Monday, December 14, 2009

பா - Paa

பெங்களூரின் மையத்தில் இருக்கும் ஒரு மல்டிப்ளெக்ஸில், சென்ற வாரம் இந்த படத்தை பார்த்தேன். மல்டிப்ளெக்ஸ் என்றாலும், வார நாட்களில் டிக்கெட் விலை நூறு ரூபாய் தான். அதுவும் ஆன்லைனில் தொடர்ச்சியாக டிக்கெட் புக் செய்யும்போது, இன்னும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு ஆச்சரியப்பட வேண்டுமானால், இன்னொரு தகவல் சொல்லி அதிர்ச்சியடைய செய்ய வேண்டும். கோரமங்களா போரம் பிவிஆர் சினிமாஸில், எல்லா நாட்களும் கோல்ட் கிளாஸ் எனும் திரை அரங்கில், டிக்கெட்டின் விலை 600 ரூபாய்!

ஏற்கனவே, பாடல்கள் பிடித்துபோய் அதனாலேயே இந்த படம் பார்க்கும் ஆர்வம் இருந்ததால், பார்த்தேன். இருபது பேர் இருந்திருப்போம். படம் ஆரம்பிக்கும் முன், எங்க எல்லோரையுமே எந்திரிக்க சொல்லி, அமிதாப் மிரட்டுவது போல் ஒரு ஸ்லைட் போட்டார்கள். எந்திரிக்காட்டி, எங்க ‘பா’கிட்ட சொல்லுவேன் என்றபடி விரலை நீட்டி மிரட்டினார். நாங்களும் நின்றோம். தொடர்ந்து, ஜனகணமன போட்டார்கள். தாகூர் போட்ட ட்யூன் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் புது வெர்சன்.

பார்க்க வந்தவர்கள் எங்களை அட்டேன்சனில் நிற்க சொல்லிவிட்டு, பாடிய பாடகர்கள் கேஷுவலாக சிரித்து கொண்டு, கைகளை ஆட்டிக்கொண்டு பாடினார்கள். ஏனோ, ரஹ்மான் இறுதியில் ஜெய ஹே என்று பாடும் போது புல்லரித்தது.பா பாடல்களில் வரும் கோரஸை, பிளேயரில் கேட்கும்போதே புல்லரிக்கும். இந்த மாதிரி பாடலுக்காக, இசைக்காக படம் பார்க்க வரும்போது, ’எப்போதுடா பாட்டு வரும்?’ என்றிருக்கும். ரஹ்மான் இசையமைத்த படங்கள், பலவற்றுக்கு இப்படி சென்றிருக்கிறேன். வெறும் பாடலுக்காக, இளையராஜாவின் இசைக்காக, ஒரு ஹிந்தி படத்திற்கு சென்றது, இதுதான் முதல் முறை.

விளம்பர படங்களில் பணியாற்றி பிறகு சினிமாவுக்கு வந்தவர்களின் படங்களை காண அழகாக இருக்கும். இண்ட்ரஸ்டிங்காக இருக்கும். இதில், ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் வேறு இருக்கிறார். ஆரம்பத்தில், ஜெயா பச்சன் படிக்கட்டில் உட்கார்ந்து டைட்டிலை வாசிப்பதிலே இது ஆரம்பித்து விடுகிறது.

நம்மாட்கள் தான் இந்த மாதிரி முகம் முழுக்க மேக்கப் போட்டு நடிப்பார்கள். இங்கயும், நம்ம ஊர் காற்று அடித்திருக்கிறது.

இந்த வயதில், இப்படி பனிரெண்டு வயது பையனின் மேக்கப் போட்டு, தனது கம்பீர குரலை மீறி அதற்கேற்றது போல் பேசியும் நடித்திருக்கும் அமிதாப்பை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டவர், மொட்டை அடித்து தனது குறுந்தாடியையும் எடுத்திருந்தால், கம்ப்ளீட் டெடிக்கேஷன் என்றிருக்கலாம். மேக்கப் மூலமும், ப்ரொஜேரியா என்னும் அரிய நோயை அறிமுகப்படுத்தியும் இதை சமாளித்திருக்கிறார்கள்.ஒருமுறை அமிதாப்பும், அபிஷேக்கும் பேசிக்கொண்டிருந்த போது, அபிஷேக் ரொம்ப சீரியஸாகவும், ஆனால் அமிதாப் விளையாட்டுத்தனமாகவும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இதை பார்த்தபொழுது தான், இயக்குனருக்கு இப்படி ஒரு படமெடுக்க ஐடியா வந்திருக்கிறது. அதற்காக, ஏனோ தானோவென்று கதையை அமைக்காமல், சீரியஸாக உணர்வுபூர்வமாக கதையை அமைத்திருக்கிறார். அதே சமயம், கிளை கதையாக அமைத்திருக்கும் அபிஷேக்கின் அரசியல் நடவடிக்கை காட்சிகள் தேவையில்லையோ என்று தோன்றுகிறது.

அபிஷேக் இப்படி வெட்டியாக சுற்றுவதை காட்டத்தான், படத்தில் அவர் அரசியல்வாதியாக வருகிறார் என்று பக்கத்து சீட்டில் இருந்தவர் கூறினார். இதேப்போல், படத்தின் நடுவே அடிக்கடி ஒரு கடிகாரத்தை இயக்குனர் காட்டுவதும், காலம் கடந்து செல்வதை காட்டும் குறியீடு என்றார் அவர். :-)

அரசியலில் தூய்மை என்றிருக்கும் அபிஷேக், படிக்கும் காலத்தில் மட்டும் எப்படி வித்யா பாலனை திருமணம் செய்து கொள்ளாமல் கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார்? அரசியல் படித்து, திருந்தி விடுகிறார் போலும்.

இந்த படத்திற்கு, பா என்று பெயர் வைப்பதற்கு பதில், மா என்று பெயர் வைத்திருக்கலாம். அந்தளவுக்கு வித்யா பாலனின் கேரக்டர், கதையில் வெயிட். அரிய வியாதியுடைய மகனை, தனியாக பாஸிட்டிவாக வளர்க்கும் தாயாக வருகிறார். இளம் நாயகியாக நடிக்கும் படங்களில், கொஞ்சம் வயதானவராக தெரியும் வித்யா பாலன், இதில் ரொம்ப அழகாக தெரிகிறார்.

அந்த கோரஸை படத்தில் பார்க்கும் போதும் புல்லரித்தது. (இப்படி சும்மா, சும்மா புல்லரிப்பது என்பது ஏதேனும் வியாதியா?) படம் முழுக்க என்று சொல்லமுடியாது. ஆனால், கிடைக்கும் கேப்பில் எல்லாம் பின்னணியில் கிளப்பியிருந்தார் மேஸ்ட்ரோ. மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த படம் பார்த்த உணர்வு கிடைத்தது. ஹும்... தமிழில் இப்படி ஒரு வாய்ப்பு வர மாட்டேங்குதே!

படம் முழுக்க, அமிதாப் அடிக்கும் விட்டுகள் ரசிக்கத்தக்கவை. கடைசியில் “நீ செஞ்ச தப்பு, நான் தான்” என்று தன்னை தானே கைக்காட்டுவது உருக்கம். இதுபோல், பல பளிச் வசனங்கள். பள்ளியில் ஒரு அழகான சிறுமி நெருங்கும்போதெல்லாம், எப்போதும் அமிதாப் விலகி செல்வார். ஏதோ, காமெடி என்று நினைத்தால், கடைசியில் அதை விளக்கும் காட்சியில் ஷாக் கொடுக்கிறார்கள்.

இளையராஜாவின் இசைக்காக சென்று பார்த்த படம். அந்த வகையில் திருப்தி. கூடவே, அமிதாப்பின் வாழ்நாள் நடிப்பு - எக்ஸ்ட்ரா போனஸ்.

---

இந்த படம் பார்த்துக்கொண்டிருந்த போது, தமிழில் இப்படி ஒரு காம்பினேஷனில் படம் பண்ண யார் இருக்கிறார்கள்? என்றெண்ணிய போது, சிம்பு தமாஷாக நினைவுக்கு வந்து போனார்.

ஜாக்கி சேகரின் பதிவில் இந்த படத்தை காணும்போது, ஆச்சரியம். வெடி சிரிப்பு.இந்த படத்தை டப்பிங் செய்தால், சில இடங்களில் வசனங்களை தமிழாக்கம் செய்வதும், அதை கேட்பதும் ரொம்ப கஷ்டம்.

.

4 comments:

ஆயில்யன் said...

//இந்த படம் பார்த்துக்கொண்டிருந்த போது, தமிழில் இப்படி ஒரு காம்பினேஷனில் படம் பண்ண யார் இருக்கிறார்கள்? என்றெண்ணிய போது, சிம்பு தமாஷாக நினைவுக்கு வந்து போனார்.

ஜாக்கி சேகரின் பதிவில் இந்த படத்தை காணும்போது, ஆச்சரியம். வெடி சிரிப்பு.///

ஒரே லைன்ல இருக்கோம் போல டிவிட்டர்ல - பா ரீமேக்காகி தமிழ்ல வருமான்னு சொன்னதுக்கு என்னோட சின்ன முயற்சிதான் பதிவுல இருக்கும் இந்த யப்பா :)

மேலும் சில படங்கள் @ "பா & யப்பா! http://kadagam.blogspot.com/2009/12/blog-post_14.html பார்த்துட்டு கமெண்ட் சொல்லுங்க :)

pudugaithendral said...

ஆமாம் எங்க ஆயில்யன் பாஸ் தான் முதல்ல யெப்பா ஸ்டில்ஸ் வெளியிட்டது.

:)) நான் இன்னமும் பா பாக்கலை. பசங்க பரிட்சை முடிஞ்சு தான் போகணும். இப்ப ஹைதை இருக்கற நிலையில் தியேட்டருக்கு போகணுமான்ன்னு யோசனையாவும் இருக்கு.

:((((

சரவணகுமரன் said...

ஆயில்யன்,

உங்க பதிவை இன்று காலைத்தான் பார்த்தேன்.

யப்பா - சூப்பர்.

சரவணகுமரன் said...

ஆமாம் புதுகைத்தென்றல்...

ஆயில்யன் தான் இந்த படத்தை வடிவமைச்சிருக்காரு. அதான், அவர டி.ஆர். தேடிட்டு இருக்காராம்.