Monday, December 7, 2009

பயணங்கள் முடிவதில்லை

ஒரு திருமணத்திற்கு கோவைக்கு ரயிலில் சென்று திரும்புவதாக திட்டம். செய்திகளில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் கடும் பாதுகாப்பு என்று சொல்லி எனக்குள் பரபரப்பை ஏற்றி இருந்தார்கள். போன நவம்பருக்கு பிறகு, ரயில் நிலையத்துக்கு செல்லும்போதெல்லாம் அங்கு அடுக்கி வைத்திருக்கும் மணல் மூட்டை, அதற்கு பின்னால் மெஷின் கன்னுடன் போலீஸ் போன்றவற்றை பார்க்கும் போது, கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். நமக்கு கற்பனை சக்தி வேற அதிகமா? கன்னாபின்னாவென்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். பின்ன, இதுக்கெல்லாம் கவர்மெண்ட்ட நம்பிக்கிட்டு இருந்தா, அவ்ளோத்தான். தப்பிக்கறதுக்கு நாம தான் யோசிக்கணும்.

தனி மனிதர்களின் கொள்கைகள், அவர்கள் சார்ந்த அமைப்புகளின் துவேஷ செயல்களாக வரலாற்று பயணத்தில் பதிவு செய்யப்படுவதின் பின்விளைவுகள், அதை பற்றி ஒன்றும் அறியாதவர்களையும் வருடங்கள் தாண்டி பாதிக்கிறது.

ரயில் பத்து மணிக்கு. நான் மெஜஸ்டிக் சென்றது ஒன்பதே முக்காலுக்கு. சீக்கிரம் எந்த ப்ளாட்பார்ம் என்று பார்த்துவிட்டு, அங்கு சென்று விடலாம் என்று டிஸ்ப்ளேயில் பார்த்துக்கொண்டிருந்தேன். என் ரயில் எண்ணை காட்டவேயில்லை. என்னங்கடா இது? இங்க நிக்குறது சேப் இல்லையேன்னு என்கொயரியில் கேட்டேன். அவர் ”இந்த ட்ரெயின் இங்கு வராது. யஷ்வந்த்பூர் போங்க” என்றார். எனக்கு நான் தான் தவறாக புக் செய்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். திரும்பவும், டிக்கெட்டை கூர்ந்து பார்த்ததில், எல்லாம் சரியாகத்தான் இருந்தது.

டிக்கெட்டை அவர் முகத்திற்கு நேரே காட்டி, ”என்ன இது?” என கேட்டதற்கு, ”டெக்னிக்கல் ப்ராப்ளம். அங்க போயி ஏறிக்கோங்க. பதினொரு மணிக்கு கிளம்பும்” என்றார். சரி, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே என்று பஸ்ஸில் ஏறி இருபது நிமிடத்தில் சென்று விட்டேன். அங்கு ரயில் ஏற்கனவே காத்துக்கொண்டிருந்தது. எல்லோரும் அவசர அவசரமாக ஓடி வந்து ஏறிக்கொண்டிருந்தார்கள்.

என் சீட்டில் ஒரு வயதான தம்பதி உட்கார்ந்திருந்தார்கள். வழக்கம் போல், என்னை மேலே போக சொன்னார்கள். சரியென்றேன். அவர் அவருடைய கதையை சொல்ல ஆரம்பித்தார். அவர் ஏற்கனவே பேப்பரில் இந்த இடமாற்றத்தை படித்துவிட்டாராம். நானும் டெய்லி பேப்பர் படிக்கத்தான் செய்கிறேன். ஆனால், இது போன்ற செய்திகளை கண்டுக்கொள்ளவே மாட்டேன். பரவாயில்லை, ரயில்வே ஒரு மணி நேரம் டைம் கொடுத்திருக்கிறார்களே என்ற என் நினைப்பில் கரும் புகையை அடித்துக்கொண்டு, ரயில் பத்தே முக்காலுக்கே கிளம்பியது. அங்கு ஒருவர் உட்கார்ந்து பதினோரு மணி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். கஸ்டமர் கேரிலும் அதைத்தான் சொன்னார்கள். அதை நம்பி எத்தனை பேர் ரயிலை விட்டார்களோ?

ஒரு மணி நேரம் லேட்டாக கிளம்பினாலும், சீக்கிரம் போயி சேர்ந்து, சேர்த்து விட்டார்கள்.

---

அன்றே திருமணத்தை முடித்துக்கொண்டு மதியம் இண்டர்சிட்டியில் கிளம்பினேன். ப்ளாட்பார்ம் டிக்கெட் கொடுக்கும் இடத்தில், ”பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ப்ளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது’ என்று போர்டு வைத்திருந்தார்கள். இரு தினங்கள் ப்ளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல், ரயில் நிலையத்திற்குள் சென்று வரலாமாம். என்ன லாஜிக் என்று தெரியவில்லை. இங்கும் மெஷின் கன், மெட்டல் டிடெக்டர் சகிதம் போலீஸ் நின்றார்கள்.

D1, D2... என்று எங்கேயுமே செகண்ட் சிட்டிங் கோச் நம்பர் எழுதவில்லை. S1, S2... இருக்குது, ஏசி கோச் இருக்குது, அன்ரிசர்வ்ட் இருக்குது. மிச்சம் இருக்குறது செகண்ட் சிட்டிங் என இருக்கிற பத்து நிமிடத்தில், அனாலிட்டிக்கலாக யோசித்து ஏறிக்கொண்டார்கள்.

கொஞ்ச தூரம் சென்று இருக்கும். நான் இருந்த கோச்சிற்கு பின்னால், ஏதோ கருகிய வாடை புகையுடன் கிளம்ப, சிலர் முன்னால் ஓடி வந்தார்கள். சில நிமிடங்களில் ரயில் நின்றது. ஓடிக்கொண்டிருந்த விசிறிகள் நின்றது. வந்து பார்த்த ரயில்வே பொறியாளர் ஒருவர், ரயிலுக்கு அடியில் சென்று என்னவோ செய்தார். ஏதோ கனெக்‌ஷன் ஷார்ட் ஆகியிருக்கிறது. முக்கால் மணி நேரம் லேட். பகல் என்பதால் கவனித்தார்கள். இதுவே, இரவில் ஸ்லிப்பர் கோச் என்றால்? மறுநாள் தலைப்பு செய்தியாகியிருக்கும்.

என் பக்கத்தில் இருந்தவர், அவர் ரயில்வே அனுபவங்களை சொல்லிக்கொண்டு வந்தார். ஒருமுறை, அவர் எடுத்த டிக்கெட்டில் இருந்த எண்ணுக்கு ரயிலில் சீட்டே இல்லையாம். போய் டிடிஆரிடம் கேட்டதற்கு, அப்படி இருக்காதே என்றாராம். பிறகு, வேறு ஒரு கோச்சில் உட்கார்ந்து வந்தாராம்.

இன்னொரு முறை (இந்த முறையும் தான்), பஸ் போல் சீட் அமைத்து இருந்ததால், காலை நீட்ட முடியாமல் நொந்து போய், அதை புகைப்படம் எடுத்து, ஈ-மெயிலில் கம்ப்ளெய்ண்ட் அனுப்பினாராம். ஒன்றும் பலனில்லையாம். ஒரு பதிவு போட்டிருந்தால், நாலு ஆறுதல் பின்னூட்டமாவது வந்திருக்கும்.

---

கோவையில் இருந்து, பெங்களூருக்கு இந்த இண்டர்சிட்டியில் வருவதாக இருந்தால், எதுவும் சாப்பிடாமல் வரவேண்டும். ரயிலில் இருக்கும் பேண்ட்ரி முழு பயன்பாட்டில் இருக்கிறது. வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, சமோசா, கட்லெட், பிரட் ஆம்லேட், டீ, காபி, தக்காளி சூப் என்று சுடச்சுட வரிசையாக வந்துக்கொண்டே இருக்கும்.

ஒருவர் பஜ்ஜி வாங்கிவிட்டு விலையை கேட்டு, ”என்ன இது? அதுக்குள்ள ஒரு ரூபாய் ஏற்றிவிட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். ”நானா சார் ஏத்தினேன்? ஐஆர்சிடிசி விலை சொல்லி விக்க சொல்றாங்க. நான் விக்குறேன்” என்று பதிலடி கொடுத்துவிட்டு சென்றார். கேட்க முடியற ஆள்கிட்ட கேட்குறாங்க. விக்குறவரு அவர் நிலைமையை சொல்றாரு. என்ன பண்றது? அமைதியா சாப்பிட வேண்டியது தான்.

எனக்கு இதுல வருற தக்காளி சூப் பிடிக்கும். மிளகு கொஞ்சம் தூக்கலா இருக்குறது, நல்லாயிருக்கும்.

---

சேலத்தை தாண்டிய பிறகு வருகிற மலை பிரதேசம், ரயிலில் இருந்து பார்க்கும் போது அழகாக இருக்கிறது. அதுவும், மலையொட்டி செல்லும் ரயிலை, ரயிலில் இருந்தே காணுவது சூப்பர்.

அங்கிருந்த கிராமங்களில் ஏதோ ஒரு மஞ்சள் நிற பூவை பயிரிட்டு இருந்தார்கள். மலைகளுக்கு நடு நடுவே, மஞ்சள் நிற திட்டுக்கள் பார்க்கவே அழகாக இருந்தது. ஒரு அகதி முகாமும் இருந்தது.

---

இது போன வாரம், திருச்செந்தூர் போகும்போது எடுத்த படம்.

போகும் வழியில் உள்ள ஆத்தூர் என்ற ஊரில் உள்ள இளசுகள் உல்லாசமாக குளித்துக்கொண்டிருந்த காட்சி. ஹி... ஹி... இரண்டு மூன்று வாழை மட்டைகளை ஒன்றாக சேர்த்து கட்டி, அதில் ஏறி படுத்துக்கொண்டு மிதந்து கொண்டிருந்தார்கள். ம்ம்ம்... என்ஜாய். என் நண்பன் நல்ல டைமிங்கில் எடுத்த படம்.முன்பு தேர்தல் சுவர் விளம்பரத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் வரைந்து வைத்திருப்பார்கள். இப்ப? இது திருச்செந்தூர் தொகுதி இடைதேர்தலுக்காக வரையப்பட்டிருந்த பிரச்சார சுவர் விளம்பரம்.ஒவியர் அருமையாக வரைந்திருந்தார். பழைய படி நிறைய சுவர் ஓவியங்களை காண முடிகிறது. சென்னை, பெங்களூர் முக்கிய சாலைகளின் உள்ள சுவர்களிலும் ஓவியங்கள் மிளிர்கிறது.

இது போன முறை, நானும் அழகிரியும் சென்னை சென்றிருந்தபோது (அதாவது நான் போன சமயம் அவரும் வந்திருந்தார்) எடுத்த படம். அப்போது எம்பி ஆகியிருக்கவில்லை.மக்களே, அப்படியே?

.

4 comments:

Jawahar said...

சுவாரஸ்யமான இடுகை. நானும் இன்டர் சிடியில் அந்த பஜ்ஜி, சூப் சுகங்களை அனுபவித்திருக்கிறேன். ரவா உப்புமாவே நல்லாத்தான் இருக்கும். ஆனா என்ன, நான் அந்த சுகத்தை ஹோசூர் வரைதான் அனுபவிப்பேன்!

http://kgjawarlal.wordpress.com

சரவணகுமரன் said...

நன்றி ஜவஹர் சார்...

anujanya said...

செம்ம சுவாரஸ்யம். இது போல் எழுதுங்கள்.

அனுஜன்யா

சரவணகுமரன் said...

நன்றி அனுஜன்யா