Wednesday, April 29, 2009

தேர்தலில் வெற்றி யாருக்கு?

இந்த முறை ஐபிலை விட சுவாரஸ்யமாக உள்ளது, தேர்தல் ட்வெண்டி-20.

ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் பணத்தை பற்றி கேள்வி கேட்டு அத்வானி பவுன்சர் போடுகிறார் என்றால், பொருளாதாரத்தை நூறு நாட்களில் சரி கட்டுவேன் என்று கூறி மன்மோகன் சிங் பந்துடன் சேர்த்து பேட்டையும் பவுண்டரிக்கு அனுப்புகிறார்.

தேர்தல் வாக்குறுதியாக, தனி ஈழம் பெற்று தருவேன் என்று அதிரடியாக முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடிக்கிறார் ஜெயலலிதா. நான் இந்த தேர்தலில் அம்மா தேசிய அளவில் வெயிட்டை காட்டுவார் என்று நினைத்து கொண்டிருக்கும்போது, சர்வதேச அளவில் தன் பார்வையை காட்டி வழக்கம்போல், என் நினைப்பில் மண்ணை போட்டுவிட்டார்.

இந்த தேர்தலிலேயே இந்த ஷாட் தான் நச் ஷாட் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, மூத்த அணி தலைவர் யாருக்கும் தெரியாமல் முதல் பாலில் யார்க்கர் போட பார்த்தார். சாகும்வரை உண்ணாவிரதத்தை லஞ்ச் வரை வெற்றிகரமாக நடத்தி, தலைவர் போட்ட பால் கலக்கல், விக்கெட் காலி, போர் நிறுத்தம் என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கும்போது, ‘நாங்க அப்படி சொல்லவே இல்லை’ என்று இலங்கை அரசு, தலைவர் போட்ட பாலை ‘நோ பால்’ ஆக்கி விட்டார்கள். உணர்ச்சிமயமாக காலையில் மாஸாக இருந்தது, மாலையில் காமெடி பீஸாக மாறி விட்டது.

மக்களும் எந்த வருடமும் இல்லாத வகையில், கூட்டங்களில் கலந்து கொண்டு செருப்பு வீசி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

கேப்டன், நாட்டாமை, முத்துராமன் மகன், சிம்பு அப்பா இவுங்கல்லாம் என்ன பண்றாங்கன்னு தெரியலை. டி.ராஜேந்தரை தேமுதிக கட்சிகாரங்க நாலு பேர் போயி மிரட்டியது இந்நிலையில் ஒரு பரபரப்பு செய்தி. அதுக்கு பதிலா, அவரை மரியாதை படத்துக்கு ஏமாற்றி கூட்டிட்டு போயிருக்கலாம்.

----

யாருக்கு ஓட்டு போடலாம்ன்னு நடந்த ஒரு விவாதம்.

“மன்மோகன் சிங், சிதம்பரம், அலுவாலியா கூட்டணிதான் நாட்டு முன்னேற்றத்துக்கு நல்லது.”

“ஆனா, அவுங்க இலங்கையில போர் நடத்தி மக்களை கொன்னுட்டு இல்ல இருக்காங்க”

“பிஜேபி வந்தா போர் நின்னுடுமா?”

“இருந்தாலும், யார் பேச்சையும் கேட்காம போர் நடத்திட்டு இருக்குற காங்கிரஸுக்கு எதிர்ப்பு காட்ட வேண்டாமா?”

“எதிர்ப்ப காட்டுனா எல்லாம் சரியாகிடுமா?”

ம்ம்ம்ம்...

“பிஜேபி வந்தா என்ன பண்ண முடியும்? மன்மோகன், சிதம்பரம் மாதிரி பைனான்ஸ் எக்ஸ்பர்ட் இருக்காங்களா?”

“ஹலோ! யாரு ஆட்சிக்கு வந்தாலும், இந்தியா ஒரே மாதிரி தான் முன்னேறும். பெருசா ஒண்ணும் வித்தியாசம் இருக்காது. பிஜேபி ஆட்சியில கூட இந்தியா முழுக்க ரோடு போட்டு இந்தியா ஒளிர்கிறதுன்னு சொன்னாங்க.”.

“இப்ப என்ன பண்ணலாம்ன்னு சொல்ற? யாருக்கு ஓட்டு போட சொல்ற?”

“அதான் தெரியல. அதுக்குதான் உன்கிட்ட கேட்குறேன்”

“அய்யோ.....”


----

பொதுவா, பிரச்சாரத்தின்போது எந்த கட்சி முதலில் ஒரு நிலையை எடுக்குதோ அது தான் ஜெயிக்கும்ன்னு சொல்லுவாங்க.

போன தேர்தல்ல, திமுக ஒரு ரூபாய் அரிசியை முதல்ல சொல்லியது. பின்னாடி அதிமுகவும் அதையே சொன்னாலும், திமுகதான் ஜெயித்தது. அதேப்போல் தான், மற்ற மாநிலங்களிலும் நடந்தது. பைக்ல பிக்கப் இருக்குற வண்டிதான், ரேஸ்ல ஜெயிப்பது போல்.

இப்ப, அதிமுக தனி ஈழத்தை முதல் குரலாக முழங்கியிருக்கு. திமுக அதை தொடர்கிறது. அதனால், அதிமுக ஜெயிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.

இது பற்றி ஒரு விவாதம்.

“அம்மா கலக்கிட்டாங்க. அவுங்களுக்கு தான் நாப்பதும்.”

“நீ யாருக்கு ஓட்டு போடுவ?”

“அம்மாவுக்குதான்”

“ஏன்?”

“ஈழத்துக்கு ஆதரவா சொல்லியிருக்காங்களே?”

“ஜெயிச்சா ஏதாவது பண்ணவா போறாங்க?”

“தெரியல. இல்லன்னு கூட வைச்சுக்கோ.”

“அப்புறம் எதுக்கு?”

“அதுக்காக ஒண்ணுமே பண்ணாத கலைஞருக்கா ஓட்டு போடுறது?”

“நீயே சொல்ற. ஜெயிச்சா அம்மா பண்றது நிச்சயம் இல்லன்னு. அப்புறம் எதுக்கு போடுற?”

“சும்மானாச்சுக்காவது அம்மாவால தனி ஈழம்ன்னு தைரியமா சொல்ல முடியுது. ஐயாவால அது கூட பண்ண முடியலையே. ஈழத்தை பேசுனவுங்களை எல்லாம் தூக்கி உள்ள போட்டாங்க. அம்மாவை டச் பண்ண முடியுமா?”

ஜெயலலிதா, இவ்ளோ நாள், கொடநாட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தாலும், தேர்தலின் போது ஏதாச்சும் சொல்லி போட்டிக்கு முன்னாடி வந்துடுறாங்களே? கலைஞர் - ஜெயலலிதா நேரடி போட்டிக்கு தமிழகத்தில் முடிவே வராதா?

----

எனக்கென்னமோ மத்தியில் காங்கிரஸ் அடி வாங்கும் என்றும், தமிழகத்தில் அதிமுக அணி பெரும்பான்மை பெறும் என்றும் தோன்றுகிறது. பார்ப்போம்.

Sunday, April 19, 2009

தமிழ் சினிமாவில் செட் (புகைப்பட பதிவு)

தமிழ் சினிமாவில் செட் என்றால் அதை சந்திரலேகா ட்ரம்ஸில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். வாசன் போட்ட பிரமிக்க வைத்த செட் அது, அந்த காலத்தில். கருப்பு வெள்ளை படங்களில் எந்த கலரில் எது இருந்தாலும் கருப்பு வெள்ளையில் தான் தெரிவதால், செட் போட ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. பின்னணியில் உள்ள ஸ்கிரினில் வரைந்து வைத்தால் போதும்.



அதன் பின், கலர் படங்கள் வந்த பின்பும் செட்டின் நம்பகத்தன்மை அவசியமாக இருக்கவில்லை. பாடல்காட்சிகளில் தங்கள் கற்பனையை எந்தளவுக்கு காட்ட முடியும் என்பதே முக்கியமாக இருந்தது.

சாதாரணமாக, ஒரு வீட்டில் குடும்பத்தினர் பேசி கொள்ளும் காட்சி என்றாலும், அதை நிஜ வீட்டில் எடுக்காமல், வீடு செட் போட்டு எடுத்தார்கள்.



அம்மாதிரி பிரபலமானவை ’வசந்த மாளிகை’ அரண்மனை வீடு, ’சம்சாரம் அது மின்சாரம்’ வீடு. பின்பு, எண்பதுகளில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, கமல் நடித்து வெளிவந்த படங்களிலும், அதை ஒட்டி அக்காலத்தில் வெளிவந்த மற்ற கமர்ஷியல் படங்களிலும், பாடல் காட்சியில் வரும் முக்கியமான செட் - தரையில் அணைந்து அணைந்து எரியும் கண்ணாடி ஒளி மேடை செட். இந்த செட்டுகள் மூலம் படம் வந்த காலக்கட்டத்தை தெரிந்து கொள்ளலாம் என்று கூறும் அளவுக்கு, இவை அக்காலத்தின் குறியீடுகள்.



டி.ராஜேந்தர், பிரமாண்டம் என்ற பெயரில் போடும் செட்டுகள், குழந்தைகளை தான் பெரும் அளவுக்கு கவரும்!. மழலை சிம்பு குட்டி ரயிலில் ஆடும் ஆட்டம் கொடுத்த குதூகலத்தை, உண்மையான ரயிலின் மேல் ஆடிய ஷாருக்கானின் ஆட்டம் கூட குழந்தைகளுக்கு கொடுத்திருக்காது. இது போல், அக்காலத்தில் குழந்தைகளை கவர்ந்த மற்றொரு வாகனம் - ‘பாட்டி சொல்லை தாட்டாதே’ சூப்பர் கார்.



செட் போடணும். ஆனா, அது செட்டுன்னு தெரிய கூடாதுன்னு ஒரு மரபை பிரபலமாக கொண்டு வந்தது, தோட்டாதரணி. நாயகன் படத்துக்காக போட்ட தாராவி செட் பரவலாக பாராட்டப்பட்டது. ஆர்ட் டைரக்டர் யார், அவர் பங்கு என்ன என்று ரசிகர்களை கூர்ந்து கவனிக்க வைத்தார். தோட்டாதரணியை தனது சிவாஜி படத்திற்காக ஷங்கர் போடவைத்த செட்டுகள், படத்தின் கதைக்களத்திற்கு உதவியதோ, இல்லையோ, பாடல் காட்சிகளில் படத்தின் பிரம்மாண்டத்தை காட்ட உதவியது. தோட்டதரணியின் கற்பனை பிரம்மாண்டத்தை காட்டியது. இது பற்றி ஒரு புத்தகம் வந்ததாக கூட கேள்விப்பட்டேன்.



இயக்குனர் மணிரத்னம், தனது படங்களுக்கு ஆர்ட் டைரக்‌ஷனை சிறப்பாக பயன்படுத்தினார். அபார்ட்மெண்ட் பிரபலமாகாத காலத்தில், ‘அஞ்சலி’ படத்தில் அபார்ட்மெண்ட்டை செட் போட்டு காட்டினார். பிறகு, அந்த மாடலில் நிஜமாகவே அபார்ட்மெண்ட் கட்டியதாக செய்திகள் வந்தது. இந்தியாவில் உள்ள பல அழகான இடங்களை, சிம்பிளான ஆர்ட் டைரக்‌ஷனால் இன்னும் அழகாக காட்டினார். இந்தியாவை சுற்றி சுற்றி ’திருடா திருடா’ எடுத்தார். ஒவ்வொரு ஷாட்டுக்கும் இடையில் நூற்றுக்கணக்கில் கிலோமீட்டர் தூரம் இருந்தது. ’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இலங்கையாக காட்டப்பட்ட பல இடங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டவை. பாண்டிச்சேரியை கொழும்புவாக யாரும் சந்தேகப்படாவண்ணம் காட்டினார். வேறு ஒரு உலகத்திற்கு போய் வந்த உணர்வை அவர் படங்கள் கொடுப்பது இதனால் தான்.



சரித்திர படமா! கூப்பிடு சாபுசிரிலை என்று சொல்லும் அளவுக்கு சிறைச்சாலை, ஹேராம் என்று பல சரித்திர படங்களில் சாபுசிரில் தனது கலைத்திறமையை காட்டியுள்ளார். அவரை பற்றியும், அவர் போட்ட செட்டுகளையும், இங்கே காணலாம். இயற்கை படத்தில் வரும் கலங்கரை விளக்கம், சாபு சிரில் போட்ட செட் என்றால், கடற்புரத்தில் வாழுபவர்களுக்கே ஆச்சரியத்தை கொடுக்கும்.



கமலின் அன்பே சிவம் படத்தை பல முறை பார்க்கலாம். ஒருமுறை பிரபாகரின் ஆர்ட் டைரக்‌ஷனுக்காக பார்க்கலாம். ஒரிஸாவில் வரும் மழை காட்சிகள் அனைத்தும் தண்ணீர் தொட்டி அமைத்து, சென்னையில் எடுக்கப்பட்டது. சிவனுக்குள் கம்யூனிசத்தை வைத்து ஓவியம் வரைந்த அரங்கு, சிலிர்க்க வைக்கும் பேருந்து விபத்து, உண்மை விபத்து என்றெண்ணி மக்களை உதவ வர வைத்த ரயில் விபத்து என்று படமெங்கும் ஆர்ட் டைரக்டர் தன் திறமையை காட்டியிருப்பார்.



மரபு ரீதியான தொடர்போ, என்னவோ சிம்புவின் படங்களில் செட் தற்போதைய ட்ரண்டிற்கு ஏற்ப குறிப்பிடத்தக்க அம்சத்தில் இருக்கும். மன்மதன் படத்தில் ராஜீவன் ரொம்ப சிம்பிளாக, அதே சமயம் ரொம்ப அழகாக பாடல்களுக்கு செட் போட்டிருப்பார். இது, வல்லவனிலும் தொடர்ந்தது. மற்றொருவர், கௌதம் மேனன். இவருக்கும் கைக்கொடுப்பவர், ராஜீவன்.



வெளிப்புறங்களில் போடப்படும் செட், இயற்கை கொடுக்கும் கூடுதல் அழகால், இன்னும் சிறப்பாக இருக்கும். வானம் கொடுக்கும் வண்ணம், செட்டிற்கு கொடுக்கும் எக்ஸ்ட்ரா சிறப்பை, இந்த புகைப்படங்களில் காணலாம்.

இந்த புகைப்படங்களில் உள்ளவை அனைத்தும் விஷால், ஸ்ரேயா நடித்து வெளிவரவிருக்கும் ’தோரணை’ படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக போடப்பட்ட செட்’டில் நான் எடுத்தது. இடம் : முட்டுக்காடு, சென்னை.

Saturday, April 18, 2009

எம்.ஆர்.ராதா - "நீங்க நல்லவரா, கெட்டவரா?"

ஒரு மனிதன் என்னதான் சமூகத்துக்காக உழைத்து இருந்தாலும், புதுமையான புரட்சியான கலைஞனாக இருந்தாலும், சில விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளாமல் இருந்தால், அவனுக்குரிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் போகலாம். அப்படி ஒரு கலைஞன் - எம்.ஆர். ராதா.

ராதாரவி ஒரு பேட்டியில் சொன்னார். “அவரு சமுதாயத்துக்காக எவ்ளோவோ பண்ணி இருக்காரு. கலையுலகில் பண்ணிய சாதனைகள் ஏராளம். இருந்தும் அவருக்கு ஒரு விழா எடுக்க முடியலை. அவர் பேருல விருது கொடுக்க முடியலை. எல்லாம் ஏன்? எம்.ஜி.ஆரை சுட்ட ஒரே காரணம்தான்”.

எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா ஏன் சுட்டாரு? எம்.ஆர்.ராதா எப்படிப்பட்ட ஆளு? என்னலாம் பண்ணி இருக்காரு? தெரிஞ்சுக்கணும்னா, தாராளமா படிக்கலாம், முகிலோட M.R. ராதாயணம். கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

நான் ஏற்கனவே முகில் எழுதிய சந்திரபாபுவோட வாழ்க்கை வரலாறு “கண்ணீரும் புன்னகையும்” படிச்சிருக்கேன். சந்திரபாபு பத்தி ஒரு புத்தகமா என்று ஆச்சரியத்துடன் வாங்கி படித்தது அது.

சிறு வயதிலேயே நாடக உலகத்தில் நுழைந்து விட்டார் ராதா. சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு வெவ்வெறு நாடக குழுக்களில் நுழைந்து, ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு நாடக குழுவை உருவாக்கினார். போட்ட நாடகங்கள் எல்லாம் ஹிட். ரத்த கண்ணீர் - சூப்பர் டூப்பர் ஹிட். பகுத்தறிவு கொள்கை உடன்பாடிருந்ததால், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரோடு நெருங்கி பழகினார். திராவிட உணர்வோடு கூடிய நாடகங்களை, அரசை எதிர்த்து நடத்தினார். பயங்கர அடிதடிகளுக்கிடையே நாடகங்களை நடத்தினார்.

சினிமாவில் அவர் ஆடியது, மூன்று இன்னிங்ஸ். முதல் இன்னிங்க்ஸில் ஒரு வெற்றியும் இல்லாமல், டக்கடித்து வெளியேறினார். இரண்டாவது இன்னிங்க்ஸில், ரத்த கண்ணீர் என்ற சதம். மூன்றாவது இன்னிங்க்ஸில், அவரது ஆல்-ரவுண்ட் பர்ஃபாமன்ஸை காட்டினார். வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று அடித்து ஆடினார். அரசியலில் ஈடுபாடு வைத்திருந்தார். சிலரை ரொம்பவும் பிடித்திருந்தது. சிலரை கொஞ்சமும் பிடிக்கவில்லை. காமராஜர் மேல் கொண்ட பாசத்தால் எம்.ஜி.ஆரை சுட்டார். தன்னையும் சுட்டு கொண்டார். இருவரும் பிழைத்தார்கள். ராதா ஜெயில் சென்றார். எம்.ஜி.ஆர். சில காலம் கழித்து முதலமைச்சர் ஆனார்.

ஜெயிலில் இருந்து வந்த பின்பு, சில படங்களில் நடித்தார். நாடகங்களிலும் நடித்தார். ஆனால், பழையபடி இல்லை. சாகும்வரை நடித்துக்கொண்டே இருந்தார். தமிழ் கலையுலகில் மறக்க முடியாத, மறைக்க முடியாத நட்சத்திரமாக மறைந்தார்.

தோணியதை பேசியும், எண்ணியதை செய்தும் வாழ்ந்த வெளிப்படையான பர்சனாலிட்டி.

கூத்தாடிகள் என்று கூறி கொண்டிருந்த நடிகர்களை, கலைஞர்கள் என்று கூறிப்பிடுவதை பற்றி,

“எங்கேயோ கூத்தாடுறோம். அத இங்க வந்து திரையில காண்பிக்குறான். நாங்களெல்லாம் கலைஞர்னு பேசறாங்க எல்லோரும். அது இப்ப வந்த பேரு. சமீபத்துல, எங்களுக்கெல்லாம் பணம் வந்தவுடனே கலைஞர்னு கொடுத்தாங்க. அது எவன் காசு வாங்கிட்டுக் கொடுத்தானோ, அதுவே எனக்கு தெரியலை.”

எம்.ஜி.ஆரை சுட்டதை பற்றி, ஜெயிலுக்கு சென்று வந்த பின், நாடகத்தில் சொன்னது,

“நான் எம்.ஜி.ராமச்சந்திரனைச் சுட்டேன். நான் சுட்டது தப்புன்னு பெருந்தலைவர், பெரியார்ல இருந்து ஊர்ல இருக்குற வேற யாராவது அறிக்கை விட்டாங்களா? ஏன் விடல?

ஆனா நான் சுட்டது தப்புன்னு என்னைப் புடிச்சு ஜெயில்ல போட்டான். ஏன் போட்டான்? ஏண்டா ஒழுங்கா சுடலைன்னு போட்டான். நான் என்ன பண்ணுறது? நான் எடுத்துட்டுப் போனது இந்தியன் பிஸ்டல். அவன் அதுலயும் கலப்படம் பண்ணுவான்னு எனக்கு எப்படித் தெரியும்? இல்லேன்னா நான் ஃபாரின் பிஸ்டலை எடுத்துட்டுப் போயிருப்பேன்.”

காரின் குறுக்கே வந்தவனை “விருந்தாளிக்கு பொறந்தவனே” என்று திட்டிய டிரைவரிடம்,

“கழுத, நாயின்னு திட்டு. விருந்தாளிக்குப் பொறந்த புள்ளைன்னு திட்டாத. ஏன் தெரியுமா? இதே ஊர்ல நாடகம் நடத்தறப்போ ரொம்ப வூட்லே விருந்து சாப்டிருக்கேன். ஓடினவன் என் புள்ளையாயிருந்தாலும் இருப்பான்”

எம்.ஆர்.ராதாவும் தன் வாழ்வில் எதையும் மறைத்ததில்லை. புத்தகத்தின் நாயகன் ஆயிற்றே என்று நூலாசிரியரும் எதை பற்றியும் மறைக்கவில்லை.

இந்த புத்தகம் எழுதியதற்காக முகில் உழைத்திருக்கும் உழைப்பு, புத்தகத்தை படிக்கும் போதே தெரிகிறது. எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறார். எத்தனை பேரை சந்தித்திருக்கிறார். அவர் பட்டிருக்கும் கஷ்டம், நம்மை இஷ்டப்பட்டு படிக்க வைக்கிறது. எம்.ஆர்.ராதாவை பற்றி பத்திரிக்கைத்துறையில் கூகிள் சர்ச் கொடுத்தால் என்ன கிடைக்குமோ, அதைவிட அதிகமான தகவல்கள் இந்த புத்தகத்தில் பெறலாம்.

இந்த புத்தகத்தில் உள்ள நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாதது என்றாலும், அடிதடிக்கிடையே நடந்த ராமாயணம் நாடகம், ஆரவாரத்துடன் வரும் ரத்த கண்ணீர் பேப்பர் சீன் போன்ற புகழ் பெற்ற விஷயங்களை படிக்கும்போது, மிகவும் ஆச்சரியமளித்தது. ஊடகங்கள் அக்காலத்திலேயே எவ்வளவு வீரியமாக இருந்தது என்றும், எதை எவ்வளவு சிறப்பாக ராதா பயன்படுத்தியிருக்கிறார் என்றும்.

கடவுள் பற்றியும், கடவுள் நம்பிக்கை பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்த எம்.ஆர்.ராதா கடைசி காலத்தில் பக்தி படங்களிலும் நடித்தார். கேட்டதற்கு,

“இதுவும் சினிமா. காசு கொடுக்கறாங்க. நான் நடிக்கறேன். அவ்வளவுதான்” என்றார்.

அவர் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், சாகும்வரை மனதளவில் நேர்மையானவராக, தைரியமானவராக வாழ்ந்து முடித்தார். புத்தகத்தை பற்றி “ஒரு காட்டாற்று வெள்ளத்தை கப் அண்ட் சாஸரில் ஏந்திக்குடிக்கிற முயற்சி மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

----

“உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்”

நா.முத்துக்குமார் எழுதியது, புதுப்பேட்டைக்காக.

Wednesday, April 15, 2009

யாருக்கு ஓட்டு போட?

நேற்று ரயிலில் வந்து கொண்டிருந்தேன். அப்ப, யாருக்கு ஓட்டு போடலாம்ன்னு ஒரு ஆழ்ந்த சிந்தனை. கிட்டத்தட்ட அரை தூக்கம்! இதுவரைக்கும் ரெண்டு தடவை ஓட்டு போட்டு இருக்கேன். ரெண்டு தடவையும் நான் ஓட்டு போட்ட ஆட்கள் தோத்து போயிட்டாங்க. ஜெயிச்சவங்களும் எதுவும் செய்ததில்லை. ஓட்டு போடாம விடலாம்ன்னு பார்த்தா, அதுவும் தப்புங்கறாங்க. என்ன செய்ய?

இந்த தேர்தலில் கட்சிகள் வேட்பாளர்களிடம் வெளிப்படையாக எதிர்ப்பார்த்த அம்சம், ‘எவ்ளோ செலவு பண்ணுவீங்க?’. ‘என் தொகுதி மட்டுமில்லாம பக்கத்து தொகுதிகளையும் பார்த்துக்கிறேன்’ன்னு சொன்னா, கண்டிப்பா சீட்டாம். எல்லாம் கோடிஸ்வர வேட்பாளர்கள். அதனால களத்துல, பணம் நல்லா புரளும்.

எத அடிப்படையா வச்சு ஓட்டு போடுறது?

கட்சி கொள்கையா? அப்படி ஒண்ணு எந்த கட்சிக்கும் கிடையாது.

நல்ல வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போடுறதுன்னா, எந்த கட்சியிலயும் நல்ல வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்கறது இல்லை. நல்ல கட்சிகாரர், நல்ல அரசியல்வாதி என்பதே முரண்பட்ட சொற்கள். சுயேட்சையா நிற்குற நல்லவர் யாருக்காவது (அப்படி யாராவது நின்றால்) ஓட்டு போடலாம் என்றால், அவர் ஜெயித்து என்ன பண்ணுவார்? எந்த கட்சிக்கும் சார்பில்லாமல், அவரால் எப்படி, என்ன செய்ய முடியும்? அந்த நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்வாரியான ஆதரவு இல்லாவிட்டால், ஸ்திரதன்மை இல்லாமல், நாட்டின் முன்னேற்றம் தான் பாதிக்கப்படும்.

யாருமே மெஜாரிட்டி இல்லாமல், நாடு தள்ளாடுவதற்கு பதில், எந்த திருடனாவது, பொறுக்கியாவது இருந்து நிலையா கொள்ளையடித்தால் என்ன? என்று தோன்றுகிறது. கமிஷன் வாங்கினாலும், கம்னாட்டி கன்ட்ரிக்கு எதாச்சும் பண்ணினா சரின்னு தோணுது.

நல்ல கட்சிகளும் கிடையாது, நல்ல தலைவர்களும் கிடையாது, நல்ல வேட்பாளர்களும் கிடையாது. ஆனா, ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணும். வாக்காளனுக்கு ஜனநாயகம் வைக்கும் செக். தோற்பது என்னவோ, இரண்டுமே தான்.

---

ரயிலில் சைடில் மூன்று பெர்த் வைத்துள்ளார்கள். எந்த கிறுக்கன் ஐடியா கொடுத்தானோ? இப்போது, அந்த திட்டம் வாபஸ் என்றார்கள். ஆனால், இன்னமும் இருக்க தான் செய்கிறது.

மேலே உள்ள இரண்டு பெர்த்களிலும், ஏறி உட்கார்ந்து படுக்க முடியாது. படுத்தவாறே ஏற வேண்டும். படுத்தவாறே இறங்க வேண்டும். இதற்கென்றே தனியாக பிராக்டிஸ் செய்து விட்டு பயணம் செய்ய வேண்டும்.

சின்ன குழந்தைகள், இளைத்த வாலிபர்கள் - இவர்களை தவிர வேறு யாராலும் சுலபமாக இதில் ஏறி படுக்க முடியாது. நான் பார்த்த வயதானவர்கள், பெண்கள் ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள். ரயிலில் அதிகம் பயணம் செய்பவர்கள், இவர்கள் தான்.

இதிலும் மேல் பெர்த்தில் படுக்கிறவர்கள், பேனுக்கு இணையாக படுக்க வேண்டும். கொஞ்சம் கூட காத்து வராது. அடிக்குற வெக்கையில் தூங்கவும் முடியாது. இறங்கவும் முடியாது. சாவுங்கடா! என்பது போல் ஒரு சித்திரவதை வடிவமைப்பு.

---

இந்த கொடுமைக்காகவே, பீகார் போயி லாலுவுக்கு எதிரா ஓட்டு போட தோணிச்சு. இப்படி ஒவ்வொரு விஷயத்துக்காகவும், ஒவ்வொரு கட்சிக்கு எதிரான மனநிலை இருக்குது. எந்த கட்சிக்கு ஆதரவாவும், எதிராவும் ஓட்டு போட்டு ஒண்ணும் ஆகிட போறதில்லை.

ஓ போடுங்கன்னு சிலர் சொல்லுறாங்க. அதனால என்ன நன்மை? அத போடுறது அவ்ளோ சுலபம் இல்லை. அதனால அதற்கு பெரும்பான்மை கிடைக்க போறது இல்லை. அப்படியே, சுலபமா ஆக்கிட்டாங்கனாலும், பெரும்பான்மை கிடைச்சாலும் என்ன நடக்கும்? திரும்ப தேர்தல் நடக்கும். உடனே, கட்சிகள் நல்லவங்கள கூட்டிட்டு வந்து நிறுத்திட போறாங்களா? எனக்கென்னமோ, இதனால எந்த பயனும் இருக்குறது போல் இல்ல.

ஒருமுறை எலக்‌ஷன் நடக்கணும். அதுல, ஒரு கட்சியோ, ஒரு கூட்டணியோ பெரும்பான்மை பெற வேண்டும். பின்பு, அது ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை கொடுக்க வேண்டும். எல்லாவகையிலும், அதுதான் நல்லது.

---

இன்னும் குழப்பத்துல தான் இருக்கேன்.

சறுக்கு வழுக்கி விளையாடும்போது, குழந்தைகள் நிறைய இருந்துதுனா, எல்லாம் மொத்தமா ஏறும். அதில் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு வழுக்கவா, வேண்டாமான்னு ஒரு தயக்கம் இருக்கும். பின்னாடி இருக்குற குழந்தைகள் கொடுக்குற பிரஷர்ல, ஒரு கட்டத்துல, வலுகட்டாயமா, சல்லுன்னு வழுக்கிட்டு வந்திடும்.

அப்படிதான் நடக்கும்ன்னு நினைக்குறேன். அதுவரைக்கும் யோசிச்சிட்டே இருக்கேன். :-)

Monday, April 13, 2009

ஆனந்த தாண்டவம்

ஆரம்பத்தில் சுஜாதா படம் போட்டபோது ரெண்டு பேரு கை தட்டினார்கள். அட! பரவாயில்லையேன்னு நினைச்சேன். அப்புறம் தமன்னா பேர் போடும்போது பத்து பேரு கை தட்டுனாங்க. அதானே?

இது ரொம்ப காலம் முன்பு விகடனில் வந்த தொடர்கதை. அத இப்ப படமெடுக்குறோம்னு என்னமோ பண்ணிட்டாங்க. தற்காலத்தில் வரும் இயக்குனர் இமயம், இயக்குனர் சிகரங்களோட பிளாப் படங்கள் போல் உள்ளது.

இயக்குனர் காந்தி கிருஷ்ணா, ஷங்கருக்கு ஒரு கை. இவர், ரொம்ப காலம் முன்பு எஞ்சினியர் என்று அரவிந்த் சுவாமி, மாதுரி தீட்ஷித் வைத்து ஒரு படம் ஆரம்பித்தார். அது தொடரவில்லை. பிறகு, செல்லமே. பலன், தமிழ் நாட்டிற்கு புரட்சி தளபதி கிடைத்தார். இன்கம் டாக்ஸ் சம்பிராதயங்கள் போன்றவற்றில் ஸ்ட்ராங் என்பதாலோ என்னவோ, சிவாஜியில் பணி புரிந்தார். இப்ப, ஆனந்த தாண்டவம். ம்ஹும்.

ஒரே ஆறுதல், ஆங்காங்கே வரும் வசனங்கள்...

மதுமிதா கதாபாத்திர அமைப்பு ரொம்ப இன்ட்ரஸ்டிங் ஆனது. தமிழ் படத்தில் பார்க்கும் போது என்னவோ போல இருக்கிறது. தமன்னா, நல்ல சாய்ஸ். கொஞ்ச காலம் முன்பு எடுத்திருந்தால், லைலா.

படத்தோட ஹீரோ, சித்தார்த் - தமிழ் சினிமாவில் ரவி கிருஷ்ணாவிற்கு கடும் போட்டியாக இருப்பார். ருக்மிணியும் அவர் பேசுறதும் அழகு.

படத்தோட டைமிங் சரியில்லை. ஆனா, நாவலை இப்ப படிச்சாலும் நல்லா இருக்கும்னு நினைக்குறேன். கொஞ்ச நாள் கழிச்சு, டிவியில பார்க்கலாம்.

படம் முடிஞ்சி வெளிய வந்த ஒரு குடும்ப பாங்கின் கமெண்ட் - கோர தாண்டவம்!

Monday, April 6, 2009

அயன் - ஒ.கே. Fine

படம் ஆரம்பத்துலேயே இது யார் படம்ன்னு பிரச்சினை. மெய்யப்ப செட்டியாரை காட்டுறாங்க. சன் பிக்சர்ஸ்ன்னு போடுறாங்க. பிறகு ஏவிஎம். அப்பால, கலாநிதி மாறன். ஒரு வழியா முடிவுல ஏவிஎம் மின் அயன். இவ்ளோ நேரமா எழுத்து போடுறது?

கடத்தல் கதை. புத்திசாலித்தனமா பல காட்சிகள். எவ்ளோ செலவு பண்ணி எடுத்தாங்களோ தெரியலை. ஆனா, நல்லா செலவு பண்ணி எடுத்த மாதிரி இருக்கு. ஆரம்ப காட்சிகள் ஜேம்ஸ் பாண்ட், ஜாக்கிசான் படங்களுக்கு நிகரானவை. முதல் பாதியில் இருந்த ஃபேஸ், இரண்டாம் பாதியில் இருந்த மாதிரி இல்லை.

கே.வி. ஆனந்தின் ஷங்கர் சகவாசம் படமெங்கும் தெரிகிறது. கடைசி காட்சியில் ஷங்கரையே கிண்டல் செய்திருக்கிறார். ஒளிப்பதிவு அவர் இல்லையென்றாலும், அவர் ஸ்டைலிலே இருக்கிறது. அருமை. அவரும் சுபாவுக்கும் சின்ன மைக், கெமிஸ்டரி இதிலெல்லாம் ஆர்வம் அதிகம் போல. கனா கண்டேனிலும் இதை எல்லாம் பயன்படுத்தியிருந்தார்கள்.

சூர்யா படமெங்கும் துள்ளி திரிகிறார். பாடல் காட்சிகளில் கொடுக்கும் எக்ஸ்பிரெஷன் எல்லாம் சலித்துவிடும் போல் உள்ளது. டிவியில் அவர் பிரமொட் பண்ணும் ஏர்செல், டிவிஎஸ், பெப்ஸி எல்லாவற்றையும் இதில் விளம்பரப்படுத்துகிறார். நல்லவேளை, ஜோதிகாவின் இதயம் நல்லெண்ணையை விளம்பரப்படுத்தவில்லை. கொடுக்குற காசுக்கு மேல கூவுகிறார். படத்தில் அவர் பெரிய புத்திசாலி, படிப்பாளி, கில்லி மாதிரி பறக்கிறார். நல்லா ஸ்கேட்ச் போடுகிறார். ஆனால், ரொம்ப அல்பமாக லவ் பண்ண ஆரம்பித்து விடுகிறார். வில்லனை மாட்டி விடுறதுக்காக ஒரு அப்பாவி பொண்ணு நாசமா போறத, ஹீரோ ஒண்ணும் பண்ணாம பார்க்கிறார் என்பது சறுக்கல்.

தமன்னா வழக்கமான ஹீரோயின் வேடத்தில். கொஞ்சம் லூஸ் போல நடிக்கிறார். பக்கத்து சீட் குடிமகன் கமெண்ட், ‘என்னபா, பல்லி மாரி கீது இந்த பொண்ணு’. கிரி வீரபாகு போல அவருக்கு அண்ணன், நம்ம நண்டு. இவருக்கு நல்ல வெயிட்டான கேரக்டர்.

படத்தின் பிளஸ் ஆக்‌ஷன் காட்சிகள், லொக்கெஷன். காங்கோ தெருக்களில் நடக்கும் முதல் சண்டைக்காட்சியில் சூர்யா மற்றும் சண்டை குழுவினரின் உழைப்பு அபாரம். ஆக்‌ஷன் ரசிகர்கள் விரும்புவார்கள்.

எவ்வளவு கடத்தல்கள், அதில் எத்தனை நுணுக்கங்கள் என்று யோசிக்க வைக்கும் கதைக்களம்.

பாடல்கள் பற்றி ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கிறேன்.

பிரபு குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் படங்களின் வெற்றி பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேன். சினிமாகாரர்களே, இந்த செண்டிமெண்டை கவனிங்க. தொடர்கிறது வெற்றி.

Sunday, April 5, 2009

என்கிட்ட ஓட்டு கேட்ட அத்வானி

ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருந்தது. பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸோ ஏர்டெல் ஸ்பெஷல் ஆஃபரோ வந்திருக்கும் என்று நினைத்து பார்த்தால், அத்வானிக்கு ஓட்டு போடணுமாம். பிஜேபிகாரங்க அனுப்பிருக்காங்க.

என்ன சொல்றாங்கன்னா,

---------------

BJP's Promise:

Terror-free India,
Hunger-free society,
Debt-free kisan,
Worry-free middle class.

3.5 crore families to benefit from income tax exemption for incomes upto Rs. 3 lakh p.a.

Student loans at 4%.

Advani for PM.

www.lkadvani.in

---------------

இனி விளக்கம் நான் சொல்றேன்.

ஃப்ரி சொன்னா நம்ம ஆளுங்க என்ன வேணா பண்ணுவாங்கன்னு நினைப்பு. பாருங்க, வரிக்கு வரி ஃப்ரி.

டெரர் ஃப்ரி இந்தியா - அப்படின்னா பிஜேபி ஆட்சிக்கு வந்திச்சுன்னா, இனி இந்தியாவுல இலவசமா டெரர் இருக்கும். அதாவது டெரரிஸம் தலைவிரிச்சு ஆடுமாம்.

ஹங்கர் ஃப்ரி சொசைட்டி - ஜீரணிக்க முடியாத படி பல விஷயங்கள் நடக்கும். ஜீரணிக்காத போது எப்படி பசி எடுக்கும்? அப்புறம், சொசைட்டி ஒரு பிளேட் எங்க கிடைக்கும்ன்னு கேட்க கூடாது.

டெப்த் ஃப்ரி கிஷான் - நல்லா வாசிங்க. இருக்குற கடன் விவசாயிகள போட்டு தள்ளிருமாம். பிறகு, விவசாயிகளும் இருக்க மாட்டாங்க. கடனும் இருக்காது.

வொர்ரி ஃப்ரி மிடில் கிளாஸ் - இது ரஜினியே ஸாரி, ஆண்டவனே ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்க முடியாது. வொர்ரி இருந்தாதானே மிடில் கிளாஸ்?

3.5 கோடி மக்களுக்கு வரி சலுகை கிடைக்கும். கண்டிப்பா. சம்பளம் குறைஞ்சா, தானா வரியும் குறையும். இருக்குற பொருளாதார பிரச்சனையில பல பேருக்கு சம்பளம் குறைஞ்சிருக்கு. குறைய போகுது. அதனால வரியும் குறையும்.

தேர்தல்ங்கறதால தான் ஆட்குறைப்பு செய்தியும், சம்பள குறைப்பு செய்தியும் வராம இருக்காம். கம்பெனிகளுக்கு மேல இருந்து உத்தரவு வந்திருக்காம். தேர்தலுக்கு பிறகு அதிர்ச்சிகள் இருக்குமாம்.

சரி, பிஜேபி பிரச்சாரத்துக்கு வருவோம்.

மாணவர்களுக்கு கல்வி கடன் நாலு பர்சண்ட் தானாம். அதாவது கடன் வாங்காம படிக்க முடியாதுங்கறாங்க.

சரி, பிஜேபிக்கு ஓட்டு போட்டுடுங்க, என்ன?

தவறவிட்ட அயன்

அயன் படம் பார்க்கலாம்ன்னு போனேன். லேட்டாக வந்து சதி பண்ணிய நண்பனால், டிக்கெட் கிடைக்கலை. பிளாக்குல நூத்தியம்பதாம். நாளைக்கு ஐம்பது ரூபாய்க்கு பாத்துக்கலாம்ன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.

அவ்ளோத்தான்.

Saturday, April 4, 2009

’பசங்க’களுக்கு ’சர்வ’ ’மரியாதை’

இப்ப தலைப்புல இருக்குற மூணு படங்களேட பாட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். ஆனா, இந்த மூணு படங்களிலுமே ஒன்றிரண்டு பாடல்கள் தான் எனக்கு பிடித்திருக்கு. அதான் அர்த்தமே இல்லாம இப்படி ஒரு தலைப்பு.

பசங்க

சுப்பிரமணியபுரத்திற்கு பிறகு ஜேம்ஸ் வசந்தம் இசையில் வெளிவந்திருக்கும் படம். டாக்டர், பால முரளிகிருஷ்ணன், ஒரு பாட்டு பாடியிருக்காரு, பாருங்க. சூப்பர்ப். ‘அன்பாலே அழகான வீடு’ என்று ஆரம்பிக்கும் பாட்டுதான் இந்த படத்தின் ‘கண்கள் இரண்டால்’. உண்மையான குழந்தைகளும், பால முரளிகிருஷ்ணன் என்னும் இன்னொரு குழந்தையும் பாடியுள்ள பாடல். அவர் குரலிலும் ஒரு மழலை உள்ளது. கேட்டுக்கிட்டே இருக்கலாம். ஆரம்பம் - இந்திரா ‘நிலா காய்கிறது’ மாதிரி இருக்குல்ல?

இந்த படத்தில் மொத்தம் நாலு பாடல்கள். மற்றதில், ’ஒரு வெட்கம் வருதே’ நல்லா இருக்கு. ஸ்ரேயா கோஷல். அது போதாது?

சர்வம்

பாட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. பில்லாவுக்கு பிறகு விஷ்ணுவர்த்தன்-யுவன் காம்பினேஷனில் வரும் படம். நான் கடவுளுக்கு (சிவா மனசுல சக்தி) அப்புறம் ஆர்யா நடித்துள்ள படம். லவ்-திரில்லர் சப்ஜெக்ட். ஏதொவொரு படம் பார்க்கும்போது தியேட்டர்ல ட்ரெய்லர் பார்த்தேன். சூப்பரா இருந்தது.




பாட்டுல ரொம்ப பிடித்தது, இளையராஜா பாடியுள்ள வெஸ்டர்ன் பாட்டு. ரொம்ப என்ஜாய் பண்ணி பாடியிருப்பாரு. யுவன் அப்பாவை நல்லா பயன்படுத்துறாரு. அப்புறம் விஜய் ஜேசுதாஸ் பாடியிருக்குற ‘சுட்டா சூரியனை’ பாட்டும் நல்லா இருக்கு. நடுவுல வருற ‘மேகம் கருக்குது மழை வர பார்க்குது’ பிட் சூப்பர். மத்தபடி வழக்கமான யுவன் பாடல்கள்.

தீம் மியூசிக், பாதி மெலடியாவும் மீதி மிரட்டல் அடியாவும் இருக்குது. படமும் அப்படித்தான் இருக்குமுன்னு இயக்குனர் சொல்லியிருக்காரு. ஆனாலும், பில்லா தீம் கிட்ட வராது.

எந்திரன் படத்துல பணியாற்றுவதாக சொன்ன இரண்டு பிரபலங்கள், இந்த படத்தில் இருக்காங்க. சக்ரவர்த்தி, வில்லனாக. ஒளிப்பதிவு - நீரவ் ஷா.


மரியாதை

விஜயகாந்த் பட பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு. ‘காதல் ஆராரோ’, ‘மூக்குத்தி முத்தழகு’, ‘தந்தன தந்தன தை மாசம்’ - இதெல்லாம் அவரு படத்துல எனக்கு பிடிச்ச பாடல்கள். விக்ரமன் - ராஜ்குமார் ஒரு பிரபலமான கூட்டணி. ஆனா, இதுல அவுங்க கிடையாது. ’நாக்க முக்க’ விஜய் ஆண்டனி. விக்ரமன் படத்துல யார் மியூசிக் போட்டாலும் ஒரே மாதிரிதான் இருக்கு. ராஜ்குமார், சிற்பி, ஜோஷ்வா, இப்ப விஜய் ஆண்டனி. ரஹ்மான் இசை எப்படி இருந்தது. ஞாபகம் இல்லை.

எனக்கு எம்.ஜி.ஆர். பாட்டுல ‘இன்பமே உந்தன் பேர்’ பாட்டு பிடிக்கும். இதுல அத ரீ-மிக்ஸ் பண்ணியிருக்காங்க. பாடியிருக்குறது - உதித். அவரோட ஹிந்தி உச்சரிப்பு - ஒரு மென்மையான குழந்தைத்தனமா இருக்குது. தமிழ் கொலை பஞ்சாயத்து வேற. இசை அடக்கமா இருக்குறதால நல்லா இருக்கு.

மத்ததெல்லாம் விக்ரமன் ஸ்டைல். அதுலயும் ‘அடடா அடடா’ன்னு ஒரு பாட்டு இருக்கு பாருங்க. நான் ஒவ்வொரு விக்ரமன் படத்துல இருந்தும் இந்த மாதிரி ஒரு பாட்டு எடுத்து காட்டுவேன்.

அப்புறம், விக்ரமன் படத்துல ஒரு பாட்ட ஹீரோ ஒரு தடவை, ஹீரோயின் ஒரு தடவைன்னு பல டைம் பாடுவாங்களே? இதுலவும் அப்படி ஒரு பாட்டு இருக்கு. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால்,

விக்ரமன் இன்னும் திருந்தலை. ஜாக்கிரதை.