Sunday, December 27, 2009

ரவிக்குமார் - சேரன் ’கல கல’ & ‘லக லக’

தமிழ் சினிமாவில் நல்ல படம் கொடுக்க வேண்டும், மெஸெஜ் சொல்லவேண்டும் என்ற நேர்மையுடன் படம் எடுக்கும், எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் - சேரன். இப்ப, முழுக்க முழுக்க சீரியஸாக படமெடுக்கும் இவரின் ஆரம்ப படங்களில் உள்ள நகைச்சுவை காட்சிகள், பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைப்பவை. ’பாரதி கண்ணம்மா’வில் ஆரம்பித்த பார்த்திபன் - வடிவேலு ட்ரெண்ட் ஆகட்டும், ’வெற்றிக்கொடி கட்டு’ துபாய் ரிட்டர்ன் வடிவேலு காமெடியாகட்டும் யாரும் மறக்க முடியாதவை.


சேரன், ஆனந்த விகடனில் எழுதிய ‘டூரிங் டாக்கீஸ்’ தொடரிலும், அவர் படங்களை போல, உணர்ச்சிமயமான சோக அத்தியாயங்கள் நிறைந்து இருந்தாலும், நடுநடுவே சிரிக்க வைக்கும் பகுதியும் உண்டு. அப்படி நான் வாசித்து சிரித்த சில இடங்கள்...

---

சேரன் சினிமாத்துறையில் நுழைந்தது, அவருடைய உறவினர் ஒருவருடைய தயவில். அந்த உறவினர் ப்ரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றிய நிறுவனத்தில் சேரன் எடுபிடி வேலைகள் செய்துவந்தார். அப்போது அவர்கள் கவுண்டமணியை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுத்து வந்தார்கள்.



கவுண்டமணி வரும்போது, எல்லோரும் மரியாதையாக எழுந்து நின்று வணக்கம் சொல்வார்களாம். பதிலுக்கு, ஒன்றும் சொல்லாமல் போய்விடுவாராம் கவுண்டமணி. சில நாட்கள் குஷி மூடில் இருக்கும் போது மட்டும், “கொக்கமக்கா வணக்கங்கோய்!” என்பாராம்.

ஒருமுறை கவுண்டமணிக்கு தலை வலித்திருக்கிறது. சேரனை அழைத்து,

“தலை ரொம்ப வலிக்குதுடா தம்பி. என் தலையைக் கழட்டித் தர்றேன். கொஞ்ச நேரம் வச்சிருக்கியா?” என்றிருக்கிறார்.

சேரனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. ஹா ஹா என்று சிரித்தவரை, கவுண்டமணி,

“அடேய் எள்ளுருண்டைத் தலையா! உன் சம்பாத்தியத்துல ஒரு சாரிடான் வாங்கிட்டு வாடா!” என்று சொல்ல, இவரும் மகிழ்ச்சியுடன் வாங்கி வந்திருக்கிறார். கவுண்டமணிக்கே மாத்திரை வாங்கி கொடுத்தவன் என பெருமையுடன் இருந்திருக்கிறார்.

---

கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு செல்வதற்கு முன்பே, அவரிடம் ப்ரொடக்‌ஷன் ஆளாய் சேரனுக்கு அறிமுகம் இருந்தது.

“வணக்கம் சார்” - சலாம் போட்டார் சேரன்.

“அதாம்ப்பா கம்பெனி ஆளுங்களே இருக்காங்களே. நீ வேற எங்கியாச்சும் ட்ரை பண்ணேன்.”

”இல்ல சார். நான் உங்ககிட்ட அஸிட்டெண்ட்டா சேர வந்தேன்.”

சிரிப்புடன், “பார்றா”

வேகமாக “நிறைய கதை வெச்சிருக்கேன் சார்”

”எங்க சொல்லு பார்ப்போம்”

”கட் பண்ணா சார், ஓப்பன் பண்ணா சார், ஜூம் பண்ணா சார்” என அடித்து விட, ரவிக்குமார் சிரித்துக்கொண்டே அதை ரசித்தார்.

அவர் முடித்தப்பிறகு, அவரை சுற்றி இருந்த உதவியாளர்களிடம், “ஓகே... ஏய்! இவனுக்கும் கொஞ்சம் இடம் குடுங்கப்பா” என்று அவருக்கே உரிய கிண்டலுடன் சொல்ல,

சேரன் உடனே, ”ரொம்ப தாங்க்ஸ் சார்” என மறுபடியும் சலாம் போட.

ரவிக்குமார் ”ஒரு நாளைக்கு ஒரு கும்பிடுதான் அலவ்டு” என்றார் ஸ்ட்ரிக்டாக.

---

புரியாத புதிர் படத்தில் சேரன் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். ஜஸ்ட் இரண்டே விநாடிகள் ப்ரேமில் வருவார். ஆனால், அதற்கே துள்ளிக்குதித்திருக்கிறார்.

டைட்டிலில் உதவி இயக்குனராக பெயர் போட, “சேரன்னு போட்ரலாம்லடா” என கேட்டிருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.

இவர் தயக்கத்துடன் நிற்க, “என்னடா, ஏதோ கருத்து சொல்ல விரும்பறே போலிருக்கே?” என அவர் கேட்க,

சேரன் சொன்னது, “இல்ல சார். எம் பேரை இளஞ் சேர ராஜன்’னு போடுங்க சார்”.

“ஓ! அது தான் உன் முழு பேரா?”

”இல்ல சார்... பாரதிராஜா, இளையராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன்’னு ராஜா பேரு வெச்சவங்க தமிழ் சினிமாவுல ஹிட்டு சார். அதான் ஒரு எபெக்டுக்கு...” என இழுக்க,

“டேய்... இவன் சொன்ன மாதிரியே போட்ருங்கப்பா. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ராஜா வந்துட்டாரு...” என சவுண்ட் விட்டு இருக்கிறார் ரவிக்குமார்.

---

இரண்டாவது படம் முடிவதற்கு முன்பே, ஒரு அசட்டு தைரியத்தில் தனியே படம் இயக்கிவிடலாம் என்று நினைத்து ரவிக்குமாரிடம் சென்றார் சேரன்.

“என்ன?”

“நான் தனியா ஒரு படம் பண்ணலாம்ன்னு இருக்கேன் சார்”

அதிர்ச்சியுடன், “டேய்! என்னடா சொல்றே?”

“ஆமா சார். சரத் சாரை வச்சு ஒரு படம் பண்ணலாம்’ன்னு இருக்கேன். ஒரு புது தயாரிப்பாளர் பேசி வச்சிருக்கேன்”

“டேய்... உனக்கு என்னடா தெரியும்? அதுக்குள்ள படம் எடுக்க போறேங்குற?”

“நல்ல சப்ஜெக்ட் சார்”

”கதை கெடக்கட்டும். அதை எடுக்க தெரியுமாடா உனக்கு?”

”அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிருவேன் சார்”

“என்னது? அட்ஜஸ்ட் பண்ணிருவியா?”

”டிசைட் பண்ணிட்டேன் சார். அதான், உங்ககிட்ட சொல்லிரலாம்’ன்னு...”

“சரி. என்னவோ பண்ணு. நல்லா இரு.” போய்விட்டார்.

ஒரு வருஷம். நிஜ உலகம் புரிந்து, ஒன்றும் நடக்காமல், சாப்பாட்டுக்கே வழியில்லாமல், பசி தாங்காமல் ரவிக்குமாரிடம் வந்து விழுந்தார் சேரன்.

“வாங்க டைரக்டர் சார்”

“என்னை மன்னிச்சிருங்க சார்”

”வா, வந்து உக்காரு. என்ன பண்ண? வயிறு சொல்லிக் குடுத்தப்புறம் தான் சில பேருக்கு வாழ்க்கை புரியுது” என்றபடியே சாப்பாடு போட்டார் கே.எஸ். ரவிக்குமார்.

.

10 comments:

sampath said...

சேரன் இன்றும் ஒரு நல்ல டைரெக்டர் தான். அவர் நடிக்காமல் இயக்க மட்டும் செய்தால் படம் நன்றாக இருக்கும். தேசிய கீதம் என்று ஒரு நல்ல படம் எடுத்தார். ஆளும் கட்சி எதிர்ப்ப்பால் படம் வணிகரீதியாக நன்றாக ஓட வில்லை. ஆனால் நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் ஒரே படத்தில் சொல்லி இருப்பார். கசப்பு மருந்துதான். என்ன செய்ய ?
அந்த படம் பார்க்க விரும்பினால்...

http://broadband.bigflix.com/bigflicks/faces/jsp/viewFreeMovie.jsp;jsessionid=F458B563DE7F8E67F04D25FC494E5281.node2?titleId=2549

க‌ரிச‌ல்கார‌ன் said...

//வயிறு சொல்லிக் குடுத்தப்புறம் தான் சில பேருக்கு வாழ்க்கை புரியுது//

அதே

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

சேரன் கூடவே இருந்த மாதிரி சொல்லி
யிருக்கிங்க...

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

சேரனின் ஆரம்ப கால படங்களில் ஒரு கருத்தாண்மை இருக்கும். நகைச்சுவையும் நன்றாகவே இருக்கும். தற்போதைய சேரன் படங்களில் சோர்வு அதிகம் காணப்படுகிறது. நகைச்சுவை மிஸ்ஸிங்.

படத்தைப் பார்க்கும்போது கொட்டாவி வராமல் எடுக்க சேரன் முன் வர வேண்டும். அவருக்கும், பதிவிட்ட உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துகள்
by
டெக்‌ஷங்கர் @ TechShankar

கணேஷ் said...

எங்க இருந்து இந்த டீட்டெயில்ஸ் எல்லாம் பிடிக்குறீங்க பாஸ்

சரவணகுமரன் said...

நான் எதிர்பார்த்து பார்த்த படம் - தேசிய கீதம். எனக்கு பிடித்திருந்தது.

சரவணகுமரன் said...

வாங்க கரிசல்காரன்

சரவணகுமரன் said...

தமிழ் வெங்கட்,

சேரன் சொன்னதை கண்களால் copy செய்து, விரல்களால் paste செய்திருக்கிறேன். அவ்ளோத்தான்.

சரவணகுமரன் said...

கரெக்ட் டெக்‌ஷங்கர்...

போக போக, ஸ்லோவாகிக்கொண்டே போகிறது.

சரவணகுமரன் said...

கணேஷ்,

சேரன் எழுதிய டூரிங் டாக்கீஸில் இருந்து தான்.