Tuesday, June 2, 2009

தோரணை - மசாலா பாப்கார்ன்



பதிவின் நோக்கம் கருதி படத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எழுதுகிறேன்.

---

புது முயற்சி என்று சொல்லி எந்த சோதனையும் செய்யவில்லை. யாரையும் சோதிக்கவும் இல்லை. அண்ணனை தேடி சென்னை வரும் தம்பி, அண்ணனை கூட்டி கொண்டு ஊர் திரும்பும் சாதா கதைதான். அதை எஸ்.பி.முத்துராமன் ஸ்டைல் மசாலா பாணியில் போதிய இடைவெளியில் பாடல், சண்டையுடன் சென்டிமெண்ட், காதல், காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். இயக்குனர் சபா ஐயப்பன், பூபதிபாண்டியன் கேங் என்பதால் நகைச்சுவையே பிரதானம்.

படம் முழுவதும் எதுகை மோனையுடன் வசனங்கள். முன்பாதியில் காமெடிக்காகவும், பின்பாதியில் சவாலுக்காகவும், வசனகர்த்தா ஜாலியான கலகலப்பான வசனத்தில் கலக்கியிருக்கிறார். ஆங்காங்கே தங்களை பற்றியே சுய எள்ளலும் செய்து கொள்கிறார்கள். பாடல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் ப்ரியன் வைக்கும் ஆங்கிள்கள் அபாரம். அவருடைய ஒளிப்பதிவின் மேல் ப்ரியம் கொள்ளவைக்கிறார்.



படம் வெளியான போன வாரத்துடன் அக்னி நட்சத்திரம் முடிந்தது. படத்தில் அந்த அளவுக்கு ஸ்ரேயா ஜிலுஜிலுவெனயிருக்கிறார். படம் கொஞ்சம் முன்னமே வந்திருக்கலாம். கண்டிப்பாக குறிப்பிடவேண்டியது ஸ்ரேயாவின் வயிறு. யப்பா. (கவனிக்கவும், இடுப்பை அல்ல). இதுபோல் பெண்கள் அவரவர் வயிறை பேணி காத்து வந்தால், வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

விஷால் - சந்தானம் காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி நடுவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், நல்ல கெமிஸ்ட்ரி. கோவிலில் உருண்டு புரண்டு ஓடும் காட்சியிலும், பாட்டிக்கு லிப் கிஸ் கொடுத்து பஞ்சாயத்தில் மாட்டும் காட்சியிலும் தியேட்டர் குலுங்குகிறது. ஏற்கனவே சொன்னது போல், சந்தானம் தான் தற்போதைய கவுண்டமணி. மனிதர் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார். விஷால் வைரமுத்து மாதிரி உடையணிய, அவரையும் வாரி இருக்கிறார்கள்.



படம் முழுவதும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். சின்ன சின்ன வேடத்திலும் பிரபல நட்சத்திரங்கள். பிரகாஷ்ராஜ், கிஷோர், கீதா, ஷாயாஜி ஷிண்டே, லால், பாஸ்கர், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், ஆர்த்தி, மயில்சாமி, பரவை முனியம்மா, டி.பி.கஜேந்திரன், என்னைத்த கன்னையா என்று லிஸ்ட் நீளம். எம்மாடி! எவ்ளோ பேர்?

பாதிக்கு மேல் படத்தில் சில குறைகள் இருந்தாலும் வழக்கமான கமர்ஷியல் படம் என்னும் விதத்தில் எண்டர்டெயின்மெண்டிற்கு செல்லலாம். ஒ.கே. தான்.

பி.கு. - இப்படத்தை செகண்ட் கிளாஸில் பார்த்தேன்.

---

தோரணை என்ற பெயரே படம் மசாலா டைப் என்று சொல்லிவிடுகிறது. அங்கு சென்று உலக சினிமாவை தேட கூடாது.

பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், சசிக்குமார் போன்ற இயக்குனர்கள்தான் தமிழ் சினிமாவை கை கொடுத்து தூக்கிவிட போகிறவர்கள் என்றால், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, பூபதி பாண்டியன் போன்ற கமர்ஷியல் இயக்குனர்கள் தான் அதற்கு தேவையான ஆக்ஸிஜனை கொடுத்து கொண்டிருப்பவர்கள். தூக்குவது பிணமாக இருக்க கூடாதே?

இம்மாதிரி மசாலா படங்களில் நடித்தால்தான், பிரகாஷ்ராஜ் போன்ற கலைஞர்களால் நல்ல படங்கள் என்று பாராட்டப்படும் யதார்த்த சினிமாவை, கிளாஸ் சினிமாவை கொடுக்க முடியும். அதற்காவது மசாலா படங்களையும் காண வேண்டும். பாராட்ட வேண்டும். ஆதரிக்க வேண்டும்.

சினிமா உருக வைக்கட்டும், உணர்வுவயப்பட வைக்கட்டும், நெகிழ வைக்கட்டும், அழ வைக்கட்டும். வரவேற்போம். அத்துடன் துள்ளி குதித்து, ஆட வைத்து, சந்தோஷத்தில் குலுங்க செய்யும் படங்களையும் வரவேற்போமே?

16 comments:

அக்னி பார்வை said...

உண்மைய சொல்லுபா முழு படத்தையும் பார்த்து தான் விமர்சனம் எழுதினியா..ஆமான்னா நீ மனுஷனே இல்ல சாமிப்பா.. சாமி

Sridhar Narayanan said...

//துள்ளி குதித்து, ஆட வைத்து, சந்தோஷத்தில் குலுங்க செய்யும் படங்களையும் //

:) அப்படிப்பட்ட பல்ப் ஃபிக்‌ஷன் படங்களும் எல்லா மொழிகளிலும் எடுக்கத்தான் செய்கிறார்கள். lethal weapon series (மெல் கிப்ஸன்), dirty harry series (க்ளிண்ட் ஈஸ்ட்வுட்) money train, commando போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. மசாலா என்பதற்காக அஜீரணம் ஆகுமளவுக்கு க்ளிஷே காட்சிகளுடன், பஞ்ச் டயலாக்குகளுடன், லாஜிக்கே இல்லாமல் எடுப்பதறகு கொஞ்சம் சிரத்தை காண்பிக்க முயற்சிக்கலாம்.

கிரி said...

//சினிமா உருக வைக்கட்டும், உணர்வுவயப்பட வைக்கட்டும், நெகிழ வைக்கட்டும், அழ வைக்கட்டும். வரவேற்போம். அத்துடன் துள்ளி குதித்து, ஆட வைத்து, சந்தோஷத்தில் குலுங்க செய்யும் படங்களையும் வரவேற்போமே?//

வழிமொழிகிறேன்

அதற்காக ஒரு சில மொக்கை படங்கள் வரும் போது டென்ஷன் ஆகி விடுகிறது ;-)

சரவணகுமரன் said...

//ஆமான்னா நீ மனுஷனே இல்ல சாமிப்பா.. சாமி//

ஹி... ஹி... :-)

சரவணகுமரன் said...

//மசாலா என்பதற்காக அஜீரணம் ஆகுமளவுக்கு க்ளிஷே காட்சிகளுடன், பஞ்ச் டயலாக்குகளுடன், லாஜிக்கே இல்லாமல் எடுப்பதறகு கொஞ்சம் சிரத்தை காண்பிக்க முயற்சிக்கலாம்.
//

சரியா சொன்னீங்க.. ஸ்ரீதர்

சரவணகுமரன் said...

நன்றி கிரி

Athisha said...

செம தமாசான விமர்சனம் .. சூப்பர்

நரேஷ் said...

ஒரு மனுஷனுக்கு ஆப்டிமிஸ்டிக் சிந்தனை இருக்கனும்தான், ஆனா அதுக்குகாக இதெல்லாம் ரொம்ப ஓவருங்க :))))

நானுந்தான் விமர்சனம் எழுதினேன், இதெல்லாம் நான் எழுதவே இல்லை...

அக்னிபார்வை சொன்ன மாதிரி, முழு படமுமா பாத்தீங்க, ஆத்தாடி.....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மசாலா பாப்கார்ன்...


ஜீரணம் ஆயிருச்சா தல..,

சரவணகுமரன் said...

அக்னி பார்வை, உங்க விமர்சனம் படிச்சிட்டு தான் போனேன். அதான் இந்த எஃபக்டோ?

சரவணகுமரன் said...

அதிஷா, தமாஷா? ஒகே ஒகே :-)

சரவணகுமரன் said...

//ஒரு மனுஷனுக்கு ஆப்டிமிஸ்டிக் சிந்தனை இருக்கனும்தான், ஆனா அதுக்குகாக இதெல்லாம் ரொம்ப ஓவருங்க :))))//

:-) ஹா ஹா ஹா

சரவணகுமரன் said...

//நானுந்தான் விமர்சனம் எழுதினேன், இதெல்லாம் நான் எழுதவே இல்லை...//

நரேஷ், நீங்க வேணும்னா இன்னொரு முறை பாருங்களேன். :-)

சரவணகுமரன் said...

//மசாலா பாப்கார்ன்...


ஜீரணம் ஆயிருச்சா தல..,

//

சுரேஷ், நீங்களும் சாப்பிட்டு பாருங்க... :-)

முகில் said...

எப்பா சாமி, ஏன் இந்தக் கொலைவெறி?

சரவணகுமரன் said...

முகில்,

விடுங்க விடுங்க :-)