேட்டு, மூட நம்பிக்கைகளை எதிர்த்து வந்த பிரம்ம சமாஜத்தில் ஆர்வம் காட்டி, பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அன்பின் காரணமாக ஆன்மிக வழியில் தீவிரமாக ஈடுப்பட்டார்.

எந்நிலையிலும் தங்கள் கொள்கையை விட்டு கொடுக்காமல் வாழ்ந்தவர்கள் இவர்கள். நாடு பஞ்சத்தால் வாடி கொண்டிருந்த போது, சிலர் பசுக்களை காக்க நன்கொடை கேட்டு விவேகானந்தரிடம் வந்தார்கள். அவர்களிடம், பட்டினியில் வாடும் மக்களை பற்றி விவேகானந்தர் கேட்க, அதற்கு அவர்கள், அது கர்ம பலன் என்றும் அது தங்கள் கடமை இல்லை என்றும் கூறியதை கேட்டு கோபத்தில் "சக மனிதர்களை பற்றி கவலைப்படாமல் நன்கொடை வசூலிக்கும் உங்களுக்கு பசுக்களை பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?" என்று திருப்பியனுப்பினார்.

ஒருமுறை, பெரியாரின் கடவுள் மறுப்பு பேச்சால் கோபமடைந்த சிலர், மறைந்திருந்து அவர் மேல் ஒரு செருப்பை எறிந்தனர். செருப்பை எடுத்த பெரியார், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுளை நம்புபவன் முட்டாள்" என்று கூற, மேலும் கோபமடைந்த அவர்கள் மற்றொரு செருப்பையும் எறிந்தனர். "நல்ல ஜோடி செருப்பு" என்று அதையும் எடுத்து கொண்டு சென்றார் பெரியார்.

வெளிநாடுகளில் இந்தியா, இந்தியர்கள் பற்றி உயர்வாக எண்ண செய்தவர்கள் இவர்கள். நம் நாடு பற்றிய அவர்களின் நினைப்பை மாற்றியமைத்து, நமது நாட்டின் பெருமையை உயர செய்தார்கள். விவேகானந்தர் அவரின் புகழ் பெற்ற சிகாகோ மாநாட்டு சொற்பொழிவில் இந்தியா பற்றியும் இந்து மதம் பற்றியும் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கேட்போரை சிந்திக்க வைத்தது. பெரியார் இங்கிலாந்தில் ஆளும் தொழிற்கட்சியின் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்து பேசிய பேச்சும், அதற்கான துணிச்சலும், அம்மக்களை ஆச்சர்யப்பட வைத்தது. அதுபோலவே, அவரின் ரஷ்ய பயணமும்.

இருவரும் மற்றவர்களிடம் சிறப்பாக வாதம் செய்யும் திறமையை பெற்றிருந்தனர். ஒருமுறை ஒரு மன்னர் விவேகானந்தரிடம் உருவ வழிபாடு பற்றி மோசமாக விமர்சனம் செய்ய, மன்னரின் திவானிடம் சுவரில் மாட்டப்பட்டிருந்த மன்னரின் ஓவியத்தை எடுத்து வந்து அதன் மீது துப்ப சொன்னார். அதற்கு அவர் தயங்க, "எப்படி அது ஓவியம் என்றாலும் மன்னரை நினைவு படுத்துகிறதோ, அதுபோல் கற்களை மக்கள் கடவுளாக பார்த்து வழிப்படுகிறார்கள்" என்றார். பெரியாரிடன், ஒரு கூட்டத்தில் கடவுள் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர், "கடவுள் உங்கள் முன்னால் தோன்றினால் என்ன சொல்லுவீங்க?" என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில், "கடவுள் இருக்கார்ன்னு சொல்லிடுவேன்"ன்னார்.


வயதின் காரணமாகவும் உடல் உபாதைகளின் காரணமாகவும் பெரியார் 95 வயதில் இறந்தார். தொடர் பயணங்களினாலும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்த விவேகானந்தர் தனது 38 ஆம் வயதில் இறந்தார்.

தமிழகத்தில் பெரியார் முக்கியமாக எதிர்த்தது சாதியை. இன்று அவர் வழியில் பகுத்தறிவு பேசுபவர்கள் ஊக்குவிப்பது, சாதி அரசியலைத்தான். அதேப்போல், விவேகானந்தர் வலியுறுத்தியது இந்து மதத்தின் அமைதியையும், சகிப்புத்தன்மையையும். ஆனால், இன்று இந்து மதத்தின் சாதுக்கள் தலையை வெட்டி கொண்டு வர சொல்கிறார்கள்.

ஏழைகளுக்கு செய்யும் உதவிகள் மூலம் கடவுளுக்கு சேவை செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்தவர் விவேகானந்தர். கடவுள் பக்தியை விட மனிதாபிமானம் தான் முக்கியம் என்ற சொல்படி வாழ்ந்தவர் பெரியார்.

விவேகானந்தரின் எண்ணங்கள், பகுத்தறிவுவாதிகளின் பார்வையோடு ஒத்து போவது. ஆழமாக பார்த்தால், விவேகானந்தர் - பெரியார் இருவரின் கொள்கைகளுமே ஒரே திசையை நோக்கியதுதான் என்று நான் சொல்லவில்லை, சொல்லியது கலைஞர் கருணாநிதி.

Friday, November 7, 2008

கமல் சொல்லும் வெற்றியின் ரகசியம்

கமல் தன் வெற்றியின் ரகசியம் என்ன என்று தன் பார்வையில் ஒரு பேட்டியில் முன்பு சொன்னது இது.

"உலகத்தைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள முடியாத என்னுடைய குழந்தைப் பருவத்தில் ஏவி.எம். நிறுவனத்தினால், அதிர்ஷ்டவசமாகக் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகம் செய்யப்பட்டேன்.

என்னுடைய முதல் படம் வெளியானவுடன் மற்றவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை, புகழ் எல்லாவற்றையும்விட எனக்கு அதிகமாகவே கிடைக்க ஆரம்பித்தது.

குறிப்பாக என்னுடைய வயதுடையவர்கள் எல்லோரும் என்னை ஏதோ கடவுள் அவதாரமாக நினைத்துக்கொண்டு நேசிக்கத் தொடங்கினார்கள்.

மற்றவர்களின் பாராட்டுகளும், எனக்கு ஊக்கத்தைக் கொடுத்த அவர்கள் வார்த்தைகளுமே என்னை ஒரு நடிகனாகவே நான் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற ஆசை விதைகளை, அன்று எனது இளம் நெஞ்சில் ஊன்றியது.

இன்று எல்லா மொழிகளிலும் நடித்து ஒரு பெரிய நடிகனாக நான் மாறி நிற்பதற்குக் காரணம், அன்று எனக்குள் எடுத்துக்கொண்ட சபதம்தான். `பெரிய நடிகனாக வேண்டும்' என்ற ஒரே லட்சியத்துடன் எனது ஒவ்வொரு பொழுதுகளும் புலர்ந்தன.

இவ்வளவு ஆண்டுகளை நான் சினிமா உலகிலேயே செலவழித்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது இதயம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் வழிந்தோடுகிறது.

என்னுடைய துரதிர்ஷ்டம் நான் யார் யாரை நண்பர்கள் என்று நினைத்துப் பழக ஆரம்பித்தேனோ அவர்கள் எல்லோரும் எனக்கு எதிரியாகவே மாறியது.

ஆனாலும் எந்த இடத்தை எட்டிப் பிடிக்க நினைத்தேனோ, அந்த இடத்தில் இன்று நான் இருக்கிறேன் என்பதுதான் சந்தோஷமான செய்தி.

திடீரென்று இன்று நான் மறைந்தாலும் `கமல்' எனும் ஒரு கலைஞன் திரைப்பட உலகில் வாழ்ந்தான் என்கிற பெயர் எனக்கிருக்கும்.

ஒரு நடிகனாக மட்டுமே என்னை நான் வளர்த்துக் கொள்ள நினைத்திருந்தால் எனது வரலாறும் எப்போதோ மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் உதவி இயக்குனராக, நடனப் பயிற்சியாளராக, கதை இலாகாவில் ஆலோசகராக இப்படி ஒரு திரைப்படத்திற்கான அத்தனை துறைகளிலும் என்னை நான் ஆழமாக வளர்த்துக் கொண்டேன்.

இதற்குக் காரணம் ஒரு துறையில் இல்லாவிட்டாலும், இன்னும் ஒரு துறையில் திரைப்பட உலகிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

நான் செல்கின்ற ஒவ்வொரு இடத்திலேயும் போட்டியைச் சந்தித்திருக்கிறேன். இப்படிப்பட்ட போட்டிகள் என்னையும், என் திறமையையும் இன்றளவும் வளர்த்து வருகிறது.

வெளிப்படையாக சொல்லப் போனால் ஒரு "ராஜபார்வை''யில் நான் நடித்தது போலவோ, ஒரு "சலங்கை ஒலி''யில் நான் நடித்தது போலவோ, ஒரு "ஏக் துஜே கேலியே''வில் நான் நடித்தது போலவோ, ஒரு "அபூர்வ சகோதரர்களி''ல் அப்புவாக நடித்தது போலவோ, ஒரு "அவ்வை சண்முகி''யில் நடித்தது போலவோ, ஒரு "இந்தியனி''ல் நான் நடித்தது போலவோ வேறு யாராலும் நடிக்க முடியாது என்பது நான் ஏற்படுத்திய சாதனைதான்.

எந்த கேரக்டரிலும் கமலால் நடிக்க முடியும் என்று இன்று நான் பெயர் எடுத்திருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் எந்தவிதமான சிபாரிசும் இல்லாமல் என்னுடைய திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து நடித்திருக்கும் நடிப்புகள்தான்.

எனது வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் நான் கதைகளையும், அதில் வரும் கதாபாத்திரங்களையும் பற்றி நன்றாக அலசிப் பார்க்கத் தெரிந்தவன்.

பேனர் என்பதை எப்போதும் இரண்டாம் பட்சமாக மாற்றி கதை என்ன... கேரக்டர் என்ன... என்பதை மட்டுமே தெரிந்து கொள்வேன்.

அத்துடன் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த நாளிலிருந்தே நான் கற்றுக்கொண்டு வந்தது, மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்யவேண்டும் என்பதைத்தான்.

செய்வதைத் திறமையுடன் செய்து வருவதால், இன்று எனக்கென்று ஒரு இமேஜூம், குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறார்கள்.

ஒரு துறையில் வெற்றியடைய வேண்டும் என்றால், நமது முழு கவனத்தையும் அதே துறையில் செலுத்தினால் போதும் என்பார்கள். நானும் அப்படித்தான். நான் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும், பல நாட்கள் அந்த அந்தப் பாத்திரங்களுடன் நான் பழகி செய்தவைதான்.

எந்த எந்த கண்ணோட்டத்துடன் என்னைப் பார்க்க விரும்புகிறார்களோ, அந்தக் கண்ணோட்டத்தில் காட்சி தருவதையே நான் பெரிதும் விரும்பினேன்.

பெரும்பாலும் எனக்கு "டூப்" போட்டுக் கொள்வதை நான் வெறுக்கிறேன். ஒரு இளைஞனின் முழுத்திறமையும் வெளிப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு கட்டத்திலும் அவனது திறமை பளிச்சிட வேண்டும் என்று நினைப்பவன் நான்.

என்னுடைய ஒன்றிரண்டு படங்கள் தோல்வியடைகிறது என்றால் ஒன்று முழு கவனத்தையும் அதில் நான் செலுத்தியிருக்க மாட்டேன், இல்லையென்றால் இயக்குனர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு செய்தவையாக இருக்கும்.

இவையெல்லாம் மீறி நான் வெற்றி பெற்று வருகிறேன் என்றால் அதற்குக் காரணம், மற்றவர்கள் போல் நான் மாறிவிடவேண்டும் என்ற எண்ணமல்ல. நான் நானாகவே இருந்து கொண்டு, எல்லாவற்றிலும் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணமும், எல்லா பாத்திரங்களுக்குள்ளும் நான் இருக்க வேண்டும் என்ற துடிப்புடன், நான் எடுத்துவரும் முயற்சிகளும்தான்.

இத்தனை ஆண்டு காலமும் நான் இந்தத் துறையில் இருந்து வருவதற்கு இவைகளே உதவியாக இருந்து வருகின்றன."

இது கமலுக்கும் சினிமாவும் மட்டும் தொடர்புடைய வெற்றி ரகசியம் இல்லை. ஒவ்வொருவருமே அவரவர் துறையில் இதுப்போல் இருந்தால், அனைவருக்குமே வாழ்க்கையில் வெற்றி நிச்சயமே!

இன்று பிறந்த நாள் காணும் உலகநாயகனுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Sunday, November 2, 2008

ரஜினிதான் டாப்

லயோலா கல்லூரி கருத்து கணிப்பு வந்திருந்த போது, விஜய் ரஜினிக்கு முன்பு இருக்கும் ரிசல்ட்டை கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒரு ஓட்டெடுப்பு வைத்திருந்தேன். அது முடிந்து ரொம்ப நாள் ஆச்சு. சரி. அந்த ஓட்டெடுப்பை பக்கத்தில் இருந்து நீக்கும் முன்பு, ரிசல்ட் சொல்லிடலாம்னு இந்த பதிவு.

இது தான் ரிசல்ட்.



ஒட்டு போட்டது 167 பேர்தான். இருந்தாலும், விஜய்தான் கடைசி. ரஜினி, கமல் முன்னணியில் இருப்பது விசேஷமில்லை. இதில், அஜித் மூன்றாவது இருப்பது ஹைலைட்.


இதனால், நான் சொல்லவருவது என்னவென்றால்,

தமிழ்மக்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

இத வச்சி, அத எப்படி சொல்ல முடியும்னு கேப்பாங்க. அப்படி சொல்ல முடியாதென்றால்,

அட்லிஸ்ட், இணைய தளங்களில் உலாவுபவர்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

அதுவும், இல்லையென்றால்,

குறைந்தபட்சம், தமிழ் பதிவு படிப்பவர்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

சரி,போகட்டும்.

என் வலைப்பதிவிற்கு வந்தவர்களில், அதிகமானோர்க்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

கலைஞர் குடும்ப வாரிசின் ரீமிக்ஸ் ரணகளம்

மெலடி பாடல்கள் கேட்பது நன்றாக இருந்தாலும், அவ்வப்போது குத்து பாடல்கள் கேட்பது ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பது உண்மை. இப்ப, நான் அடிக்கடி கேட்டு கொண்டு இருக்கும் ரெண்டு குத்து பாடலும், மலேசியா வாசுதேவன் முன்னாடி பாடிய இரு பாடல்களின் ரீமிக்ஸ். இப்ப, இந்த ரெண்டு பாடல்களை பாடியவர்களும், ரெகுலர் பாடகர்கள் இல்லை.

ஒண்ணு, பாக்யராஜின் முதல் இயக்கமான “சுவர் இல்லா சித்திரங்கள்” படத்தில் வரும் “காதல் வைபோகமே” பாடல். கங்கை அமரன் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடலை, “பெருமாள்” படத்தில் இப்ப ரீமிக்ஸ் பண்ணியிருப்பது ஸ்ரீகாந்த் தேவா. குத்து ஸ்பெஷலிஷ்ட். பாடியிருப்பது கலைஞரின் பேரன், அறிவுநிதி. நிஜமாகவே, நன்றாக பாடியுள்ளார். பழைய பாடல், ஒரு மெலடி டூயட். இப்ப, டியுனை அப்படியே வைத்துக்கொண்டு, பின்னணி இசையில் மட்டும் குத்து குத்து என்று குத்தி இருக்கிறார், ஜுனியர் தேவா. பொருத்தமாகத்தான் வந்திருக்கிறது. பெண் குரலான ஜானகியின் குரலை அப்படியே வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நன்றாக இருக்கிறது. ஆனால், இதை திரையில் பாட போவது சுந்தர்.சி. ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. பரவாயில்லை. நமிதா இருக்கிறார்.

இரண்டாவது பாடல், "என்னை தெரியுமா" என்ற புதுப் படத்தில் வரும் "தண்ணி கருத்திருச்சி" ரீமிக்ஸ். ஒரிஜினல் பாடல் இடம்பெற்ற படம், கமலின் "இளமை ஊஞ்சலாடுகிறது". மலேசியா வாசுதேவன் பாடிய அந்த பாடலுக்கு இசையைமைத்தவர் இசைஞானி. இப்ப, ரீமிக்ஸ் பண்ணியிருப்பவர், அச்சு என்கிற புது இசையமைப்பாளர். பாடியவர்கள், சிம்புவும், வினிதா அஜித்தும்."டான் டட்டான் டட்டாவும்" என்று டி.ஆர். பாணி வாய் இசையும், வேகமான பின்னணி டிரம்ஸ் இசையும் சேர்ந்து பட்டையை கிளப்பி இருக்கிறது.

சில நல்ல பழைய பாடல்களை அவ்வளவாக கேட்டு இருக்க மாட்டோம். ஒன்று, அதன் இசை வடிவம், நம்மிடன் இல்லாமல் இருக்கும். அல்லது, இருக்கும் பாடலும், புது பாடல்களில் உள்ள தரம் இல்லாமல் இருக்கும். புது பாடல்களை, துல்லியமான இசையில் கேட்டு விட்டு, பழைய பாடல்களை கேட்கும் போது, கேட்பதில் ஆர்வம் இல்லாமல் போகும். அது போன்ற நேரங்களில், இதுபோன்ற ரீமிக்ஸ் பாடல்களை கேட்க நன்றாக இருக்கும். ஆனால் அதேசமயத்தில், "ராஜா ராஜாதி ராஜா" போன்ற மோசமான ரீமிக்ஸ் பாடல்களை கேட்கும் போது, எரிச்சலாகத்தான் இருக்கும். சமையலில் ரெடி மிக்ஸ் பயன்படுத்துவது போல், இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் பண்ணி கொண்டிருந்தால் மோசமாகத்தான் வரும்.

மேற்கூறிய இரு பாடல்களிலும் டியுனை மாற்றாமல், டெம்போவை கூட்டி ரசிக்கும் வண்ணம் பண்ணியிருக்கிறார்கள். ஆனாலும், அளவுக்கு அதிகமாக கேட்டால் ரீமிக்ஸும், போர் அடிக்க வைத்து விடும்.