Saturday, April 3, 2010

இலக்கிய கொத்து புரோட்டா

இது ஒரு பிரபல எழுத்தாளர் சாப்பிட்ட கொத்து புரோட்டா பற்றிய பதிவு. யார் சாப்பிட்ட கொத்து புரோட்டா என சரியாக கண்டுப்பிடிப்பவர்களுக்கு, சாப்பிட ஒரு கொத்து புரோட்டா பரிசு :-).

---முனியாண்டி விலாஸில் கொத்து புரோட்டா ஆர்டர் செய்திருந்தேன். மாஸ்டர் அதை தயார் செய்து கொண்டிருந்தது, அவருடைய இரும்பு கரண்டி, கல்லில் எழுப்பும் ஒலியின் மூலம் எனக்கு தெரிந்தது. அது ஒரு வன்முறையின் ஒலியாக எனக்கு கேட்டது. கண்ணுக்கே தெரியாத, புரோட்டாக்கள், முட்டைகள், தக்காளிகள், வெங்காயங்கள், கறிவேப்பிலைகள், ’உனக்காக நாங்கள் மரணிக்கிறோம்’ என எழுப்பும் மரண ஒலியாக அது என்னை வந்தடைந்தது.

சிறிது நேரத்தில் ஒலியின் அளவு குறைந்தது. இரும்பு கரண்டியின் வன்முறையை தாங்க முடியாத உணவு பொருட்கள், அதற்கு அடங்கி, கொத்து புரோட்டாவாக உருவெடுத்திருக்கும் நேரம் அது.

‘கொத்து புரோட்டா ரெடி’ என்ற மாஸ்டரின் குரல் கிச்சனில் இருந்து ஓங்கி ஒலித்தது. இது போல், அவர் எத்தனை முறை சொல்லியிருப்பார்? ஒவ்வொரு முறையும், அவர் சொன்ன சொற்களும் இதுவாகவேதானே இருக்கும்? இன்னமும், அந்த சொற்கள் இந்த ஹோட்டலில் தானே சுற்றியலைந்து கொண்டிருக்கும்?

ஏற்கனவே இலையை என் முன்னால் விரித்திருந்தேன். சர்வராக பணிபுரியும் பையன், சமீபத்தில் தான், சிறுவனாக இருந்து இளைஞனாக மாறியிருந்திருப்பான். அவனுடைய சொந்த ஊர் கண்டிப்பாக இதுவாக இருக்காது. அவன் அந்த கொத்து புரோட்டா நிறைந்த தட்டை என் முன்னால் வைத்ததில், ஒரு அலட்சியம் இருந்தது. அடுத்த டேபிளுக்கு பரிமாற செல்லும் அவசரம் இருந்தது. இந்த அலட்சியமும், அவசரமும் அவன் வயதுக்கே உரியது.

நான் இப்போது அந்த தட்டில் இருந்து சிறிது கொத்து புரோட்டாவை எடுத்து என் இலையில் வைத்துக்கொண்டேன். மொத்தத்தையும் எடுத்து இலையில் கொட்டிவிடாமல், சிறிது சிறிதாக எடுத்து நமக்கு நாமே பறிமாறிக்கொள்வதில் ஒரு சந்தோஷம் உள்ளது. எடுத்து வைத்து கொண்ட கொத்து புரோட்டாவை தொட்டு பார்க்கிறேன். மிருதுவான அதன் ஸ்பரிசம் என்னுள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதற்குள் ஒளிந்து கொண்டிருந்த தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்ற காய்கறி, தாவர வகைகள் மெல்ல என் கண்களுக்கு புலப்பட்டது. கூடவே, முட்டையின் பாகங்களும் தெரிந்தது. இவை அனைத்தும், பிய்த்து போடப்பட்ட அந்த புரோட்டாவுடன் ஒட்டி ஒன்றிணைந்திருந்தது. பிய்த்து போடப்பட்ட புரோட்டாவின் காயத்திற்கு அவை மருந்திடுவதாக எனக்கு தோன்றியது.

கொத்து புரோட்டாவை கலைத்து போட, உள்ளிருந்து மெல்லிய ஆவி கிளம்பியது. மனிதன் தான் இறந்ததற்கு பிறகு ஆவியாவான் என்ற நமது தவறான புரிதலை அது எனக்கு உணர்த்தியது. நமக்கு மட்டுமா உயிர் இருக்கிறது? இதோ, இந்த முட்டைக்கு இருக்காதா? தக்காளிக்கு இருக்காதா? புரோட்டாவாக இருக்கும், மைதாவாக இருந்த, கோதுமையாக வளர்ந்த இந்த பயிரும், நிலத்தில் இருந்து நீரை பருகி, நம்முடன் வளர்ந்தது தானே?

முட்டை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருகிறது. முட்டைகள் அழகானவை. அதன் வடிவம் நமக்கு இவ்வுலகின் வடிவத்தை உணர்த்துபவை. என் கையில் இருக்கும் கொத்து புரோட்டாவில் ஒட்டியிருக்கும் முட்டை எங்கிருந்து வந்தது? அதன் தாய் யார்? தான் போட்ட முட்டை, புரோட்டாவிற்குள் கொலை செய்யப்பட்ட சோகம் அதற்கு தெரியுமா?

ஒருவேளை, அந்த தாயும் கொலை செய்யப்பட்டிருக்கலாம். சிக்கன் சிக்ஸ்டி பைவ் ஆக்கப்பட்டிருக்கலாம். இதோ, என் எதிரே பக்கத்து டேபிளில், ஒரு ப்ளேட்டில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் தந்தூரியாக கூட அது இருக்கலாம். அந்த தந்தூரி சிக்கன், சில இடங்களில் சிவந்தும், சில இடங்களில் கருகியும் இருந்தது. அந்த சிவப்பு அதன் மேல் எழுப்பப்பட்ட வன்முறையையும், அந்த கறுப்பு அதனால் உண்டான சோகத்தையும் குறிப்பதாக இருந்தது. அதற்குள், அந்த சிக்கனை வாங்கியவர், நான் பார்ப்பதை உணர்ந்து, அந்த தட்டை என் பார்வையில் படாதவாறு தள்ளி வைத்துக்கொண்டார்.

அவரின் இந்த செய்கை எனக்கு நான் வந்த நோக்கத்தை ஞாபகப்படுத்தியது. இந்நேரத்தில், என் இலையில் இருந்த புரோட்டா சிதறல்கள் ஆறியிருந்தது. புரோட்டா வட இந்திய உணவு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். முகலாய படையெடுப்பின் மூலம் இந்திய பிரதேசத்திற்குள் அறிமுகமான உணவு இது. புரோட்டா பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து நம்மிடம் வந்திருக்கிறது. அதனிடம், எந்த முகலாய பேரரசர் இதை சொல்லி அனுப்பினார்?

பஞ்சாப்பில் உருவான மைதாவும், பெல்லாரியில் விளைந்த வெங்காயமும், நாமக்கல்லில் போடப்பட்ட முட்டையும் இங்கே என் இலையில் சங்கமித்திருக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு இந்தியனின் பசியை நீக்க, ஒன்றிணைந்த இந்திய ஒருமைப்பாடா? அல்லது, வேறுபாடு ஏதுமின்றி இந்தியவெங்கும் வியாபித்திருக்கும் வன்முறை கலாச்சாரமா?

திடீரென என் செவிகளை வந்து அடித்தது, அந்த பருமனான வார்த்தைகள்.

“ஒரு கொத்து புரோட்டாவை வாங்கிட்டு, ஒன்றரை மணி நேரமா யாருய்யா அது சும்மாவே பார்த்துட்டு இருக்குறது?”

என் இலை வரை வந்திருந்த வன்முறை, இப்பொழுது என் மீதே பாய்ந்தது. என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொத்து புரோட்டா, ஒரு அற்புதம். அதை நிமிடங்களில் ஆளுவதை நான் விரும்பவில்லை. அதற்குள் இருக்கும் அதிசயங்கள் எண்ணற்றவை. அதன் அனுபவத்தை, சுதந்திரமான இடமும் சாவகாசமான நேரமும் இல்லாவிட்டால் முழுமையாக அனுபவிக்க முடியாது. அதனால்...

கொத்து புரோட்டாவை பார்சல் கட்ட சொல்லி, வீட்டிற்கு சென்று யோசித்துக்கொண்டே சாப்பிட கிளம்பினேன்.

.

15 comments:

ஆயில்யன் said...

சூப்பர் சார் :)


இலக்கிய கொத்து புரோட்டா கடைசிவரையும் உணரப்படாம ச்சே உண்ணப்படாமல் வீணாகிடவும் கூடும் :)

மதன் said...

S.Raa! :)

நாளும் நலமே விளையட்டும் said...

ஒரு கொத்து பராட்டா இவ்வளவு கதை சொல்லுமா?
நீங்க ரொம்ப அதிகமா ரியாக்ட் பண்ணுவது மாதிரி இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கு,
ஞானி ஆகும் தகுதி வந்தாச்சு.

நாளும் நலமே விளையட்டும் said...

கொசு வலை கொண்டு சன்னல்களை மூடுங்கள். வரும் சில கொசுக்களை எலெக்ட்ரிக் பேட் வாங்கி அடித்துக் கொள்ளுங்கள்.
எண்ணிக்கை குறைய வாய்ப்பு அதிகம்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சைவ கொத்து பரோட்டா
ஆர்டர் பண்ணியிருக்கணும்
நீங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது சரி எதுக்கு இந்த கொத்து கொத்துறீங்க?

sakthipriya said...

oh god enna pannarathu ungaluku nalla pasi elanu nenaikaren. pasiyoda erukaravangakita koduthu parunga apa theriyum

சரவணகுமரன் said...

நன்றி ஆயில்யன்... :-)

யார் சாப்பிட்ட கொத்து புரோட்டான்னு சொல்லலியே!

சரவணகுமரன் said...

சரத்,

இது சும்மா ஜாலிக்கு எழுதிய பதிவு...

சரவணகுமரன் said...

சரத், கொசு வலை பின்னூட்டம் வேறு எங்காவது போட வைத்திருந்ததா?

சரவணகுமரன் said...

மணி, அங்கயும் நாங்க யோசிப்போம்ல?

சரவணகுமரன் said...

ரமேஷ், ஒரு ஜாலிக்கு தான் :-)

பாருங்க, எவ்ளோ விஷயம் கிடைக்குது?

சரவணகுமரன் said...

சக்தி ப்ரியா,

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க... :-)

Sri said...

:-)))))

Srini

Anonymous said...

இந்தப் பதிவை மிகவும் ரசித்தேன். இது யாரைப்பதின நக்கல்னு சொன்ன அவரை படிக்கமே இருக்க சௌகர்யமாக இருக்கும். ஒரு புரோட்டவை இந்த கொத்து கொத்துற மனுஷன் ஏன் சொற்ப மூளைய கொத்தி எடுத்துடுவரோன்ர பயம்தான்.
Usha