Wednesday, September 1, 2010

நாட்டு சரக்கு - சேவைகளும் தேவைகளும்

எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடும்போது, ஒரு குற்ற உணர்வுடனேயே சாப்பிட வேண்டி இருக்கும். எந்த டாக்டர் எழுதிய கட்டுரை என்றாலும், எண்ணெய் உடம்புக்கு நல்லதல்ல, கொலஸ்ட்ரால், நெஞ்சு வலி என்று சொல்லிக்கொண்டே போவார்கள். இருந்தாலும், இதற்காக சாப்பிடாமலா இருக்க முடியும்? என்று ஒரு பயத்துடனேயே சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். அதிலும் தேங்காய் எண்ணெய் கூடவே கூடாது என்பார்கள். எங்கூர் பக்கம் ’மஸ்கோத் அல்வா’ என்றொரு தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட அல்வா பேமஸானது. தேங்காய் எண்ணெய் எச்சரிக்கையால் அதையும் பயத்துடனே சாப்பிடுவேன்.

இப்ப என்ன சொல்கிறார்கள் என்றால், தேங்காய் எண்ணெய் ரொம்ப நல்லதாம். பாக்டிரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் சக்தியையும், காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களை எதிர்க்கும் சக்தியையும் தேங்காய் எண்ணெய் நம் உடலுக்கு அளிக்குமாம். கொலஸ்ட்ரால், ஹார்ட் அட்டாக் எல்லாம் இதனால் வராதாம். இந்த பயத்தையெல்லாம் கிளப்பிவிட்டது, சோயா எண்ணெய் குரூப் என்கிறார்கள். எதை நம்புவது? இவர்கள் அமெரிக்காவில் 99% சதவித சோயாக்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்கிறார்கள். அய்யோடா!!!

எது எப்படியோ, இதையெல்லாம் படிப்பதைவிட்டு விட்டு, இட்லிபொடிக்கு எண்ணெய் ஊற்றி சாப்பிடலாம் என்றிருக்கிறேன்.

---

இந்த போன் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை. புதிதாக ஆப்பிள் ஐபோனில், ‘ஐ-ஸ்டதஸ்கோப்’ என்றொரு அப்ளிக்கேஷனை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் ஸ்டதஸ்கோப் இல்லாமலே, வெறும் ஐபோன் வைத்துக்கொண்டு இதயத்துடிப்பை பரிசோதிக்க முடியுமாம்.

விளையாட்டுக்காக லண்டனை சேர்ந்த பீட்டர் என்பவர் செய்த கண்டுபிடிப்பு, மருத்துவ உலகில் இப்ப செம ஹிட். 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதை டவுன்லோட் செய்திருக்கிறார்கள். நீங்களும் டவுன்லோட் செய்ய, இங்க போங்க.

இன்னும் இதை வச்சு என்னவெல்லாம் கண்டுப்பிடிக்க போறாங்களோ? வருங்காலத்தில் போனை காதில் மட்டும் வைக்காமல், வாயினுள், அக்குளில் எல்லாம் மக்கள் வைத்திருப்பார்கள். எந்த சந்தேகமும் வேண்டாம்! காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

---

மால்களில், ஜவுளிக்கடை வாசலில், கடை தெருவில், உதிர்த்த சோளத்தை மசாலாவுடன், மிளகுடன், எலுமிச்சை சாறுடன் கிண்டி ஒரு கப்பில் வைத்து விற்பார்களே? அது ரொம்பவும் லாபம் தரும் வியாபாரம் என்று நினைக்கிறேன். இது போன்ற ஸ்டாலில் நிற்கும் பையன், அவனுடைய சம்பளம் 5500 என்றான். ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப வேலை இருக்குமோ? வேறு ஏதும் வேலை உண்டா? என்று கேட்டதற்கு இல்லை என்றான். ஒரு நாளைக்கு 500இல் இருந்து 1000 ரூபாய் வரை விற்பனை ஆகும் என்றான். அது சரி, அப்ப இந்த சம்பளம் சரிதான் என்று நினைத்துக்கொண்டேன்.

பிஸினஸ் மஹாராஜாக்கள் ஆக நினைப்பவர்கள், இது பற்றி விசாரிக்கவும்.

---

சேவை துறையில் வாய்ப்புகள் அதிகமானாலும் ஆனது, புதுசு புதுசா யோசிக்கிறார்கள். எனக்கு சில நாட்கள் முன்பு வந்த ஒரு எஸ்.எம்.எஸ். இப்படி சொன்னது. “நீங்கள் ஊருக்கு செல்லும் போது, உங்கள் நாயை எங்களிடம் விட்டு செல்லுங்கள். நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். நீங்கள் ஊர் திரும்பும் வரை, நாயின் முழு பராமரிப்பும் எங்களுடையது. எங்களிடம் நாய் பிக்-அப் வசதியும் உண்டு. தொடர்பு கொள்ள-”.

வீட்டுல ஊருக்கு போனா, நாய்க்கு கூட கம்பெனி கொடுக்குறாங்கப்பா!

---

ஒருபக்கம் மூட சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் திறந்துக்காட்ட சொல்கிறார்கள். நமது அரசு துறைகளின் தகவல் பரிமாற்ற பாதுகாப்பு கொள்கைகளை சொல்கிறேன்.

ஆர்பிஐ போன்ற அமைப்புகள் பண பரிமாற்ற தகவல்களை மூடி மூடி அனுப்ப சொல்கிறார்கள். இதர பாதுகாப்பு அமைப்புகளோ, ரொம்பவும் மூடினால் எங்களால் திறந்து பார்க்க முடியவில்லை. திறந்து காட்டு என்று மிரட்டுகிறார்கள். பாவம் ப்ளாக்பெர்ரி. அடுத்து, ஸ்கைப்பும், கூகிளும் இவர்களிடம் சிக்க போகிறார்கள். ரொம்பவும் பாதுகாப்பாக தகவல்களை அனுப்பினால், எங்களால் உளவு பார்க்க முடியவில்லை. தீவிரவாதிகள் இதை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்கிறார்கள் என்பது அவர்கள் கவலை. திறந்து பார்க்க வசதி செய்து கொடுத்தால், இருக்கிற கஸ்டமர்கள் ஓடிவிடுவார்களே என்பது இவர்கள் கவலை.

தீவிரவாதிகளை விட மோசமான பரிமாற்றங்கள் எல்லாம் இச்சேவைகள் மூலம் நடைபெறுகிறது. உளவு பார்க்கிறேன் என்று அதை பார்க்க போகும் அதிகாரிகளை நினைத்து தான் என் கவலையெல்லாம்.

---

கீழே இருக்கும் படத்தை ஒரு ஹோட்டலில் பார்த்தேன். பக்கத்தில் இருந்த நண்பர், என்ன தெரியுது, என்ன தெரியுது என கேட்க, நானும் தெரிந்ததை எல்லாம் சொன்னேன். அவரும் அப்புறம் அப்புறம் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நடுவில் யாரோ வந்து காப்பாற்றியதால், தப்பினேன்.



இப்ப, என் முறை... உங்களுக்கு இந்த படத்தில் என்னவெல்லாம் தெரிகிறது? ஆங்... அப்புறம்... அப்புறம்...

.

3 comments:

ஞாஞளஙலாழன் said...

முன்பெல்லாம் நாயைக் காவலுக்கு வைத்திருந்தார்கள். இப்போது நாய்க்கும் காவல் தேவைப்படுகிறது.

Anonymous said...

மகேந்திரனின் இசை பக்கங்கள் அப்டேட் செய்து ரொம்ப நாளாகி விட்டது.

மீண்டும் எழுதுங்கள் ப்ளீஸ்

pichaikaaran said...

"உங்களுக்கு இந்த படத்தில் என்னவெல்லாம் தெரிகிறது?"

சொன்னா அடிக்க மாட்டீங்களே ?!!