Friday, December 26, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 6

கத்து கொடுக்குற பையன் ரெண்டு நாளு வரல. முத நாளு கோவிலுக்கு போறேன்னு சொன்னான். ரெண்டாவது நாளு, இப்பதான் காலைல நாலு மணிக்கு திருவண்ணாமலைல இருந்து வந்தேன்’ன்னு சொன்னான்.

“திருவண்ணாமலை எப்படி இருந்திச்சி?”

“நல்லா இருந்திச்சி சார். காலெல்லாம் வலி.”

“கிரிவலமா?”

“ஆமாம் சார். அப்புறம் மலை மேலேயும் ஏறுனேன்.”

”ஓ! அப்படியா?”

கோவிலை அவன் கேமராவில் மலை மேலிருந்து படம் எடுத்திருந்தான். நல்லா இருந்திச்சி.

இன்னைக்கி யூ டர்ன், ரிவர்ஸ் அடிக்கிறது எல்லாம் பிராக்டிஸ் பண்ணலாம்ன்னு நினைச்சிருந்தேன். பண்ணலாமா?ன்னு கேட்டேன். சிட்டிக்குள்ள போலாமா?ன்னு அவன் கேட்டான்.

“ம்ம்... போலாமே”

“போயிட்டு காருக்கு பெட்ரோலும், கேஸும் அடிச்சிட்டு வந்திடலாம். ரெண்டு மணி நேரம் ஆகும். பரவாயில்லையா?”

கரும்பு தின்ன கூலியா? எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் காரு அதுவும் சிட்டிக்குள்ள ஓட்டுறதுன்னா கசக்கவா போகுது?

ரைட்... ரைட்...

போற வழியில ஏகப்பட்ட ஸ்பிட் பிரேக்கர்ஸ். கிளட்ச் பிடிச்சி ஸ்பிட் குறைச்சு, கியர் மாத்தி போறது இப்ப கொஞ்சம் சரளமாத்தான் வருது. உண்மையிலே கார் ஓட்ட பத்து நாளு தேவையில்லை.

மூணு-நாலு நாளு போதும். அதுக்கு மேலே, அவுங்க மேற்பார்வையிலே நாமளேதான் கார் ஓட்டுறோம்.

“தர்மஸ்தலா போயிருக்கீங்களா?”ன்னு கேட்டான்.

“இல்லையே”

“போயிட்டு வாங்க, சார். அருமையான கோயில்.”

“ஓ”

“எந்நேரமும் சாப்பாடு கிடைக்கும். சாப்பாடு சூப்பரா இருக்கும். அந்த சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும். ஆனா, அந்த டேஸ்ட் லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வராது. ரெண்டு நாளு மேலே அங்க இருக்க முடியாது”

”ஏன்?”

“அவுங்களே செலவு செய்து உங்கள ஊருக்கு அனுப்பிடுவாங்க. அந்த கோவிலுல இருக்குற எல்லோருமே ஹெல்ப் பண்ணுவாங்க. பஸ் டிக்கெட் கூட அந்த ஊருக்கு கம்மிதான்”

சின்ன வயசிலேயே பக்திமானா இருக்கானே? நிறைய கோவிலுக்கு போறான். சமீபத்தில் வேலூர் தங்க கோவிலுக்கும் போயிருக்கான். தர்மஸ்தலா போயிட்டு வந்ததுக்கப்புறம்தான் அவனுக்கு எல்லாமே பாசிட்டிவா நடக்குதான். எப்படியோ பாசிட்டிவ் உணர்வு வந்துச்சுன்னா போதும். நம்ம வேலைகளின் முடிவுகளை பாசிட்டிவ்வுக்கு கொண்டு வந்திடலாம்.

பெட்ரோல் பல்க்க்கு முன்னாடியே, அவன் நான் வண்டியை ஓட்டுறேன்னு சொன்னான்.

“நானே ஓட்டுறேனே?”

“இல்ல. உள்ளே ஏத்தி திருப்புறது கொஞ்சம் கஷ்டம்”

ஓகே. இதுவரைக்கும் கார்ல போறப்ப, சும்மா பாட்டு கேட்டுட்டு, வெளியே ’இயற்கை’யை ரசிச்சிட்டு வருவேன். இன்னைக்கு கொஞ்சம் தூரம் அவன் ஓட்டுன டிரைவிங்க பார்த்திட்டே வந்தேன்.

சே. நான் எவ்ளோ கேவலமா ஓட்டுறேன்!

நான் கார் ஓட்டும்போது, ஆக்ஸிலேட்டர ஏதோ அதுக்கு வலிச்சுட போகுதோங்குற மாதிரி மெதுவா மிதிப்பேன். இவன் தையல் மிஷின் மாதிரில்ல மிதிக்குறான் (பழைய வண்டி). நாமளும் மிதிச்சிட வேண்டியதுதான். நல்லா ஓட்டுறாயான்.

பெட்ரோல் போட்டத்துக்கப்புறம் நான் ஓட்ட ஆரம்பிச்சேன்.

ஒரு இடத்துல, ஒரு நாய் குறுக்க வந்தது. சல்லென்னு பிரேக்க பிடிச்சேன். நாய் தப்பிச்சிருச்சி.

“ஏன் சார் இப்படி பிரேக் பிடிக்கிறீங்க? இப்படியெல்லாம் பண்ணாதீங்க. அது எப்படியும் போயிடும். நீங்க ஸ்லோ பண்ணினா போதும். பின்னாடி வண்டி வந்திச்சின்னா என்ன பண்ணுவீங்க?”

ஒகே. அடுத்த முறை கொஞ்சம் கவனமா செய்யணும்.

திரும்பி வரும்போது, அவன் படிப்ப பத்தி சொன்னான். பிசிஐ படிக்கலாம்ன்னு ஐடியாவாம். சாப்ட்வேர் பத்தி கேட்டான். எனக்கு தெரிஞ்ச கதையை சொன்னேன். விளக்கமா கேட்டான். அவன் பேங்க் வெப்சைட் எல்லாம் யூஸ் பண்ணியிருக்கறதா ஏற்கனவே சொல்லியிருக்கான். அதனால அதை உதாரணமா வச்சி சொன்னேன். ரொம்ப ஆச்சரியமா,அவ்ளோ பண்ணலாமான்னு கேட்டான். இதுக்கே இப்படியான்னு, இன்னும் ஜனரஞ்சகமா ஆச்சரியத்தை கிளப்புவோம்ன்னு மல்டிமீடியா, அனிமேஷன் மென்பொருட்கள் பத்தி சொன்னேன். அங்க ஆரம்பிச்சது ரஜினியோட சுல்தான்கிட்ட வந்து நின்னது.

நான் சொல்லி அவனுக்கு தெரியாதது, அவனுக்கு ஆச்சரியம். அவன் சொல்லி எனக்கு தெரியாதது, என்னோட ஆச்சரியம்.

புதுசா கார் ஓட்டுறவுங்களுக்கு ஆச்சரியப்படுற மாதிரி நான் ஒரு அறிவுரை சொல்லுறேன். கேட்டுக்கோங்க.

எதையும் கத்துக்கும்போது, முட்டி மோதி கத்துக்கலாம். ஆனா, காரை அப்படி கத்துக்காதீங்க. :-)

(தொடரும்)

7 comments:

இராகவன் நைஜிரியா said...

//எதையும் கத்துக்கும்போது, முட்டி மோதி கத்துக்கலாம். ஆனா, காரை அப்படி கத்துக்காதீங்க. :-) //

நல்ல அறிவுரைங்க..

Anonymous said...

nanru

Anonymous said...

மிகவும் நன்று .
நாங்கள் பழகும் போது எப்படி இருந்ததுவோ
அதே போல் நீங்களும் சுவாரஸ்யமாக எழுதுறிங்க .

நாங்க மூணு தடவை ஸ்பெசல் கிளாஸ் போனம் , ஆளுக்கு ரூ 150
கொடுத்து ஒரு ஆளுக்கு 25 கிலோ மீட்டர் போனம் .

இதில நம்மாளு ஒருத்தருக்கு எந்நேரமும் போன் வந்துட்டே
இருக்கும் . நம்ம டிரைவரும் சின்னப்பயந்தான் .கடுப்பாயிருவான்
ஒரு சிகரெட்ட வாங்கி கொடுத்தமுணா பின்னாடி வந்துருவான் .

நான் முன்னாடி போயி வாத்தியார் ஆயிருவேன் .

நம்ம படம் போடறதுல கொஞ்சம் கில்லாடி .

பின்ன டீம் சேத்துனதே நாந்தேன் .

சரவணகுமரன் said...

நன்றி இராகவன்

சரவணகுமரன் said...

நன்றி குமார், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு.

DHANS said...

நன்றாக எழுதியுள்ளீர், விடுமுறையில் தன்களின் பதிவுகளை படிக்க முடியாமல் போய்விட்டது.

பிரேக் பிடிக்கும்போது பின்னால் வாகனம் வருகிறதா என்று பார்த்துக்கொள்வது மிக நல்லது
அடிக்கடி இருபுறமும் பின்னால் என்ன வருகிறது என்று பார்த்துகொண்டால் நன்று

சரவணகுமரன் said...

வாங்க DHANS. நன்றி.