Friday, December 18, 2009

வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா

"டேய்! என்ன பண்றதுன்னே தெரியலை. ஆபிஸ் வேலையை நினைச்சா கடுப்பா இருக்குது. வேலையை சொன்ன டைமுக்கு முடிக்கலைன்னு மேனேஜர் திட்டிட்டாரு”

“இவனுங்கள நம்ப முடியாது. அங்க இங்க’ன்னு என்னை உருட்டிவிட்டுக்கிட்டே இருக்காங்க”

“இந்த கம்பெனில சேர்ந்ததில் இருந்து, அவுங்க சொல்ற எல்லாத்தையும் செஞ்சிருக்கேன். ஆனா, நான் கேட்குற எதையும் அவுங்க தந்ததில்லை.”

இவையெல்லாம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் வருத்தப்பட்டு கூறி கேட்டவை. அவர்களுக்கு ஒரு புத்தகத்தை பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறேன்.

---

கேரன் ஒடாஸோ எழுதிய 'The truth about managing your career' என்னும் ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கத்தை ‘வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா’ என்ற பெயரில் பியர்சன் நிறுவனத்துடன் இணைத்து கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர், அக்கலுர் ரவி. ஒரு புது வேலையில் சேர்வதிலிருந்து வேறு ஒரு வேலைக்கு செல்லுவது வரை, ஒரு நிறுவனத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு நமது செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று இந்த புத்தகத்தில் ஆலோசனை கூறுகிறார் பிரபல நிர்வாகப் பயிற்சியாளர் கேரன் ஒடாஸோ.புத்தகம் படித்து தான் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. நாளடைவில் அனுபவத்தில் தெரிந்து கொள்ளக்கூடியது தான். இருந்தாலும், நிர்வாகத்துறையில் அனுபவஸ்தர் ஒருவர் கூறும்போது, உங்கள் செயல்பாடுகள் சரியனவா என்று உறுதி செய்துக்கொள்ள முடியும். பட்டு தெளிவதை விட, இது பெட்டர் தானே?

மொத்தம் 60 பார்முலாக்கள். அதாவது வேலையில் முன்னேற்றத்தைக் காண நம்மிடம் இருக்க வேண்டிய குணாதிசியங்கள் பற்றி அலசுகிறது இப்புத்தகம். உதாரணத்திற்கு சில,

நிறுவனத்தில் நல்ல பெயர் எடுக்க விரும்புபவர்கள், எதையும் மறுத்து பேச ரொம்ப தயங்குவார்கள். முடியாது என்றோ, இல்லை என்றோ எப்படி நாசூக்காக சொல்வது? எதற்காவது முடியாது என்று சொல்லிவிட்டால் அதற்காக வருத்தப்பட கூடாது. முடியாது என்று சொல்வதை உணர்வுபூர்வமான விஷயமாக எடுத்துக்கொள்ள கூடாது. அமைதியாகவும், சாதுரியமாகவும் ‘மறுப்பது’ ஒரு கலை. அதை கற்றுக்கொள்வது நீண்ட கால முன்னேற்றத்திற்கு அவசியம்.

சிலர், வேலையில் ‘டெட்லைன் டெட்லைன்’ என்று புலம்பிக்கொண்டு இருப்பார்கள். காலக்கெடு எவ்வளவு அவசியம் என்பது இவர்களுக்கு புரியும். காலக்கெடுவை தவறும்போது, தர்ம சங்கடங்கள் உருவாகும். தொடர்ந்து தவறும் போது, மதிப்பும் மரியாதையும் கெடும். வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது, எதிர்பாராதவை நிகழும். எவ்வளவு முயன்றும் சொன்ன நேரத்தில், செய்ய முடியாமல் போகும். அந்நேரங்களில் சம்பந்தப்பட்டவரிடம் முன்னெச்சரிக்கையாக நிலவரத்தை சொல்லிவிட வேண்டும். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புது தேதியை முடிவு செய்ய முயல வேண்டும். நம்முடைய ஒவ்வொரு உறுதிமொழியிலும், நம்முடைய நேர்மை பரிசோதிக்கப்படுகிறது. இவரை நம்பமுடியாது என்ற பெயர் ஏற்பட்டுவிட்டால், அதை சுலபத்தில் மாற்ற முடியாது.

பதவி உயர்வு என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. முதல் விஷயம். பதவி உயர்வுக்கான அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். பிறகு, ஆர்வமுடன் நாமாகவே சில காரியங்களில் ஈடுபட வேண்டும். உதாரணத்திற்கு, மேலதிகாரியின் சிரமம் குறைக்கும் வேலைகளை செய்யலாம். உங்கள் டீம் மேலும் சிறப்பாக செயல்பட, என்ன செய்யலாம் என்று யோசித்து அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். இப்படி சில.

வேலை மாறும் எண்ணம் வரும்போது, என்னன்ன யோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். நாலு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். முன்னிலையில் இருப்பது, பாதுகாப்பாக உணர்வது, சுதந்தரமாக வேலை செய்வது, உயர்நிலையை அடைவது. இதில் எது முக்கியம் உங்களுக்கு? இப்படி உங்களால் ஒரு புது வேலையை தேர்வு செய்யமுடியவில்லையென்றால், என்ன தேவை, என்ன தேவை இல்லை, என்ன வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போடவும். அதை படிக்கும்போது, உங்கள் தேவையை பற்றிய பார்வை கிடைக்கும். அதை உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், ஒரு தெளிவு கிடைக்கும்.

ஊடகமே செய்தி. அதாவது என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம். மூளைக்குள் செலுத்தப்படும் செய்திகளின் மாறுபட்ட தன்மைக்கேற்ப மூளையை நாம் பயன்படுத்துகிறோம். பிடித்த முறையில் செய்திகள் வந்தால், மூளை முழுக்கவனத்துடன் இயங்கும். விரும்பாத நிலையில் செய்திகள் வந்தால், மூளை கண்டுக்கொள்ளாது தியான நிலைக்கு சென்றுவிடும். அதனால், யார் யாருக்கு எப்படியெப்படி விஷயங்களை பரிமாறி கொள்வது, அவர்களது நடவடிக்கைகளை கொண்டு அவர்களுடன் எப்படி பேசுவது என்று ஆசிரியர் விளக்குகிறார்.

இந்த புத்தகம் படிக்கும்போது, கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களில் கண்டிப்பாக எங்கேனும் உங்களை உணர்வீர்கள். நாம் அந்த சூழ்நிலையில் என்ன செய்திருப்போம்? சில நேரங்களில், ஆசிரியர் சொல்வதை போலவே செய்திருப்போம். ஆனால், பெரும்பாலும் நாம் செய்ய மறந்ததை காரணங்களுடன் விளக்கி நமக்கு நினைவுட்டுகிறது இப்புத்தகம். கிட்டத்தட்ட நாம் சந்திக்கும் எல்லா நிலைகளையும் குறிப்பிட்டு இருப்பதால், வாங்கி ஒரே மூச்சில் படித்து முடிக்கும் புத்தகம் என்பதை விட, அவ்வப்போது தேவையான சமயங்களில் எடுத்து வாசிக்க ஏற்ற புத்தகம்.

வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா
டாக்டர் கேரன் ஒடாஸோ
192 பக்கங்கள்
ரூபாய் 125
கிழக்கு பதிப்பகம்


.

4 comments:

ஜோதிஜி said...

முடியாது என்று சொல்வதை உணர்வுபூர்வமான விஷயமாக எடுத்துக்கொள்ள கூடாது. அமைதியாகவும், சாதுரியமாகவும் ‘மறுப்பது’ ஒரு கலை. அதை கற்றுக்கொள்வது நீண்ட கால முன்னேற்றத்திற்கு அவசியம்.

அற்புதம்

சரவணகுமரன் said...

நன்றி ஜோதிஜி

Jameel said...

நடை எப்படி இருக்கிறது சரவணன் ? மொழி மாற்றம் செய்யப்பட்ட புத்தகம் என்பதால் கேட்கிறேன். தகவலுக்கு நன்றி .

- ஜமீல்

சரவணகுமரன் said...

ஜமீல்,

எளிமையான நடை தான்... இது போன்ற புத்தகங்களுக்கே உரிய நடை..