Wednesday, December 30, 2009

சரக்கும் சைடு டிஷ்ஷும்

ஆவுடையப்பன் முதுகில் போட்டிருந்த தோள் பையினுள், வோட்கா பாட்டிலும் பல்ப்பி ஆரஞ்சு பாட்டிலும் சண்டையிட்டு கொண்டிருந்தது. ஆவுடையப்பனுக்கு சொந்த ஊர், ராஜபாளையம். எம்சிஏ படித்து, சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் ஆகி ஏழு மாதங்கள் ஆகிறது. மனைவி லதாவை பிரசவத்திற்கு ஊரில் விட்டுவிட்டு, இன்று காலை தான் வந்தான். அலுவலகம் முடிந்து, இப்ப வீட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறான். வீட்டில் துணை இல்லையென்பதால், துணைக்கு ரெண்டு சங்கதிகளை வாங்கிக்கொண்டு செல்கிறான். வீட்டு பக்கத்தில் இருந்த ஹோட்டலில் நாலு புரோட்டாவும் வாங்கி கூட்டணி சேர்த்துக்கொண்டான்.உடை மாற்றிவிட்டு, ஹாலுக்கு வந்து பாயை விரித்தான். எல்லா கதவுகளையும் சாத்திவிட்டு, பைக்குள் இருந்த பாட்டில்களை எடுத்து வெளியே அடுக்கினான். வெள்ளை திரவத்தையும், ஆரஞ்ச் திரவத்தையும் சரி விகிதத்தில் கலந்து, கலக்கி மெதுவாக குடிக்க ஆரம்பித்தான்.

ஆவுடையப்பன் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல் மெகா குடிகாரன் இல்லை. கல்லூரியில் பழக்கமாகி, வேலையில் சேர்ந்தபிறகு பார்ட்டியில் கண்டினியூ செய்து, திருமணத்திற்கு பிறகு மனைவியின் பர்மிஷனோடு அவ்வப்போது குடிப்பவன். மாதத்திற்கு ஒருமுறை குடிக்கலாம் என்பது மனைவியின் கண்டிஷன். கண்டிஷன் ஏதுமில்லாதபோது, குடிக்க அவ்வளவு ஆர்வமில்லாதவனுக்கு, கட்டுப்பாடுகள் வந்தபின்பு தனியாக குடிக்கும் ஆசை வந்துவிட்டது. அதே சமயம், லதாவிடம் நல்ல பெயரையும் இழக்க விரும்புவதில்லை.

இப்போதுக்கூட வாங்கும்போது இருந்தபோது ஆர்வம், உட்கார்ந்து அடிக்கும்போது குறைந்துவிட்டது. லதாவின் முகம், வோட்காவில் தெரிந்தது.

ட்ரிங்... ட்ரிங்...

“ஹலோ”

“என்னங்க... ஆபிஸ்ல இருந்து வந்தாச்சா?”

“ஆமாம் டியர். இப்பத்தான்.”

“சாப்டாச்சா?”

“ம். இதோ. இப்பத்தான் வாங்கிட்டு வந்தேன்”

“ஏன்? கடையிலேயே சாப்டுட்டு வர வேண்டியது தானே?”

“இல்ல... அது வந்து...”

“என்ன...? வேற ஏதும் வாங்கிட்டு வந்தீங்களா?”

லதாவிடம் மறைக்க தோணவில்லை. உண்மையை சொல்லிவிட்டான்.

“ஏங்க?” கெஞ்சலாக குரல் ஒலித்தது.

“இல்லைம்மா. ஏதோ வாங்கிட்டேன். ஆனா, இப்ப குடிக்க தோணலை. நான் அப்படியே வச்சிட்டு தூங்க போறேன்.”

“ம்ம்ம்... சரிங்க... ஆனா சாப்டுட்டு தூங்குங்க...”

----

ஐந்து மாதங்களுக்கு பிறகு...

லதாவையும், குழந்தையையும் ஊரில் இருந்து கூட்டி வந்தவன், பைகளை பெட் ரூமில் வைத்துவிட்டு, லதாவை நேராக சமையலறைக்கு அழைத்து சென்றான்.

“என்னங்க? என்ன இருக்கு’ன்னு வந்ததும் இங்க இழுத்துட்டு வாரீங்க?”

”இங்க பாரு” - ப்ரிஜ்ஜை திறந்து உள்ளே இருந்த பாட்டிலை காட்டினான்.

“என்னங்க இது?”

“சொன்னேனில்ல... அன்னிக்கு வாங்குனது. அப்படியே வச்சிட்டேன்.”

“சரி. வாங்கினது வாங்கியாச்சு இல்ல... குடிச்சிட்டு தூர போடுங்க.”

“இல்ல... எனக்கு வேண்டாம். அப்படியே தூர போடு.”

“ஏங்க வேஸ்ட் பண்றீங்க? ஒரு தடவைதானே? குடிச்சிட்டு அந்த கண்றாவியை தூர எறிங்க”

“வேண்டாம்... வேண்டாம்... நானே போடுறேன்”

எடுத்து சமையலறை குப்பைத்தொட்டிக்குள் போட்டான்.

“என் ராசா...” நெட்டி முறித்தாள்.

---

குழந்தையுடன் வீட்டு வேலை பார்க்க முடியாது என்று வீட்டு வேலைகளை செய்ய, கண்ணம்மாவை வர சொல்லியிருந்தான். ஆவுடையப்பன் அலுவலகம் சென்றபிறகு கண்ணம்மா வந்தாள். ஜாயினிங் பார்மாலிட்டியை முடித்துவிட்டு, வீடு பெருக்க ஆரம்பித்தாள். குப்பையை அள்ளி எடுத்து சென்றவள், குப்பைத்தொட்டிக்குள் பார்த்து விட்டு,

“என்னம்மா இது?”

“எது?”

“இதோ” பாட்டிலை எடுத்துக்காட்டினாள்.

லதா ஒன்றும் சொல்லவில்லை.

“அய்யாவுக்கு இந்த பழக்கம் இருக்காம்மா?”

“ம்”

“எதுனாலும் இருக்கலாம்மா. இந்த பழக்கம் மட்டும் ஆகாதும்மா. பாத்துக்கோங்க” என்றபடியே குப்பைத்தொட்டியை எடுத்துக்கொண்டு வெளியே தட்ட சென்றாள்.

---

மாலை. கண்ணம்மா வீடு.

கண்ணம்மாவின் புருஷன் முருகன் கட்டிட வேலைக்கு சென்று விட்டு, அவளுக்கு முன்பே வீட்டுக்கு வந்துவிடுவான். கண்ணம்மா வீட்டுக்குள் நுழையும் போது, தரையில் படுத்துகிடந்தான்.

“மச்சான். எழுந்துரு. இங்க பாரு. உனக்கு என்னா கொண்டாந்திருக்கேன் பாரு”

“என்னடி?” - கண்ணம்மா கையில் இருப்பதை பார்த்து முகம் மலர்ந்தான். வோட்கா பாட்டில்.

“எங்காந்துடி இட்டாந்த?”

சொன்னாள்.

“செல்லம்டி நீ”

பாட்டிலை கையில் வைத்து சுற்றி சுற்றி பார்த்தவன், எழுந்து தண்ணீர் குடத்திற்கு பின்புறம் வைத்தான்.

“ஏன்யா குடிக்கலையா?”

“பெரிய சமாச்சாரம்டி. சும்மா அடிச்சா, நல்லா இருக்காது. நாளைக்கு கொஞ்சம் காசு கிடைக்கும். கறி, மிச்சரோட வாரேன்.”

---

இரவு சாப்பாட்டை முடித்து விட்டு, வாஷ்பேசினுக்கு கைக்கழுவ சென்ற ஆவுடையப்பன், குப்பைத்தொட்டியை பார்த்து விட்டு,

“லதா, அந்த பாட்டிலை வெளியே போட்டாச்சில்ல?”

“ஆமாங்க.”

---

மறுநாள் மாலை. முருகன் வேகவேகமாக வேலையை முடித்துவிட்டு, கன்ஸ்ட்ரக்‌ஷன் ஆபிஸில் பணத்தை வாங்கிவிட்டு, நேராக பாயின் கபாப் கடைக்கு சென்று சில்லி சிக்கன் வாங்கினான். பக்கத்தில் இருந்த கடையில், மசாலா கடலையும் மிக்சரும் பொட்டலம் போட்டுக்கொண்டான்.

வீட்டில் இன்னும் கண்ணம்மா வந்திருக்கவில்லை. கதவை உள்ளே சாத்திக்கொண்டான்.

பொட்டலங்களை பிரித்து வைத்துவிட்டு, குடத்தின் பின்புறம் இருந்த பொக்கிஷத்தை எடுத்து வந்தான். பாட்டிலுக்கு ஒரு முத்தம் கொடுத்தவன், மெதுவாக அதிலிருந்து டம்ளரில் ஊற்றினான். முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் பிரகாசம்.

அடுத்த கணம், டம்ளர் ஒரம் உதட்டில் பதிய, திரவம் தொண்டையில் பயணித்தது.

---

அதே நேரம்.

உடன் பணிபுரியும் ராஜூவுடன் பைக்கில் ஆவுடையப்பன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

”ஆவுடை! ஒரு கட்டிங் அடிச்சிட்டு போவோமா?”

“இல்லை ராஜூ! போன நாலஞ்சு மாசமா அடிக்கடி வீட்ல சரக்கு தான். பொண்டாட்டி ஊர்ல இல்லை. குழந்தை பிறந்த சந்தோஷம். இனி கிடையாது.” போலியாக சோகம் காட்டினான்.

“வீட்ல தெரியுமா?”

”தெரியும். நான் ஒரு உத்தமன்’ன்னு” - சிரித்தான் ஆவுடையப்பன்.

பிறகு, நடந்ததை எல்லாம் சொன்னான்.

“அப்ப கடைசி நாள் மட்டும் தான், அடிக்காம சரக்க அப்படியே ப்ரிஜ்ஜுக்குள்ள வச்சிட்டியா?”

“இல்லையே. அன்னிக்கும் அடிச்சேன். அடிச்சிட்டு வெறும் தண்ணியை ஊத்தி வச்சேன்.”

**********

டிஸ்கி - பின்னூட்டம் பார்க்கவும்.

.

12 comments:

சரவணகுமரன் said...

இந்த கதையில் வந்த கதாபாத்திரங்கள், சம்பவங்கள் (பெயர்கள் தவிர) அனைத்தும் உண்மையே. ஆவுடையப்பனிடம் முருகனுக்கு ஒரு குவாட்டராவது வாங்கி கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

Anonymous said...

நல்லா வக்கிறாய்ங்கய்யா ட்விஸ்ட்டு.

sathishsangkavi.blogspot.com said...

வாவ்.... நல்ல க்ளைமேக்ஸ்......

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............

Karthick said...

kalakura kumaraaa....hmm good one...our sirukathai eluthaalar udhayamaagiraar....

சரவணகுமரன் said...

ஹி ஹி... நன்றி வடகரை வேலன்.

சரவணகுமரன் said...

நன்றி சங்கவி...

உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சரவணகுமரன் said...

தேங்க்ஸ் கார்த்திக்...

Anonymous said...

Very nice.

lollalai said...

kalakkal!!!

cheena (சீனா) said...

அன்பின் சரவண குமர

அருமை அருமை - இறுதித் திருப்பம் எதிர்பாரா திருப்பம் - நச்சுன்னு இருக்கு

மிகவும் ரசித்தேன் - அனைவருமே நல்லவர்களாக இருக்கிறார்களே என நினைத்தேன் - ஆனால் அனைவருமே நடிக்கிறார்கள் எனத் தெரிந்தது.

நல்வாழ்த்துகள்

Kartheeswaran said...

nice story that too the climax is good...

Unknown said...

VERY NICE YOUR WRITING .
CONTINEU.........