Friday, September 12, 2008

தமிழ் சினிமா <--> கெட்டவார்த்தை

கெட்ட வார்த்தையும் மனிதனின் ஆயுதங்களில் ஒன்று.

பொதுவாக கோபமாக இருக்கும் போதும், சண்டைகளின் போதும் கெட்ட வார்த்தைகள் எண்ட்ரி கொடுக்கும். வாய் சண்டை, கைக்கலப்பாவதற்க்கு பெரிதும் உதவும். படிக்காதவர்கள்தான் கெட்ட வார்த்தைகளால் பேசுவார்கள் என்பதெல்லாம் பொய். கல்லூரிகளிலும், கல்லூரி விடுதிகளிலும் (இப்பொழுது பள்ளிகளிலுமாம்) மாணவர்களிடையே சகஜமான பேச்சுவார்த்தைகளிலும் கூட கெட்ட வார்த்தைகள் இடம் பெறும். செல்லமாக அழைப்பதற்க்கு கூட உபயோகப்படுத்தப்படும்:-). ஹாஸ்டலில் அப்படி பேசுபவர்கள், விடுமுறைக்கு வீட்டிற்கு செல்லும் போது, எப்படித்தான் தங்கள் நாக்கை கட்டுப்படுத்துகிறார்களோ?

சமூகத்தின் மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று எல்லாத்தட்டு மக்களிடமும் வேறுபாடு இன்றி இருப்பது கெட்ட வார்த்தைகள். மொழி வேண்டுமானால் மாறுபடும். மேல்தட்டு மக்களிடம் பேசப்படும் ஆங்கில கெட்ட வார்த்தைகள், தமிழ் கெட்ட வார்த்தைகள் அளவுக்கு ஜெர்க் கொடுக்காது. தவிர, தமிழுடன் ஒப்பிடும் போது ஆங்கிலத்தில் வார்த்தைகள் குறைவுதான். எப்படி லவ் என்ற ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழில் காதல், பாசம், அன்பு என்று பல வார்த்தைகள் உள்ளதோ, அதுப்போல் ஒரு ஆங்கில கெட்ட வார்த்தைக்கு சமமாக தமிழில் பல கெட்ட வார்த்தைகள் உள்ளது. அதற்காக செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புகளில் இதுவும் ஒன்று என்றா சொல்ல முடியும்?

இனி தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தைகளின் பங்கைப் பார்ப்போம். சினிமா என்பதே கெட்ட வார்த்தை என்ற நிலையிலிருந்து, இன்று சினிமாவில் கெட்ட வார்த்தையை ரசிக்கும் அளவுக்கு காலம் நம்மை மாற்றியிருக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு மெதுவாக காமெடி காட்சிகளில் இடம் பிடித்து, பின்பு ஹீரோக்களின் பஞ்ச் வசனங்களுக்கு ஈடாக தற்போது படங்களில் இடம் பிடித்து வருகிறது.

“வெற்றி கொடி கட்டு” படத்தில் வடிவேலுவின் மச்சான் ஒருத்தர், சைக்கிளைப் பிடித்துக் கொண்டு வடிவேலுவை சரமாரியாக திட்டுவார். சமுதாயத்திற்கு படத்திற்கு படம் கருத்து கூறி வரும் இயக்குனர், இந்த கெட்ட வார்த்தைகளுக்கு பின்னணியாக வயலின் இசையை வைத்திருப்பார். வாலி அஜித் போல அவரின் உதட்டசைவை கவனித்தால், படம் எதார்த்தமாக வரவேண்டுமென்று இயக்குனர் நிஜ கெட்ட வார்த்தைகளையே பேச வைத்திருப்பது தெரியும்.

பின்பு, கெட்ட வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் கூறி, ரசிகனே முழுவதையும் புரிந்து கொள்ளும் டிரண்டை கொண்டு வந்தவர் விவேக். “டேய்! அது உங்க ஆத்தாடா” என்ற கேள்விக்கு சின்ன கலைவாணர் கொடுக்கும் பதிலடி, நகைச்சுவை மூலம் அவர் தரும் கருத்து செறிவுகளில் ஒன்று.

கெட்ட வார்த்தைகளை ஆக்ஷன் ஹீரோக்களின் பஞ்ச் வசனமாக ஆக மாற்றிய பெருமை டைரக்டர் ஹரியை சாரும். சாமி படத்தில் “கேன பூனா… மூன கூனா” என்பதற்கு “கேன புண்ணாக்கு… முட்டாள் குரங்கு” என்று விளக்கம் கொடுத்தது, சென்சார் போர்டை மட்டுமே ஏமாற்றி இருக்கும்.

எனக்கு ஒரு சந்தேகமும் உண்டு, படத்தில் கதாபாத்திரங்களுக்கு பேர் வைப்பது கூட, ஹீரோ அந்த கதாபாத்திரங்களை திட்டுவதற்கு ஏற்ப வைக்கிறார்களோ? என்று. உதாரணத்திற்கு, வல்லவன் படத்தில் ரீமா சென் ஒரு காட்சியில் சிம்புவிடம்

“ஏய்! நான் கீதாடா” என்று சொல்ல,

“போடிங்…” என்று சொல்லி விட்டு ஹீரோயிச பின்னணி இசைவுடன் நடந்து செல்வார்.

அதேப்போல், சிவாஜியில் ரஜினியிடம் சுமன்,

“நான் ஆதிடா” என்க,

விவேக் குறுக்கிட்டு,

“போடங்…” என்று சொல்ல வருவதை ரஜினி பாய்ந்து தடுக்க,

“கபோதின்னு சொல்ல வந்தேன்” என்று விவேக் சொல்லுவதை நாம் நம்ப வேண்டுமாம். சார், நம்பிட்டோம். வசனம்: சுஜாதா.

கிராமங்களில் பேசும் ஒரு கெட்ட வார்த்தை, கிராமத்து படங்கள் எடுத்து வந்த பாரதிராஜா மற்றும் ராஜ்கிரணின் பல படங்களில் இடம் பெற்று வந்தது. சென்சாருக்கு இப்போதுதான் அது தெரிய வந்ததோ என்னமோ, இப்போதெல்லாம் அதற்கு பதிலாக தக்காளி.

ஸ்டைலிஷாக படம் எடுக்கும் கவுதம் மேனனின் படங்களிலும் தொடர்ச்சியாக கெட்ட வார்த்தைகளுக்கு பங்கு உள்ளது. அவருக்கு பிடித்த கெட்ட வார்த்தை எதுவென்று போட்டி வைத்தால், குலுக்கலில் தான் பரிசுகள் வழங்க வேண்டி வரும்.

இப்படியெல்லாம் படத்தில் பேசலாமா என்றால் நிஜத்தில் இருப்பதை தானே படத்தில் வைக்குறோம் என்பார்கள். கெட்ட வார்த்தைகளின் பழக்கமில்லாத, பழக்கம் ஏற்படுத்த கூடிய வாய்ப்பில்லா குழந்தைகள் கூட படங்கள் பார்த்து கற்றுக் கொள்ளலாம். சில படங்களில், கெட்ட வார்த்தை வரும் இடத்தில் “கீ…” என்று சென்சார் பண்ணிய சத்தம் வரும். இப்பொழுது இயக்குனர்களே, பின்னணி இசையாக இதை செய்து விடுகிறார்கள். பொல்லாதவன் ரவுடிகள் சம்பந்தப்பட்ட படமென்பதாலோ என்னவோ, படம் முழுக்க இப்படி “கீ… கீ…” தான்.

இதை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டுமென்றால், “நீ பேசவில்லையா? இல்லை, நீ பேசவில்லையா?” என்று அரசியல் கட்சிகளும் அடித்து கொள்ளும். மொத்தத்தில் தமிழன் (மனிதன்) வாழ்வோடு கலந்து விட்டது. எந்த பினாயில் ஊற்றியும் கழுவ முடியாது. தண்ணி அடிப்பதையே “வாழ்றது கொஞ்சம் நாள்… அது என்ன பண்ணும்?... உடம்புக்கு நல்லதாமே?” என்று நியாயப்படுத்துபவர்கள், இதையா நிறுத்திவிட போகிறார்கள்? அப்படியே சொல்லாம விட்டார்களே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.

இக்கட்டுரையில் ஏதேனும் வரலாற்று பிழை இருந்தால் என்னை மன்னித்தருளி பிழையை நீக்கும்மாறு கேட்டு கொள்கிறேன். பதிவிற்கு பொருத்தமாக இருக்க வேண்டுமென்பதற்க்காக கெட்ட வார்த்தைகளை பின்னுட்டமாக இட வேண்டாம் என்றும் கேட்டு கொள்கிறேன். :-)

15 comments:

rapp said...

//எப்படித்தான் தங்கள் நாக்கை கட்டுப்படுத்துகிறார்களோ//
கரெக்டா சொன்னீங்க. நானே ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். இதுல நான் வேற குடும்ப (இ)ஸ்திரியா :):):), ரொம்பக் கஷ்டம் போங்க.

rapp said...

//அவரின் உதட்டசைவை கவனித்தால், படம் எதார்த்தமாக வரவேண்டுமென்று இயக்குனர் நிஜ கெட்ட வார்த்தைகளையே பேச வைத்திருப்பது தெரியும்.
//ஆஹா, நல்ல ஆளுங்க நீங்க:):):) உங்களை யாருங்க அதையெல்லாம் கவனிக்கச் சொன்னது:):):)

முரளிகண்ணன் said...

நல்ல அலசல் சரவண குமரன். முன்பு படங்களில் பா***ட் என்ற வார்த்தையை உபயோகிப்பார்கள் (விடுதலை,குருதிப்புனல் பல படங்கள்)

சரவணகுமரன் said...

வாங்க rapp...

சரவணகுமரன் said...

//இதுல நான் வேற குடும்ப (இ)ஸ்திரியா :):):), //

ஹா... ஹா... ஹா... :-)

சரவணகுமரன் said...

//உங்களை யாருங்க அதையெல்லாம் கவனிக்கச் சொன்னது//

படத்தை நல்லா கவனிக்க வேண்டாமா? எதாச்சும் மெசேஜ் மிஸ் பண்ணிட கூடாதுல?

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்...

ரஜினி அதற்க்கு தமிழில் அர்த்தம் கூட விஜயகுமாரிடம் சொல்லுவார்.

கமலும், விக்ரம் படத்தில் சாருஹாசனிடம் கோபத்தில் அப்படி பேச, சாருஹாசன் "கெட்ட வார்த்தெல்லாம் பேசாதப்பா" என்பார்.

Raman Kutty said...

நானும் கூட , 'காக்க காக்க' படம் பார்த்த மறுநாள், எனது முதலாளியுடன் சென்று கொண்டிருந்தேன், அப்பொழுது, காரின் குறுக்கே வந்த ஒருவரைப்பார்த்து " ..த்தா" என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட , முதலாளியின் முகததை பார்க்கவேண்டுமே! அதன் பிறகு.. ஹும்! என்ன சொல்ல, ஒரு படி கீழேதான்.. நம்க்கே இப்படி என்றால்.. குழந்தைகளின் நிலை சொல்லவேண்டியதில்லை.

சரவணகுமரன் said...

வாங்க ராமன்... :-)

சரவணகுமரன் said...

இப்ப ரெண்டு நாளு முன்னாடி டிவியில் மன்மதன் பார்க்கும் போது, ஒரு காட்சியில் சிம்பு "டேய், அது உன் அண்ணிடா" என்று சொல்லும்போது, அதற்க்கு இன்னொரு சிம்பு சொல்லும் பதில், எனக்கு இப்பதிவை தான் ஞாபக படுத்தியது.

யோசிப்பவர் said...

சிறைச்சாலை படத்தில் பிரபுவின் “பு.ம” சத்தம் ம்யூட் செய்யப்படாமலே ஒலிக்கும். ஏதோ ஒரு சமீபத்திய படத்தில் கூட “தே.ம” வை காதுகுளிர(1?!) கேட்டதாக ஞாபகம்!!:(

சரவணகுமரன் said...

கமலும் பம்மல் கே.சம்பந்தம், மகராசன் படங்களில் கெட்ட வார்த்தைகளில் பேசியுள்ளதாக ஒரு அனானி தகுந்த ஆதாரங்களுடன் (கெட்ட வார்த்தைகளுடன்!!!) பின்னுட்டமிட்டுள்ளார்.

இதெல்லாம் உலகத்தரமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெட்லி... said...

குருவி படத்தல நம்ம சின்ன கலைவாணர் என்று தன்னை
தானே சொல்லி கொள்ளும் திரு.விவேக் அவர்கள் மலேசியா
வந்தவுடன் செல் முருகனை பார்த்து "நேரிய oats சாப்புடுவ போல?"
அவர் சொல்லும் அந்த oats உச்சரிப்பு ஐயோ அருவருப்பு,
அவருக்கு விருதெல்லாம் குடுக்குறாங்க.....
என்னமோ போங்க.....

Sukumar said...

அண்ணே....உங்கள் பதிவு அருமை. ..
இப்பல்லாம் ஏன் பீப் ஒலி கொடுக்க மாட்றாங்கன்னு தெரியல... அந்நியன்ல கூட அடி பட்டு கிடக்கும் அம்பி டி.டி.எச் சவுண்டுல "டேய் டாஷ்னு கத்துவாரு."

Sukumar said...

அண்ணே....உங்கள் பதிவு அருமை. ..
இப்பல்லாம் ஏன் பீப் ஒலி கொடுக்க மாட்றாங்கன்னு தெரியல... அந்நியன்ல கூட அடி பட்டு கிடக்கும் அம்பி டி.டி.எச் சவுண்டுல "டேய் டாஷ்னு கத்துவாரு."