Friday, October 30, 2009

நாட்டு சரக்கு - நார்வே அயன்

புதிதாக பெங்களூருக்கு வந்த, எனக்கு தெரிந்த ஒருவர் எப்படியாவது ஒரு வருடத்தில் கன்னடம் கற்று தேர்ந்துவிட எண்ணினார். நல்ல விஷயம் தான். ஒரு கன்னடக்காரரின் வீட்டில் இதற்காக குடியமர்ந்தார். வீட்டுக்காரரிடம் பேசி பேசி கன்னடம் கற்றுவிடலாம் என்பது திட்டம். ஒரு வருடம் கழித்து அவரை சந்தித்த போது,

“கன்னடம் நல்லா பேசுறீங்களா?”
“இல்லைங்க. வீட்டுக்காரர் இப்ப நல்லா கொங்கு தமிழ்ல பேசுறாரு”
!

தமிழர்கள் கன்னடம் கற்றுகொள்வதை விட, இங்கிருக்கும் கன்னடர்கள் தமிழை வேகமாக கற்றுக்கொண்டுவிடுவார்கள். தமிழ் மட்டுமில்லை. மற்ற மொழிகளையும். கொஞ்சம் வெட்கப்பட வேண்டிய விஷயம் தான்.

---

ரஹ்மான் வந்தே மாதரம் ஆல்பத்திற்கு இசையமைத்தது தெரியும். வைரமுத்து எழுத, தமிழ் தாய் வாழ்த்திற்கும் இசையமைக்க போவதாக சொல்லியிருந்ததும் தெரியும். இப்ப, சீக்ரெட்டா இன்னொரு ஆல்பம் ரெடி பண்ணி கொண்டு இருக்கிறார். யாருக்காக? குழந்தைகளுக்காக. நர்சரி ரைம்ஸ் பாடல்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார். நான் சின்ன வயசில ரைம்ஸை, தமிழ் பட பாடல் ட்யூனுக்கு பாடியிருக்கிறேன். இப்ப, சினிமா பாட்டுக்கு ட்யூன் போட்டவரே, ரைம்ஸுக்கும் ட்யூன் போடுகிறார். பாருங்க, இன்னும் கொஞ்சம் நாள்ல ஸ்கூல் ரைம்ஸ் ஹிட் ஆயிடும். இந்த ஆல்பத்தில் நடிக்க போவது யார் தெரியுமா? காட்ரீனா கைப்.

ஏம்ப்பா, நான் படிக்கும்போது இப்படியெல்லாம் பண்ணலையே?

---

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? சுற்றுச்சூழலுக்கு எதிராக இருப்பது, சாலையில் ஓடும் வாகனங்கள் மட்டுமல்ல, உங்கள் வீட்டு நாயும். ஒரு நார்மல் சைஸ் நாய் ஒரு வருடத்தில் 164 கிலோ கறியும், 95 கிலோ தானியங்களும் சாப்பிடுகிறதாம். என்ன கணக்கோ தெரியவில்லை! ஒரு நாயிற்கான ஒரு வருட உணவை உருவாக்குவதற்கு 0.8 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறதாம். பெரிய ஜெர்மன் செப்பர்ட் நாய் என்றால், 1.1 ஹெக்டர். ஒரு கார் ஒரு வருடம் ஒடுவதற்கு தேவையான சக்தியை உருவாக்குவதற்கான இடத்தை விட இது அதிகமாம். அதனால், நிறைய நாய் வளர்க்காதீங்க. முடிஞ்சா, ஷேர் பண்ணிக்கோங்க என்கிறார்கள். உணவாகவும் இருக்கும் கோழி, ஆடு, மாடு, பன்றியெல்லாம் நாயை விட பெட்டராம்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.

---

சில பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை புத்திசாலி குழந்தையாக்குகிறோம் என்று சொல்லி விளம்பரம் செய்வதை கேள்விப்பட்டிருப்போம். அஹமதபாத்தில், புத்திசாலி குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம் என்று ஒரு பல்கலைகழகம் ஆரம்பித்து இருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய விஷயமில்லை. யார் வேண்டுமானாலும் பலதரப்பட்ட திறமைகளைக் கொண்ட சூப்பர் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். எப்படி என்று இந்திய புராதன புத்தகங்களிலிருந்தும் நவீன மருத்துவமும் படித்து தெரிந்து வைத்திருக்கிறேன் என்கிறார் இதன் நிறுவனரான படேல். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கும் பேஷா பாடம் நடத்திடலாம் எனவும் சொல்கிறார்.

அஞ்சு வயசுல ஸ்கூலுக்கு போயிட்டு இருந்த குழந்தை, இப்ப இரண்டரை-மூணு வயதில் போயிகிட்டுயிருக்குது. இது போதாது என்று வயத்துக்குள்ளேயே பாடத்தை நடத்த போறாராம்.

---

ஊரை விட்டு பெங்களூருக்கு வந்த நண்பனுக்கு இங்குள்ள ஹோட்டல் சாப்பாடு பிடிக்கவேயில்லை. பிஸிபிலாபாத், வாங்கிபாத், மசால் தோசை, இட்லி - எதுவும் பிடிக்கவில்லை. மத்தியானம், சிக்கன் பிரியாணி மட்டும் உள்ளே இறங்குகிறது. சரி, அதையே சாப்பிடுவோம் என்று தினமும் அதையே சாப்பிட்டவன், ஒரு மாதம் கழித்து, ஊருக்கு போனபோது, ஊரில் அவனுக்காக அவனுடைய அம்மா ஆசையாக செய்து வைத்திருந்தது - சிக்கன் பிரியாணி!

அய்யோ... என பிரியாணி போபியா வந்தவனாக கதறி, எனக்கு ரசம் சாதம் தான் வேண்டும் என்று அதை மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறான்.

---



இவர்தான் நார்வே அயன். நார்வே ஏர்போர்ட்டில் கடத்த முயன்றதற்காக கஸ்டம்ஸ் ஆபிஸர்களால் கைது செய்யப்பட்டு இருப்பவர். இவர் நெஞ்சைச் சுற்றி சின்ன சின்ன பைகளில் அடைத்து கடத்தி வந்தது - பாம்புக்குட்டிகள். பைத்தான் வகை பாம்புகள். அது மட்டுமில்லை. தொடையில் அல்பினோ என்ற வகை சேர்ந்த பல்லிகள். இங்க, அவனவன் வீட்டுக்குள்ள இருக்குற பல்லியை விரட்ட முடியாம நொந்து போயி இருக்கான். உலகத்தோட அந்த பக்கத்துல கடத்திக்கொண்டு போற அளவுக்கு பல்லிக்கு கிராக்கி.

வேலில போன ஓணானை எடுத்து... அதை செஞ்சு காட்டுனது இவருதான்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

.

5 comments:

மகேந்திரன் said...

#ஏம்ப்பா, நான் படிக்கும்போது இப்படியெல்லாம் பண்ணலையே?#

பண்ணிருந்தா மட்டும் பாஸாயிருப்பிங்களா??

#கோழி, ஆடு, மாடு, பன்றியெல்லாம் நாயை விட பெட்டராம்#

நாகாலாந்து, மணிப்பூர் போன்ற இந்தியாவின் மாநிலங்களில் நாய்க்கறி
பாரம்பரிய உணவு.. கோழிய பாத்தா உவாக்..!!

#வேலில போன ஓணானை எடுத்து... அதை செஞ்சு காட்டுனது இவருதான்#

இது.. இது.. இது சரவணன் பன்ச்..!!

பாவா ஷரீப் said...

//“கன்னடம் நல்லா பேசுறீங்களா?”
“இல்லைங்க. வீட்டுக்காரர் இப்ப நல்லா கொங்கு தமிழ்ல பேசுறாரு”//

தமிழ் அவ்வளவு எளிமை, இனிமை, இளமை

மத்த மொழி எல்லாம் நமக்கு எளிதாக வராதுங்னா

முரளிகண்ணன் said...

நச்சுன்னு இருக்கு

சரவணகுமரன் said...

//பண்ணிருந்தா மட்டும் பாஸாயிருப்பிங்களா??//

பண்ணியிருந்தா தான் பாஸாயிருக்க மாட்டேன்.

//நாகாலாந்து, மணிப்பூர் போன்ற இந்தியாவின் மாநிலங்களில் நாய்க்கறி
பாரம்பரிய உணவு.. கோழிய பாத்தா உவாக்..!!//

நீங்களும் கைவசம் சரக்கு வச்சியிருக்கீங்களே!

சரவணகுமரன் said...

கருவாச்சி,

அப்படி சொல்லிக்க வேண்டியது தான்...