Thursday, December 29, 2011

2011யும் திரைப்படங்களும்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெளிவரும் எல்லா படங்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு சமயம், பார்க்க வேண்டும் என்று நினைத்த படங்களையும், பரிந்துரைக்கப்பட்ட படங்களையும் தேடி சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். தற்சமயமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றாலும், திரையரங்கு சென்று பார்ப்பது என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப அளவில். இங்கு திரையிடப்படும் படங்கள் மிகவும் குறைவு. அதிலும் சில ஆறிப்போய் வரும்.



திரையரங்கு சென்று பார்த்தால் தான், படம் பார்த்ததாக ஒரு உணர்வு. இணையத்தில் பார்ப்பது தவறு என்றாலும், வேறு வழி இல்லாமல் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இது தவறு என்பதாலும், இப்படி பார்த்துவிட்டு படத்தை பற்றி எழுதுவதற்கு எந்த தகுதியும் கிடையாது என்பதாலும், படங்கள் பற்றிய பதிவுகளை பெரும்பாலும் இந்த வருடம் எழுதவில்லை. (பெரும்பாலும் எழுதுவதே இல்லை என்பதும் சரிதான்.)

---

வருடதொடக்கத்தில் இந்தியாவில் இருக்கும் போது, பொங்கலுக்கு வந்த எல்லாப்படங்களையும் பார்த்தேன். ஆடுகளம், சிறுத்தை, காவலன். சிலக்காரணங்களால் இந்த படங்களை இருமுறை பார்க்க வேண்டி இருந்தது.

அதன்பிறகு டென்வர் வந்தப்பிறகு, இங்கு பார்த்த முதல் திரைப்படம் - அவன் இவன்.

தெய்வத்திருமகள் மிகவும் தாமதமாக வந்ததால், திரையரங்கு சென்று பார்க்கவில்லை.

அதன்பிறகு, மங்காத்தா. தீபாவளிக்கு ஏழாம் அறிவு.

நடுவில் இந்தியா சென்றிருந்தபோது, முதல் சமயம் ‘எங்கேயும் எப்போதும்’ படமும் தற்சமயம் ‘ராஜபாட்டை’யும் பார்த்தேன். எ.எ. பார்த்தது லேட் என்பதால் எழுதவில்லை. ராஜபாட்டை? ம்க்கும்! (ஆனாலும் சுசிந்திரன் மதனிடம் ஓப்பனாக தான் காம்பரமைஸ் செய்தது பற்றி பேசியது பிடித்திருந்தது.)

----

நான் இந்தியாவில் இருந்தவரைக்கும் இணையத்திலோ, டிவிடியிலயோ உக்கார்ந்து படங்களைப் பார்த்ததில்லை. தற்சமயம், வேறு வழியில்லாமல் பார்த்தாலும், பல அசவுகரியங்கள் இதில் இருக்கிறது. மட்டமான க்வாலிட்டி, சில சமயம் தொடர்ச்சியாக பார்க்க இயலாமல் போவது, சில நல்ல லோ-பட்ஜெட் படங்கள் காணக்கிடைக்காதது என்று தொல்லைகள் பல. இப்படி பார்க்கும் போது, சரியான மூடும் செட் ஆகாது. இப்படி பார்ப்பதையெல்லாம் கணக்கிலே எடுத்துக்கொள்ள முடியாது.

மொத்தத்தில் படங்கள் விஷயத்தில், இந்த வருடம் எனக்கு இழப்பே. (நான் படம் பார்த்துக்கொண்டிருந்த தியேட்டர்களுக்கும் தான்!)

.

கேமரா ஜூம்

ஒருமுறை இங்கிருக்கும் ராக்கி மலைத்தொடருக்கு சென்றிருந்த போது, டிரைவர் போகும்வழியில் பஸ்ஸை நிறுத்தி எல்லோரையும் கீழே இறக்கிறார். அங்கு தூரத்தில் தெரிந்த காட்டு மான்களை காட்டினார்.

உடன் வந்த பயணிகள் அனைவரும், அந்த மான்களுக்கு ஏதோ டைனோசர் லெவலுக்கு பில்டப் கொடுத்து பார்த்தார்கள். தூரத்தில் தெரிந்த அந்த மான்களை, போட்டோ வேறு எடுத்துக்கொண்டார்கள்.

நானும் முயற்சி செய்தேன். முடியவில்லை. நம்ம கேமராவுக்கு அந்தளவுக்கு திறமையில்லை. அப்போது முடிவு செய்துக்கொண்டேன். அடுத்தது, சூப்பர் ஜூம் கேமரா தான் வாங்க வேண்டும் என்று.

இந்த கேமரா நன்றாக இருக்க, அடுத்த கேமரா எப்போது வாங்குவோமோ? என்று நினைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன். நாம எப்போதும் தேய தேய ஒரு பொருளை தேய்ஞ்ச பிறகுதான் அடுத்தத வாங்குற ஆளு!!!

அந்த பயணத்தின் போதே, மனைவி பனியை கண்ட ஆர்வக்கோளாறில், ஒரு உருண்டைப்பிடித்து, ஆசையாக என் மீது எறிய, அது கேமராவில் பட்டு, கேமரா உயிரைவிட, என் ஆசை நிறைவேறியது. உயிர் விட்டது என்றால், ஒரேடியாக விடவில்லை. எடுக்கும் படங்களில் எல்லாம் குறுக்கே கோடுகள்.

அது தான் என்னுடைய முதல் கேமரா. ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் எடுத்து தள்ளிய கேமரா. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இன்னொரு கேமரா வாங்கும் வாய்ப்பு கிடைத்ததால், சமாதானம் ஆனேன்.

இதுதான் புது கேமரா வாங்குவதற்கான காரண காரியம் நிகழ்ந்த சம்பவம்.

இதையடுத்து, சமீபத்தில் Canon SX 40 வாங்கினேன். எதிர்பார்த்த விஷயம், பிடித்த விஷயம், இதிலுள்ள ஜூம் தான்.

சமீபத்தில் எடுத்த இந்த வீடியோ, இதை விளக்கும்.



யூ-ட்யூபில் இது போல் பல வீடியோக்கள் காணக்கிடைக்கிறது. நிலாவைக்கூட ஜூம் செய்து போட்டிருக்கிறார்கள். வடை சுட்ட பாட்டியைத்தான் தெரியவில்லை!

.

Wednesday, December 28, 2011

வாழ்வின் சிறந்த நாள்

சென்ற வாரத்தில், என் வாழ்வின் சிறந்த நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். சென்ற வாரம், எனக்கு மகள் பிறந்தாள்.



---

சிலர் உசுப்பேற்றிவிட, பலர் ஆச்சரியப்பார்வை பார்க்க, மனைவியின் பிரசவத்திற்கு இந்தியா பயணித்தேன். கிளம்பும் சமயம், ஒரு சோக செய்தி வந்து சேர, பயணம் குழப்பத்துடன் அமைந்தது. இந்தியா வந்து சேரவும், நிம்மதியான செய்தி வர, குழப்பம் பயணத்துடன் சேர்ந்து முடிவு பெற்றது.

---

சென்ற சமயம், இந்தியா வந்திருந்த போது, வீட்டினர் அனைவருக்கும் சில பல பொருட்கள் வாங்கி வந்ததால், இந்த முறை அது இல்லை. ஆனால், இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் அமெரிக்காவில் இருந்து சில பொருட்களையும், அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் இந்தியாவில் இருந்து சில பொருட்களையும் வாங்கி வர சொல்லியிருந்ததால், குருவியாகி போனேன்.

---

என் மகள் எனக்காக காத்திருந்தாள் போலும். அப்படித்தான் பலர் சொன்னார்கள். நான் சென்று ஒருநாள் கழித்து அவள் பிறந்தாள். பிரசவ அறைக்கு வெளியே காத்திருக்கும் போது, முன்பும் பின்பும் நடக்க தோன்றியது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். உள்ளே குழந்தை அழுகை சத்தம் கேட்டதும், அடக்க மாட்டாமல் கதவருகே வந்து நின்றுக்கொண்டேன்.

நர்ஸ் வெளியே வந்து குழந்தையை என் கையில் கொடுக்கும் போது, நான் அடைந்த உணர்வை சொல்ல எனக்கு தெரியவில்லை. தாயிற்கும், சேயிற்கும் எந்த குறையும் இல்லாமல் பிரசவம் நிகழ்ந்தது.

---

அந்த பகுதி குளிர் பிரதேசம் என்பதால், குழந்தையை எல்லா பக்கமும் துணியால் சுற்றி கையில் கொடுத்தார்கள். அதுதான் அங்குள்ள வழக்கமாம். குழந்தையை தூக்க வசதியாக இருந்தது. முதலில், என்ன இது, குழந்தை கையை காலை அசைக்க முடியாமல் இப்படி கட்டி வைத்திருக்கிறார்களே? என்று தோன்றியது. பிறகு, அது தான் அவளுக்கு வசதி, சுகம் என்று புரிந்தது.

---

என்னை மாதிரியா? அல்லது, என் மனைவி மாதிரியா? நாங்கள் கேட்காமலேயே குழந்தையை பார்க்க வந்திருந்த பலரும் தெளிவாக ஒரு தெளிவில்லாத பதிலை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ரெண்டு மூணு மாசம் ஆகணும் என்று முடிவில் ஒரு கருத்து தெரிவித்து சென்றார்கள்.

எனக்கென்னமோ என்னை போல் ஒரு சிந்தனைவாதியாக (!!!) வருவாள் போல் தெரிந்தது. விழித்திருக்கும் பெரும்பாலான நேரம், கண்களை உருட்டி கொண்டு, ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போலவே எங்காவது பார்த்துக்கொண்டிருக்கிறாள். :-)

---

”குமரனுக்கு மவா பொறந்திருக்கா.” “உன் மொவா என்ன சொல்றா?” என்பன போன்ற வார்த்தைகள் மனதிற்கு குளிர்ச்சியை கொடுத்தது.

---

ஒரு வாரம் எப்படி சென்றது என்று தெரியவில்லை. சுகமான நினைவுகளுடன் இங்கு திரும்பி இருக்கிறேன். அப்பாவான பிறகு, வேறு மாதிரி மாற வேண்டுமா என்று தெரியவில்லை. அதே போல் தான் இருக்கிறேன். என்னையறியாமலேயே மாறி விடுவேன் என்று நினைக்கிறேன்.

---

அடுத்து பெயர் தேடும் படலம் ஓடிக்கொண்டிருக்கிறது. பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட பெயராக இருக்க வேண்டும். இதில் எவ்வளவு கம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருக்கிறதோ? குழந்தை பிறக்கும் போதே, ஒரு பெயரை சொல்லிக்கொண்டு வந்தால், எவ்வளவு நல்லாயிருக்கும்?

---

குழந்தை வளர்ப்பில் இருக்கும் இனிமையையும், சவால்களையும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன். அவளிடம் இருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன், அவளின் வருகைக்காக.

.

Monday, December 12, 2011

கேமரா புதுசு

என்ன தான் போட்டோ எடுக்க, திறமை முக்கியம் என்றாலும், கேமரா சரியில்லாவிட்டால் அவ்வளவுதான். அது போல, குருட்டாம்போக்கில் எடுத்தாலும், சில கேமராவில் எடுக்கும் போது, புகைப்படங்கள் அழகாக தெரியும்.

சென்ற வாரம், புதிதாக வாங்கிய கேமராவை வைத்து, வீட்டிலிருந்து எடுத்த சில புகைப்படங்களைப் பார்க்கும் போது, அப்படி தான் தோன்றியது.













ஒரு வேளை, புது கேமரா மீதான பாசத்தால், எனக்கு தான் இந்த புகைப்படங்கள் அழகாக தெரிகிறதோ என்னவோ?

Wednesday, December 7, 2011

குளிரும் பஜ்ஜியும் - ஆட்டோபிக்‌ஷன் சிறுகதை



சிறிது தூரம் தான் வெளியில் நடக்க வேண்டியிருந்தாலும், குளிரில் உடல் ப்ரிஸ் ஆகிறது. இந்த குளிரில் சூடாக காபியும், மிளகா பஜ்ஜியும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நினைக்கவே உச்சந்தலையில் சுர்ரென்றது.




வீட்டுக்குள் நுழைந்ததும், பேக்கை கழட்டி வைத்து, கை காலையை அலம்பிவிட்டு, கிச்சனுக்கு சென்று, கீழ்கண்டவற்றை எடுத்தேன்.

ஒரு கப் கடலை மாவு
சிறிது அரிசி மாவு
சிறிது மைதா
கொஞ்சம் மிளகாய் பொடி
உப்பு
லைட்டா ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்

இவையனைத்தையும் தண்ணீர் விட்டு கலந்தேன்.



அடுப்பில் வாணலியில் எண்ணையை காய வைத்தாயிற்று.

ப்ரிட்ஜில் இருந்து இரண்டு மிளகாயும், கூடைக்குள் இருந்து ஒரு வெங்காயமும், ஒரு உருளைக்கிழங்கும் எடுத்து நறுக்கினேன்.



ஸ்லைஸாக நறுக்கி, கலந்து வைத்த மாவில் முக்கி, சூடான எண்ணெய்யில் போட்டேன்.



அடுப்பில் அது கிடைக்கும் வேளையில், சூடாக ஒரு காபி தயார். இந்த பக்கம், பஜ்ஜியும் ரெடி.



நேற்று இரவு வைத்த தேங்காய் சட்னி, ப்ரிட்ஜில் இருப்பது நினைவுக்கு வர, ஏதோ முன் ஜென்ம பிறப்பின் ரகசியத்தை அறிந்துக்கொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.



ஒரு கையில் சூடான காபி, இன்னொரு கையில் சட்னியில் முக்கிய பஜ்ஜி. ஹாட்!!!

இன்னும் நாலு க்ளைமாக்ஸ் இருக்கு. அப்புறம் சொல்றேன்.

---

அப்புறம் இத பாத்தீங்களா?

.

Tuesday, December 6, 2011

மதன் டாக்ஸ்

நேற்றைய பதிவில், பாக்யராஜ் ‘பேசலாம்’ என்று சொல்லிவிட்டு அவரே பேசிக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னேன். இன்று ஜெயா டிவியில் வந்த ‘மதன் டாக்ஸ்’ நிகழ்ச்சியை பார்த்தேன். டாக்ஸ் என்று இருந்தாலும், இவர் செல்வராகவனை அதிகம் பேசவிட்டார்.



செல்வராகவன் பேசியதில் சில,

”என்னால் மூன்று படங்களை, ஒரே நேரத்தில் எடுக்க முடியும்.”

”என் வாழ்க்கையே ஒரு குழப்பம். அமைதின்னா என்ன, சந்தோஷம்ன்னா என்ன? அப்படின்னு ரொம்ப சுத்தி தேடி, அலைஞ்சி திரிஞ்சு, நொந்து நூலான்னுந்துக்கப்புறம் பாத்தா, இங்க தான் பக்கத்துல இருக்கு.”

”நிம்மதியா இருக்கிறத, போர்’ன்னு நினைச்சுக்கிறோம்.”

”ஒழுக்கமாக இருப்பது தான், வாழ்க்கையில் நிம்மதி.”

”படத்தை ஒரு go'ல பாக்கணும். ப்ரேக்குக்கும், கதைக்கும் என்ன சம்பந்தம்?”

”இன்னைக்கு படத்தோட நீளம் 2:20 என்பதால், அதோடு நிறுத்தியிருக்கிறேன்.”

”எடிட்டிங் ரூம்ல படம் பார்த்து அழுதிருக்கிறேன்.”

”தனுஷ் மேலிருந்து விழுவதை ஆக்ஸிடெண்ட் என்றும் எடுத்துக்கொள்ளலாம், தற்கொலை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.”

”என் கதைய யாராச்சும் திருடுனாலும், என்னால ஒண்ணும் பண்ண முடியாது. வீட்ல உட்கார்ந்து அழ வேண்டியது தான். படத்துல காட்டுற மாதிரி நாங்க எல்லாம் ஹீரோ இல்ல, பயந்தாங்குளி தான்.”

”ஸ்கிரிப்ட்ல தனுஷ் அந்த போட்டோக்கிராபரை பீச்ல அடிக்கிற மாதிரி சீன் இருக்கு. ஆனா, என்னால அதை எடுக்க முடியல.”

”I don't want to give justification. I don't want to follow any rules.”

”கருத்து சொல்றதுக்கு எனக்கு எந்த தகுதியும் கிடையாது.”

”பாட்டி முகத்தில பார்த்த புன்னகைக்கும், முகத்தில விழுற இலைக்கும் ஒரே அர்த்தம் தான்.”

பாருங்க... பேசவிட்டா எவ்ளோ பேசுகிறார்?

மதனும் ”ஒரு விமர்சகர், இயக்குனருக்கு ஆலோசனை சொல்வது மோசமானது. இருந்தாலும் சொல்கிறேன்.”ன்னு சொல்லிவிட்டு, ஐடியா கொடுத்தார். செல்வராகவன் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. என் படம், அப்படித்தான் எடுப்பேன் என்பதுபோல் பேசினார். அதையும் முடிவில் மதன் பாராட்டினார்.

மதன் பேசுவதையும் சில நேரங்களில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. வேலாயுதம் விமர்சனத்தில் ராஜாவிடம் கேட்ட கேள்விகளில் சிலதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வாரம், இயக்குனர் சார்பாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் கதை, திரைக்கதை சம்பந்தமாக பதிலளித்தது கவர்ந்தது.

---

இந்த வாரம், மதன் சாப்ளின் பற்றி கூறிய ஒரு தகவல் சுவாரஸ்யமானது.

சாப்ளின் இறந்த பிறகு, அவர் உடலை சிலர் களவாடி, பிறகு அது கணடுபிடிக்கப்பட்டு, திரும்ப திருடப்படாதபடி புதைக்கப்பட்டது, சுவையான தகவல்.

.

Monday, December 5, 2011

வாங்க பாக்யராஜ் பத்தி பேசலாம்

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக பாக்யராஜ் படங்களை விமர்சனம் செய்யும் நிகழ்ச்சியாக ‘வாங்க சினிமா பத்தி பேசலாம்’ என்றொரு ப்ரோக்ராம் வருகிறது. சென்ற வாரம், வித்தகன். இந்த வாரம் - மயக்கம் என்ன.



நிகழ்ச்சியின் பெயராக ‘வாங்க சினிமா பத்தி பேசறேன்’ என்று வைத்திருக்கலாம் என்ற தோன்றும் அளவுக்கு பாக்யராஜ் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். பாக்யராஜ் நூறு வரிகள் பேசினார் என்றால் தனுஷும், செல்வராகவனும் சேர்ந்தே 10 வரிகள் தான் பேசியிருப்பார்கள்.

எனக்கு பாக்யராஜ் மேல் பெரும்மதிப்பு உண்டு. அவருடைய பழைய படங்கள் அப்படி. ரொம்ப பிடித்த படங்கள். டிவியில் எப்ப போட்டாலும் பார்க்கலாம். காமெடியையும், செண்டிமெண்டையும் கலந்து புத்திசாலித்தனமாக காட்சியமைப்பதில் ‘இந்தியாவின் நம்பர் 1’ திரைக்கதையாசிரியர் என்று புகழப்பட்டவர்.

ஆனால், இப்போது அவர் படங்களைப் பார்க்கும் போது, சில வசனங்கள் ரொம்ப பிற்போக்குத்தனமாக தோன்றும். பெண்களைப் போற்றும் விதமாக காட்சியோ, வசனமோ இருந்தாலும், ஆண் ஒருபடி மேலிருந்தே அதை செய்வான். இன்னும் நிறைய உண்டு. எப்படி காலம் மாறினாலும், எடுத்த படங்கள் மாறதோ, அதுபோல் அந்த படங்களை எடுத்த படைப்பாளியும் மாறாமல் இருந்தால், படைப்பாளிக்கும் நஷ்டம். படைப்பாளியின் ரசிகர்களுக்கும் நஷ்டம். இங்கு பாக்யராஜ் பெர்பெக்டாக மேட்ச் ஆகிறார்.

அவர் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கும் விஷயங்கள் பல காலாவதியாகிவிட்டது.

இந்த வார நிகழ்ச்சியில் அவர் படத்தின் குறையாக சொன்ன விஷயம் - படத்தின் இரண்டாம் பாதியில் காமெடி குறைந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், காமெடி காமெடி என்ற அளவுகோலுடனேயே இந்த படத்தை மதிப்பீடு செய்தார். படத்தின் மையக்கருத்தான மனித உறவுகளை பற்றியோ, உணர்ச்சிகளையோ பற்றியோ ஒன்றுமே சொல்லவில்லை. தனுஷின் நடிப்பை புகழ்ந்தவர், ரிச்சா நன்றாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றார்.

தனுஷுடன் ‘நாய் போல் வேலை பார்’ காட்சியைப் பற்றி பேசும் போது, ”நீங்கள் ஏன் முட்டிப்போட்டு நான்கு கால்களுடன் நடந்துக் காட்டவில்லை?” என்றார். என்ன பாக்யராஜ் சார் இது?

சென்றவாரம், வித்தகன் விமர்சனத்தின் போது, பல இடங்களில் இதை அப்படி எடுத்திருக்கலாம், அதை இப்படி எடுத்திருக்கலாம் என்று பாக்யராஜ் சொல்ல, பார்த்திபனும் ஆமாம் என்பது போல் ஒத்துக்கொண்டு தலையாட்டினார். (மதனுடனான நிகழ்ச்சியிலும் பார்த்திபன் இவ்வாறே பரிதாபமாக காட்சியளித்தார்) செல்வராகவன் அப்படியெல்லாம் இல்லாமல், ரொம்ப தன்னம்பிக்கையுடன் அது அப்படிதான் என்று பேசினார். (”தலைல பாட்டில் உடைக்கிறதுக்கூட காமெடித்தான்!!!”)

படைப்பாளியின் பலமும் பலவீனமும் தெரியும் இடங்கள் இவை.

.

Saturday, December 3, 2011

ஐஸ்

இடம்: டென்வர், யூ.எஸ்.

எங்கள் அலுவலகத்தில் மாதமொரு நடக்கும் ஒரு மீட்டிங்கில், எல்லோரையும் பேச விட, முதலில் ஒரு கேள்வி கேட்பார்கள். அதற்கு அனைவரும் பதில் சொல்ல வேண்டும். ஒருமுறை பிடித்த திரைப்படம் எது என்று கேட்டார்கள். அமெரிக்கர்களும், பெரும்பாலான இந்தியர்களும் பல ஆங்கில படங்களை கூறினார்கள். ஒரு ஆந்திரக்காரர் மட்டும் சக்தே இந்தியா என்றார். என் முறை வருவதற்கு முன்பே யோசித்துக்கொண்டிருந்தேன். நமக்கு பிடித்த படம் எது? நிறைய இருக்கிறது. எதை சொல்ல?

முறை வந்தது. ‘நான் இந்திய படங்களையே அதிகம் பார்க்கிறேன். இந்திய நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடித்த படங்கள்’. நிறைய பேருக்கு ரஜினி பற்றி தெரிந்திருந்தது. புன்னகைத்தார்கள். இன்னொரு முறை, பிடித்த ஸ்வீட் பற்றி கேட்டார்கள். குலோப் ஜாமூன் என்றேன். அடுத்த முறை, பிடித்த இடம் பற்றி கேட்டார்கள். எனக்கு ஜில்லென்று இருக்கும் எல்லா இடங்களும் பிடிக்கும் என்றேன். உதாரணத்திற்கு இந்தியாவில் ஊட்டி என்றேன்.

இது அனைத்துமே என் மனத்திற்கு முதலில் தோன்றிய பதில்கள். இதுதான் உண்மையானதும் என்பது என் நம்பிக்கை.

தென் தமிழகத்தின் கடலோரப்பகுதியில் பிறந்து வளர்ந்த எனக்கு குளிர்ச்சி என்றாலே மகிழ்ச்சி தான். வெக்கை வாடிக்கையானது. எங்காவது குளிரான இடத்திற்கு போக மாட்டோமா? என்று இருக்கும். அதனாலேயே ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்கள் பிடிக்கும். சிறுவயதில் ஊட்டி, கொடைக்கானலில் ஜஸ் மலை இருக்கும் என்று சொல்வதை கேட்டு நம்பி ஏமாந்திருக்கிறேன். இமயமலை போவதை ஒரு பெரிய லட்சியக்கனவாகக்கூட வைத்திருந்தேன்.

அந்த மீட்டிங்கில் நான் அப்படி சொன்னதை கேட்டதும், ஒருவர் கேட்டார். ‘நீ டென்வரில் குளிர்காலத்தில் இருந்தது இல்லையே?’ என்று. ‘இருக்குடி மவனே உனக்கு’ என்ற டோனில்.



இருந்தாலும் நாம் இதை என்ஜாய் செய்வோம் என்று உறுதியாக நம்பினேன்.

---

டென்வர் வந்த புதிதில், தூரத்தில் தெரியும் ஒரு பனிமலையைப் பார்க்கும்பொழுதெல்லாம் ரொம்ப மகிழ்வாக இருக்கும். அப்போது ஒருமுறை என் மேனேஜருடன் இந்த ஊரில் சுற்றிப்பார்க்கும் இடங்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, என்னுடைய கேள்வி - பனிமலையை பற்றியே இருந்தது. அவர் அதற்கு சலிப்புடன், குளிர்காலத்தில் ஊர் முழுக்க பனியாகத்தான் இருக்கும். பாத்துக்க என்றார்.

---

இதோ குளிர்காலம் வந்துவிட்டது. நேற்று மூன்றாவது முறையாக பனி பெய்தது. ஊர் முழுக்க படர்ந்திருக்கும் வெளீர் பனியை பார்க்கும்போது, நான் பார்க்க நினைத்த சொர்க்கபூமியை பார்த்துவிட்ட உணர்வு வருகிறது.



முதல் இருமுறை ’பனி பெய்தால் அலுவலகம் வர வேண்டாம்’ என்று முந்திய நாளே சொல்லிவிட்டார்கள். நம்மூர் போல் இல்லாமல், ஒரளவுக்கு வானிலை அறிக்கையில் சொல்வது போல், வெயில் அடிக்கிறது. மழை பெய்கிறது. பனி பொழிகிறது. (எத்தனை இன்ச் பனி பெய்யும் என்று குறிப்பிடுவார்கள்.) இம்முறை பனி பெய்துக்கொண்டிருந்தபோதே, காரில் அலுவலகம் சென்றோம். நல்ல அனுபவமாக இருந்தது. இம்மாதிரி நேரங்களில் வீட்டிலிருந்தே வேலையை பார்ப்பது உசிதம் என்று புரிந்துக்கொண்டேன்.



இந்த ஊரில் வெயில் கூட கூட மகிழ்ச்சி கூடுகிறது. ஏனென்றால், அப்பொழுது தான் அவர்களால் வெளியே செல்ல முடிகிறது. அரசாங்கத்தால் மரமாத்து வேலைகளை அப்பொழுதுதான் செய்ய முடிகிறது.



குளிர்காலத்தில் இவர்கள் படும் அவஸ்தை இப்பொழுதுதான் புரிகிறது. பனி பொழிந்து, பாதை வழுக்கிறது. நடந்தால் கால் வழுக்கும். ஓட்டினால் கார் வழுக்கும். ஒரு இடம் போய் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. கார் டயர் தேய்ந்துபோய் இருந்தால், அவ்வளவுதான். அங்கிங்கு என்று நம் பேச்சைக் கேட்காமல், நம்மை இழுத்துக்கொண்டு செல்லும். டேன்ஜர்தான்.

---

இந்த ஊரில் பனிசறுக்கு பிரபலம். அமெரிக்காவின் பல இடங்களில் இருந்து, இங்கு வந்து சறுக்குவார்கள். நாங்களும் செல்லலாம் என்று இருக்கிறோம். அலுவலகத்தில் அவ்வப்போது பேசிக்கொள்வோம்.

இந்த வாரம், அடுத்த வாரம் என்று சென்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று ஆபிஸ் வந்த நண்பர், ‘நான் சறுக்கினேன்’ என்றார்.

நாங்க என்னடா நம்மிடம் இந்தாளு சொல்லாமல் கொல்லாமல் சென்று விட்டாரே? என்று ‘எப்ப பாஸு?’ என்றோம்.

‘அட போங்க பாஸூ. வீட்டுக்கிட்ட வழுக்கி விழுந்துட்டேன்’ என்றார் பாவமாக.

‘இதுக்குன்னு ஏதோ ஷூ இருக்குன்னு சொன்னாங்களே?’

‘அத போட்டுக்கிட்டு தான் விழுந்தேன்’

‘அப்புறம்?’

‘அப்புறம் என்ன? யாராவது பார்த்தாங்களா’ன்னு சுத்திமுத்தி பார்த்தேன். யாரும் இல்லை. தட்டிவிட்டுக்கிட்டு எந்திரிச்சிட்டேன்.’



அதனால இது ஒரு பிரச்சினை. எங்க சறுக்கும்’ன்னே தெரியாது. பனி அப்படியே உறைந்து, தரையோடு ஜஸ்ஸாகி, சரிவான பகுதியில் நன்றாக வழுக்கும். பிடிக்க ஏதும் இல்லையென்றால், அரோகரா தான்.


---

என்ன இருந்தாலும், ஜஸ் இன்னும் பிடித்தமானதாகவே இருக்கிறது. தேவதைகளுக்கு நம்மூர் இயக்குனர்கள் வெள்ளை உடை அணியவிடுவார்கள். குளிர்காலத்தில் இந்த ஊரும் வெள்ளை உடையணிந்துக்கொண்டு, ஒரு தெய்வீக லுக்குடன் தான் இருக்கிறது. வாகனங்கள் செல்லும் பாதைகளில் தான், ஒருமாதிரி புறக்கணிக்கப்பட்ட நிலையில் கருமையாக சாலைகளில் பனி அலைக்கழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.



குளிர் 20-25 பாரான்ஹூட் என்று காட்டும். யோசித்து பார்த்தால் தான், நாம் மைனஸ் டிகிரியில் இருக்கிறோம் என்று புரியும்.



எனக்கு தெரிந்து எல்லோருமே, இங்கு பனி என்றால் ஒருவித சலிப்புடன்தான் இருக்கிறார்கள். நான் தான் நடுங்கிக்கொண்டு இருந்தாலும், ஒருவித குதூகலத்துடனேயே சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.

---

குறிப்பு: புகைப்படங்கள் ஓடும் காரில், மொபைலில் எடுத்தது. சுமாராகத்தான் இருக்கும்.


வந்த புதிதில் இங்கிருக்கும் ராக்கி மவுண்டெயின் சென்றபோது எடுத்த வீடியோ. அது கோடைகாலம். இப்ப குளிர்காலத்தில் அந்த பாதையை மூடிவிடுவார்கள் என்று கேள்விப்பட்டேன். பஸ் ஓட்டுனர் போகும்பாதையை விளக்கிகொண்டு வந்தார். அவர் வாய்ஸ் இருக்கும்.



.