Monday, July 13, 2009

ஆயிரம் தாமரை மொட்டுகளுடன் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஆயிரம் தாமரை மொட்டுகளுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

----

வைரமுத்துவின் தீவிர ரசிகரான நண்பர் மகேந்திரனின் பேனாவிலிருந்து...

எதையெல்லாமோ எழுதிவிட்டு இதை விட்டு விட்டால், அடுத்த ஜென்மத்தில் எனக்கு பாட்டு கேட்க காதுகள் இல்லாமல் போய்விடும். இசையில் இளமையான இசை என்று ஏதாவது உண்டா? பருவமடைந்த அடுத்த வருடம், ஊர்த்திருவிழாவில் கலந்து கொள்ள ஆவலாயிருக்கிற, தன்னை மட்டுமே எல்லோரும் பார்க்கப்போவதாய் வெட்கம் மிளிர்கிற குமரியின் செழிப்பு இந்தப்படத்தின் இசையில் இருக்கிறது.

அந்தக் கூட்டணி அப்படி.. இளமையான பாரதிராஜா, இன்னும் இளமையான வைரமுத்து, இவர்களுடன் ராஜா சகோதரர்கள்.

பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 1981ல் வெளியான "அலைகள் ஓய்வதில்லை". பாடல் "ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே"

கைத்தட்டல் ஒலியுடன் துவங்கி, மிருதங்கம் தொடர, உச்ச ஸ்ருதியில் சேர்ந்திசை குரல்கள் தொடர்ந்து, பின் மதியம் நல்ல வெயில் நேரத்தில், எதிர்பாராமல் சடசடவென்று பொழிந்து, ஓடி ஒதுங்குவதற்கு முன் சட்டென நிற்கும் மழைபோல, எல்லாமும் ஓய்ந்து ஒரு ரகசிய தொனியில் ஜானகி துவங்கும் ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு மயக்கம் பாடல் முழுவதுமே விரவியிருக்கும்.

படப்பிடிப்பு துவக்குமுன்பே பாடல் பதிவு முடிந்து விடும். முதலில் கதையில் ஒரு பிராமண வாலிபனுக்கும், இஸ்லாமிய யுவதிக்குமான காதல் பற்றிய கரு இருந்தது. எனவே வைரமுத்து "கோயிலில் காதல் தொழுகை" என்று எழுதியிருந்தார். பின்பு திரைக்கதையில் மாற்றம் வந்து கிறிஸ்துவப்பெண்ணாக முடிவு செய்யப்பட பிறகும். பாடல் வரிகளில் மாற்றம் செய்ய யாருக்கும் மனம் இல்லாமல் அப்படியே விட்டு விட்டார்களாம். (வைரமுத்துவின் நேர்காணலிலிருந்து).

கேட்கும் யாருக்குமே முதல் முறையிலேயே பிடித்துப்போகும் மெட்டு. என்னதான் மிருதங்கம், வீணை போன்ற உயர்குடி சமாச்சாரங்கள் இருந்தாலும், பாடலின் மெட்டு ஒரு நாட்டுப்புற கும்மிப்பாடலை சார்ந்திருக்கும். கங்கை அமரன் ராஜாவிடம் மனஸ்தாபம் கொண்ட காலங்களில், "அவர் என்ன பெரிய பாட்டு போட்டுட்டார், எங்க ஊருல முளைப்பாரி எடுக்கும்போது பாடுற கும்மி பாட்ட காப்பி அடிச்சார்.." என்று மூலத்தையும் பாடிக் காட்டினார். ராஜாவே இதை சொன்னாலும் இனி நம்மால் மனதை மாற்றிக்கொள்ள இயலாது தானே??

சேர்ந்திசை குரல்களுக்கென ஒரு மரியாதை கொடுத்தது ராஜாவின் காலத்தில் தான். அதன் ஒரு உதாரணம் இந்த பாடல். ஒரு பரிட்சார்த்த முயற்சியாக சரணம் ஆரம்பிக்கும் போது, வார்த்தைகள் இல்லாமல் ஹம்மிங்கில் துவங்கி பின்பு வார்த்தைகள் சேரும். முதல் சரணத்தின் முடிவில் ஒரு தனித்த வயலின் பகுதி, தொடரும் சேர்ந்திசைகுரல்கள். அதை படமாக்கியிருக்கும் விதம் காதலர்கள் நீருக்குள் நெருங்கி நிற்கும்போது, அவர்களை சுற்றி தாமரைப்பூக்கள் வட்டமிடும். இதற்காக பாரதிராஜாவின் உதவியாளர்கள் (மனோபாலா உட்பட) கையில் தாமரைப்பூவுடன் நீரில் மூழ்கி நடந்தார்களாம்.

இரண்டாவது சரணத்தில், ஹே..வீட்டுக்கிளியே.. எனும்போது பின்னணியில் ராஜா ஒரு குயில் கூவலை பயன்படுத்தியிருப்பார். கூடவே நம் மனதும் கூவும்.. இறுதிப் பல்லவியில், ஜானகி ஆயிரம் தாமரை என்று நிறுத்தி நநநந.. ஆயிரம் தாமரை, நநநந நநந நநந.. என்பார்.. பாடல் முடியப்போகிறதே என்று வருத்தமாயிருக்கும்.

வைரமுத்து பேனாவுக்குள் காதலை ஊற்றி எழுதியிருப்பார். இங்குத் தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று.. சமுத்திரத்தின் நீரெல்லாம் அணைக்கமுடியாமல் தோற்றுப்போகும் தீயை ஒரு மெல்லிய மலரின் தேன் என்னவென்று கேட்டுவிடும் சாமர்த்தியம் காதலில் மட்டும் தானே சாத்தியம்?மிக அழகான ராதா.. இளமையான கார்த்திக்.. ஒருமரத்தை தழுவியிருக்கும் விரல்கள் கோர்க்கும் போது பாடல் துவங்கும். பாடல் படமாக்கப்பட்டது நாகர்கோயில், இரணியல் அருகிலுள்ள ஒரு குளத்தில். என் நண்பனின் தந்தை, எப்போதெல்லாம் இந்தப்பாடலைப்பற்றி பேசுகிறாரோ அப்போதெல்லாம் பரவசப்படுவார், இருக்காதா பின்னே? அதே ஊரை சேர்ந்த அவர், ராதா குளித்த அதே குளத்தில் அவரும் குளித்திருக்கிறாரே..!!!


ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்..
இங்கிரண்டு ஜாதிமல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை..

ஹே.. கொத்துமலர் அமுதம் கொட்டும் மலரே
இங்குத்தேனை ஊற்று இது தீயின் ஊற்று..
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக்குடிக்கும்..

ஹே.. வீட்டுக்கிளியே கூண்டைவிட்டு தாண்டிவந்தியே..
ஒருகாதல் பாரம் ரெண்டு தோளில் ஏறும்..
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை..
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்வேளை..
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்..

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்..
இங்கிரண்டு ஜாதிமல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை..


பாடலைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

11 comments:

வால்பையன் said...

பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

Iniya: Mahendran ungalathu isai pakkangal miha inemaiya ullathu. ungal isai payanam thodara vaazhthukkal

Unknown said...

Iniya: Mahendran ungalathu isai pakkangal miha inemaiya erukku. ungal isai payanam thodara vaazhthukkal

மகேந்திரன் said...

நன்றி வால்பையன்

மகேந்திரன் said...

நன்றி இனியா

வந்தியத்தேவன் said...

இந்த காலத்தால் அழியாத பாடலை வைகை என்ற மொக்கைப்படத்தில் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நரேஷ் said...

மகேந்திரனின் விளக்கங்கள் ஒவ்வொன்றும் பாடலின் வெவ்வேறு பரிணாமங்களை எனக்கு சுட்டிக்காட்டுகிறது...

மிக அருமை!!!

சரவணகுமரன் said...

ஆமாங்க வந்தியதேவன்

சரவணகுமரன் said...

மகேந்திரன் சார்பில் நன்றி, நரேஷ்

மதன் said...

யான வர்றதப் பாருங்கடி..
அது அசஞ்சு வர்றதப் பாருங்கடி..
-இந்தக் கிராமியப் பாடல் கூட இதே மெட்டில் பாடுவார்களாம்.

நல்ல பாடல்.. நல்ல பதிவு!

Anonymous said...

You are a very smart person!

rH3uYcBX