Tuesday, December 15, 2009

கல்யாணம் முடிச்சி வெய்ங்கப்பா...

மகேந்திரனிடமிருந்து...

---

இரட்டை பின்னலும், தாவணியுமாக வளைய வரும் குமரிகள் நிரம்பிய ஊரில், கழனியோட்ட அப்பனும், களை பிடுங்க அம்மாவும் போனவுடன் ஆடு, கோழி, மாடுகளை ஆனமட்டும் பார்த்த பின்பு, சோட்டு பெண்களை கூட்டு சேர்த்து தோப்புகளிலும், படித்துறைகளிலும் பேசும் கதை என்னவாக இருக்கும்?

புரிந்தும் புரியாமலும் நிற்கும் பருவம், புரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கும்... எப்போது, எப்போது என்று ஆவலாய் காத்திருக்கும் மனது வண்ணக்குவியலாய் சிறகு விரித்து ஊரைச்சுற்ற கிளம்பும்...

எங்க இருக்கானோ? எப்ப வருவானோ? எனக்கிருக்கும் அதே சுமை தானே உனக்கும்? ஒத்த வயது பெண்களுடன் பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கம்...



1986 ல் ராஜாவின் இசையில் வெளியான "அறுவடை நாள்".
பாடல் : ஓலக்குருத்தோல காத்துல ஆடுது...
கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிக அழகானதொரு பாடல்.

கங்கை அமரனின் வரிகளை பாடியிருப்பது இசைத்தாரகை ஜானகி... வித்தியாசமானதொரு இசையுடன் துவங்கும் பாடல், கோரஸ் பெண்களின் லல லல்ல லாலாலா.. வுடன் ஆரம்பிக்கும். அதை குழலோசை தொடர்ந்து கொண்டே வரும்... ஜானகி துவங்குவார்.

வெகு துள்ளலான மெட்டு... தபேலா இசை... வரிகளில் ஏக்கம் தொனிக்கும்.

யாரும் சேர்த்து வைக்காமலே
இந்த காற்றும் பூவும் சேர்ந்து கொள்கிறதே...
நாம மட்டும் ஏன் காத்திருக்கணும்?


சரணத்தின் முதல் இரண்டு வரிகளை ஜானகி பாடுவார்... அதையே கோரஸ் பெண்கள் திரும்ப (repeat ) பாடும் போது, விடுங்கடி நானே பாடிடுறேன்... என்பது போல இரண்டாம் முறையும் அவரே பாடுவார். சரணத்தின் இறுதியில் "மேகம் ஒரு ஈரச்சேலை" என்று அவர் பாடும் போது பின்னால் கோரஸில் வெறும் "ம்ம்ம்ம்..." வருவது அட்டகாசமாயிருக்கும்.

முதல் சரணம் முடிந்த பின் வரும் இசையில்... படத்தில் அந்த பெண்களெல்லாம் ஒருவர் பின் ஒருவர் நின்று ரயில் விடுவார்கள்... அதற்கு ராஜா வெறும் கோரஸ் குரலின் ஹம்மிங்கிலேயே ரயிலோசை கொடுத்திருப்பார். ரயிலின் சைரன் ஒலிக்கு வயலின் பயன்படுத்தியிருப்பார்... படத்தில் பார்க்க இன்னும் அழகாக இருக்கும்.

பின்பு இரண்டாம் சரணம் துவங்கும்.

"மல்லிகையும் பூத்தாச்சு... அல்லியும் தான் பூத்தாச்சு...
கன்னிப்பொண்ணு தான் காத்திருந்து பாத்தாச்சு..."


இந்த வரிகளை கண்டு வியந்திருக்கிறேன். எத்தனையோ பூக்களிருக்க, எதற்கு இந்த அல்லியும், மல்லிகையும்? "செண்பகமும் பூத்தாச்சு.. செவ்வரளி பூத்தாச்சு" என்று
எழுதினால் கூட சந்தத்தில் இடிக்காமல் உட்காரும் தான். ஆனால் இந்த கருமம் இருட்டின பின்தானே வந்து தொலைக்கிறது, அல்லியும் மல்லிகையும் இரவில் மலர்வதை போல...

எப்படியிருக்கிறது? இன்னும் அது ஜானகி குரலில் எப்படியிருக்கும்?

"உலகம் முழுதும் பருவத்து கோலம்... மனது முழுதும் கனவுமயம்..." என்பதை கேட்கையில், யாருப்பா அது, இவங்களுக்கெல்லாம் மொதல்ல கல்யாணம் முடிச்சி வெய்ங்கப்பா என்று அலறத்தோன்றும்.

இதில் நான் எதையுமே மிகையாக சொல்லவில்லை என்பது இன்று இரவு இந்த பாடலை நீங்க தேடிப்பிடித்து கேட்ட பின்பு அறிவீர்கள்...



ஓலக்குருத்தோல காத்துல ஆடுது... கண்ணனத்தேடுது...
வாழ இள வாழ வாசலில் ஆடுது, வேளையக்கூறுது./.
கதைகதையாம் காரணமாம்
கல்யாணத்தோரணமாம்... காத்தாடுது...

சந்தனத்த பூசாம சம்மந்தத்த பேசாம
சேர்ந்தது என்ன காத்தும் பூவும் கூசாம?
இதுவும் பொதுவா இலக்கியம் தானே?
இயற்கை எழுதும் இலக்கணமோ?
மேகம் ஒரு ஈரச்சேல வானத்துல காயப்போட...
தூறும் மழைச்சாரல் போல தினமும்
அதிசயம் நடக்குது...

மல்லிகையும் பூத்தாச்சு அல்லியும்தான் பூத்தாச்சு
கன்னிப்பொண்ணு தான் காத்திருந்து பாத்தாச்சு...
உலகம் முழுதும் பருவத்து கோலம்...
மனது முழுதும் கனவு மயம்...
பொண்ணு இவ சின்னப்பொண்ணு
பேரில் மட்டும் கன்னிப்பொண்ணு
பூவரசம் பூவப்போல சிரிச்சா
புதுப்புது விதத்துல...

ஓலக்குருத்தோல காத்துல ஆடுது... கண்ணனத்தேடுது...
வாழ இள வாழ வாசலில் ஆடுது, வேளையக்கூறுது...
கதைகதையாம் காரணமாம்
கல்யாணத்தோரணமாம்... காத்தாடுது...


-மகேந்திரன்.

---

யூ-ட்யூபில் தேடினால், படம் கிடைக்கிறது. பாடல் மட்டும் தனியாக கிடைக்க மாட்டேங்கிறது. யாருக்காவது கிடைத்தால், லிங்க் கொடுக்கவும்.

.

9 comments:

Prathap Kumar S. said...

நல்ல ரசனை உங்களுக்கு... படம் பார்த்திருக்கேன்...பாட்டு எனக்கு நினைவு இல்லை...
அதுல ராம்குமாருக்கு ஒரு பாட்டு உண்டுமே..கிட்டார் வச்சுகிட்டு அந்தப்பாட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும்..பாட்டு நினைவில்லை.

Unknown said...

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR0314%27
மற்றும்
http://tamil-mp3-songs-download.com/Lite/shakthi-popup.html?theFile=http://98.130.188.109/lowmp3/A%20New/Aruvadai_Naal_www.shakthi.fm/shakthi.FM-Ola%20Kuruthoala.mp3

Unknown said...

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR0314%27
மற்றும்
http://tamil-mp3-songs-download.com/Lite/shakthi-popup.html?theFile=http://98.130.188.109/lowmp3/A%20New/Aruvadai_Naal_www.shakthi.fm/shakthi.FM-Ola%20Kuruthoala.mp3

KASBABY said...

அருமையன் பாடல்.இதையெல்லாம் தேடி சென்று கேட்க முடியவில்லை.உங்களால்,இன்று கேட்க முடிந்தது.

Meshak said...

பிரமாதம், பழைய நினைவுகளை ஞாபகபடுத்துகிறது, இதோ லிங்க் http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGIRR0314%27

tamiluthayam said...

இதே அறுவடைநாளில் இன்னொரு அற்புதமான பாடல்,"தேவனின் கோவில் மூடிய வேளை நான் எங்கு போவேன்" மிகச்சிறந்த படம். ஞாபகப்படுத்தி எழுதி உள்ளிர்கள

சரவணகுமரன் said...

லிங்க் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

ஆடியோ ப்ளேயர் ஏற்கனவே பதிவில் இணைத்துள்ளேன். பாடலுக்கு, வீடியோ லிங்க இருந்தால் கொடுக்கவும்.

Anonymous said...

"உலகம் முழுதும் பருவத்து கோலம்... மனது முழுதும் கனவுமயம்..." என்பதை கேட்கையில், யாருப்பா அது, இவங்களுக்கெல்லாம் மொதல்ல கல்யாணம் முடிச்சி வெய்ங்கப்பா என்று அலறத்தோன்றும்.
alara vendam mahedran புரிந்தும் புரியாமலும் நிற்கும் பருவம்

மகேந்திரன் said...

நன்றி நாஞ்சில் பிரதாப், சிவா, kasbaby ,தமிழ் உதயம்,மற்றும் meshak .
தொடர்ந்து படிங்க.. மிக்க நன்றி..