Friday, September 4, 2009

இந்திய அரசியலில் ஆய்த எழுத்து

ஆந்திராவில் கடந்த இரு நாட்களில் நடந்த சம்பவம் சினிமாவில் வந்திருந்தால், நம்பாமல் ‘லாஜிக்கே இல்லை’ என்று சொல்லியிருப்போம். ஆனால், நிஜத்திலேயே அப்படி நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் சென்ற ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டியை காணாமல் தேடி, 24 மணி நேரங்களுக்கு பிறகு உடலை கண்டுபிடித்திருக்கிறார். மக்களுக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்துள்ள முதல்வருக்கு நேர்ந்துள்ள கதி, வருந்த வைக்கிறது.

முதல்வருக்கே இந்த கதியா என்று சிலர் கேட்கிறார்கள். சாதாரண மக்களுக்கு பஸ்ஸே கிடைப்பதில்லை என்பதால், இப்படியெல்லாம் நேர போவதில்லை. மக்களுக்கு, இந்தியாவின் தேடுதல் வேட்டையின் திறன், இந்நிகழ்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகத்திற்கும் சேர்த்து.

ஆங்கில சேனல்கள் இரு நாட்கள் தொடர்ச்சியாக இதை கவர் செய்தார்கள். இன்னும் வரும் நாட்களிலும் விஐபிகளின் வாகன சோதனை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பி இதை தொடர்வார்கள். என்.டி.டி.வியில் காணாமல் போய் எவ்வளவு நேரம் ஆகியுள்ளது என்று ஒரு ஓடும் கடிகாரத்தை திரையின் ஓரத்தில் வைத்திருந்தார்கள். எனக்கு தெரிந்து நிறைய ஆந்திர மக்கள், இரவு முழுவதும் கண் முழித்து தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் கட்சி பாகுபாடு இல்லாமல், தங்கள் மாநில முதல்வர் மேல் அக்கறை கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம், இணையங்களில், பின்னூட்டங்களில், சிலர் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், அரசியல்வாதி என்ற ஒரே காரணத்தில் மோசமான கமெண்ட்களை வீசிக்கொண்டிருந்தார்கள்.

இன்று தமிழ்நாடு, கர்நாடக போன்ற பிற மாநிலங்களிலும் அரசு விடுமுறை விட்டிருக்கிறார்கள். தமிழ் சேனல்களில், இதற்கும் சிறப்பு நிகழ்ச்சிக்களை போட்டு விட கூடாதென்று வேண்டி கொள்கிறேன்.

---

இனி தலைப்பு மேட்டர்...

அரசியலுக்கு மாணவர்கள் வர வேண்டும். வந்தாத்தான் நாடு முன்னேறும். அப்படின்னு எப்பவும் ஒரு பேச்சு இருக்கும். ஆய்த எழுத்து படத்தில் வருவது போல், சட்டசபை முழுக்க இளைஞர்கள் இருந்தா, எப்படி இருக்கும்’ங்கிறது கனவு மட்டும் இல்லை. நிஜத்தில் அப்படி நடந்திருக்கிறது. அதுவும், இந்தியாவில்.

---

பங்களாதேஷ் உருவானபோது நடந்த போரில், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு, அஸ்ஸாமுக்கு வந்தனர். வந்தவர்கள், போர் முடிந்தபின்பும், சொந்த ஊர் திரும்பாமல் இங்கேயே தங்கி விட, பின்னால் இவர்களால் கலாச்சார ரீதியாக, சமூக ரீதியாக, முக்கியமாக பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு விஷயத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக, அஸ்ஸாமில் ஒரு கடுப்பு நிலவி வந்தது.

அகதிகளை அவர்கள் ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சொல்லி அஸ்ஸாம் மாநிலம் முழுக்க போராட்டம் வெடித்தது. அதில், தீவிரமாக இருந்தவர்கள் அம்மாநில மாணவர்கள். அமைதியாக நடந்த போராட்டம் என்றாலும், கண்ணில் பட்ட வங்க மக்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் உண்டு. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், பள்ளி, கல்லூரிகள் மூடி கிடந்தன.




நிலைமை கட்டுக்கடங்காமல் போக, மாநிலத்தை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வந்திறங்கியது.

1983 ஆம் ஆண்டு. சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டும். ”அகதிகளை அனுப்பி விட்டு, தேர்தலை நடத்துங்கள்” என்றது அஸ்ஸாம் மாணவர் அமைப்பு. பாகிஸ்தானை பிரித்து வங்காளம் உருவாக காரணமாக இருந்த இந்திரா காந்தி, இந்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. விடாப்பிடியாக தேர்தலை நடத்த முயன்றார்.

”எவனாவது நின்னீங்க” என்ற மாணவர்களது எச்சரிக்கைக்கு பயந்து, காங்கிரஸைத் தவிர எந்த கட்சியும் தேர்தலில் நிற்கவில்லை. ஒரு சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகள் நின்றன. மற்ற இடத்தில், காங்கிரஸை எதிர்த்து நின்றது சுயேட்சைகளே.

தேர்தலில் 32 சதவித ஓட்டுக்கள்தான் பதிவாகியிருந்தது. பல இடங்களில், சுயேட்சை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. தரம்பூர் என்ற தொகுதியில் மொத்தம் பதிவான ஓட்டுகள் - 267. 266 ஓட்டுகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அங்கு வெற்றி பெற்றார். அந்த இன்னொரு ஓட்டை பெற்றவர், விஜயகாந்த் போல் இரண்டாம் இடத்தை சுலபமாக பெற்றார்.

விழுந்த வரைக்கும் பெற்ற ஓட்டுக்களைப் வைத்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மாணவர்களது போராட்டம் இன்னும் தீவிரமானது.

அதற்கு பிறகு, இந்திரா சுட்டு கொல்லப்பட, பிரதமரான ராஜீவ், அஸ்ஸாம் விஷயத்தில் கொஞ்சம் இறங்கி வந்தார். 10 லட்சம் ஓட்டுரிமை, 10 ஆண்டுகளுக்கு பறிக்கப்பட்டது. ஆட்சியை முடித்துக்கொண்டு, மீண்டும் தேர்தல் நடத்த பிரதமர் முன்வந்தார்.

85இல் தேர்தல் நடத்தப்பட்டது. மாணவர் இயக்கம், அஸாம் கண பரிஷத் ஆக உருவெடுத்து, தேர்தலில் குதித்தது. 126 தொகுதிகளில், 67 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. கட்சியின் தலைவராக இருந்த பிரபுல்ல குமார் மொகந்தா, முதல்வராக பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 31. நாட்டின் இளம் முதல்வர் என்ற பெருமையை பெற்றார். மற்ற சட்டசபை உறுப்பினர்கள், அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். திருமணம் ஆகாதவர்கள். முதல்வர் மட்டும் தன்னுடன் பயின்ற மாணவியை திருமணம் செய்திருந்தார். மாணவர் புரட்சி, இப்படி ஆட்சி வரை வந்தது - இந்தியாவின் முக்கிய நிகழ்வாகும்.

அதற்காக ஆட்சியில் பாலும் தேனும் ஓடியதென்று சொல்ல முடியாது. அதற்கடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடுங்கி கொள்ள, பின்னர் நடந்த தேர்தலில் அஸ்ஸாம் கண பரிஷத்தே மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இம்முறை முதல்வர் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். ஊழல், ரகசிய கொலைகள், இன்னொரு பெண்ணுடன் ரகசிய திருமணம் என்று பல விஷயங்களில் மாட்டி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அப்புறம் என்ன? இன்னொரு கட்சியின் பிறப்பு, வேறு கூட்டணி, கடைசியில் தாய் கட்சியுடன் மீண்டும் இணைப்பு.

அரசியலில்ல இதெல்லாம் சகஜமப்பா!

நீதி - எல்லோருக்கும் தெரிந்ததுதான். ‘அரசியல் ஒரு சாக்கடை. யார் இறங்கினாலும், சட்டையில இருந்து கோவணம் வரைக்கும் கலிஜ்ஜாகும்.’

.

8 comments:

மகேந்திரன் said...

மிக நுண்ணியத் தகவல்கள். அருமை சரவணா..
வழக்கம் போல இறுதியில் உங்கள் பன்ச் சூப்பர்..

sarath said...

படித்தவர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து. அவர்களுக்கு சட்டத்தின் எல்லா ஓட்டைகளும் தெளிவாக தெரிந்து விடும். மனிதம் உள்ள தலைவர்கள் தான் நமக்கு தேவை.

எல்லோரும் ஓர் நிறை! என்ற காலம் எப்போது வருமோ?

நரேஷ் said...

மகேந்திரன் சொன்னது போல் மிக நுண்ணிய தகவல்கள்தான்...

இந்தியா ஜனநாயக நாடு என்பதெல்லாம் ஏட்டளவில்தான்..பெரும்பாலான இடங்களில் அதைத்தாண்டி நாம் பல கோல்மால்களை செய்திருக்கிறோம்...

அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இந்தியா ஜனநாயக நாடு, அனைத்து மக்களுக்கும் சம உரிமை போன்ற வார்த்தைகளைச் சொன்னால் கல்லால் அடித்தே கொன்றுவிடுவார்கள்......

அரசியலில் என்னதான் சுத்தமாக நாம் இருக்க முயன்றாலும், நாம்மைச் சுற்றியிருக்கும் சமூகமும், சாக்கடையில் ஊறிய மற்ற கட்சிகளாலும் நம் நிலை மாறித்தான் ஆகும்....

நரேஷ் said...

லூசுப்பசங்க, அந்த மனுசன் செத்தா, அவருக்காக அனுதாபப் படலாம், அவரு பண்ண நல்லதை பெஞ்ச் மார்க்கா வெச்சு நம்ம ஊருக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம், அவரு செஞ்ச நல்லதை மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம்...அதெல்லாம் இல்லாம லீவு உடுறது மரியாதை செய்யுறதுன்னு யாரு இவனுங்களுக்கு சொன்னதுன்னு தெரியலியே!!!

அவனவன் ஜிபிஎஸ் சிஸ்டம் அது இதுன்னு கலக்கிட்டு இருக்காங்க...இந்த லட்சணத்துல ஒரு மாநிலத்தோட முதலமைச்சருக்கு கூட அந்த வசதி கொண்டு வர முடியாத நிலைல, இந்தியா வல்லரசாகிறதுங்கிற விவாதம்லா தேவையா???

சரவணகுமரன் said...

நன்றி மகேந்திரன்...

தகவலுக்கு ‘கட்சிகள் உருவான கதை’ என்ற புத்தகமும், கூகிளாண்டவரும் உதவினார்கள்.

சரவணகுமரன் said...

உங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சரத்

சரவணகுமரன் said...

//அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இந்தியா ஜனநாயக நாடு, அனைத்து மக்களுக்கும் சம உரிமை போன்ற வார்த்தைகளைச் சொன்னால் கல்லால் அடித்தே கொன்றுவிடுவார்கள்//

ஆமாம் நரேஷ்... தேசியம் எல்லாம் பிற பகுதிகளில் தான்...

//அரசியலில் என்னதான் சுத்தமாக நாம் இருக்க முயன்றாலும், நாம்மைச் சுற்றியிருக்கும் சமூகமும், சாக்கடையில் ஊறிய மற்ற கட்சிகளாலும் நம் நிலை மாறித்தான் ஆகும்//

அப்படித்தான் போல?

சரவணகுமரன் said...

//இந்த லட்சணத்துல ஒரு மாநிலத்தோட முதலமைச்சருக்கு கூட அந்த வசதி கொண்டு வர முடியாத நிலை//

அவ்வப்போது இம்மாதிரி ஏதேனும் சம்பவம் நடந்து, உண்மை நிலையை காட்டி கொண்டிருக்கிறது