Wednesday, June 24, 2009

பெரியார்

இந்திய மொழிகளில், இணையத்தில் தமிழில் தான் அதிக பக்கங்கள் இருக்கிறதென்று ஒரு தகவல் படித்திருக்கிறேன். அப்படியே இல்லையென்றாலும், ஹிந்திக்கு அடுத்தப்படியாக கண்டிப்பாக இருக்கும். இன்னும் நிறைய விஷயங்களில் இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்தப்படியாக தமிழ் இருக்கும். காரணம்?

தமிழகத்தை தவிர மற்ற மாநிலத்தவர்களிடம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நான் சந்தித்தவர்கள் மிகவும் குறைவு. தமிழகத்திலும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள் நிறைய இருந்தாலும், அதை மறுப்பவர்கள் கணிசமான சதவிகிதம் உள்ளனர். அப்படியே, சாமி கும்பிடுபவர்கள் என்றாலும், அதை லைட்டாக எடுத்து கொள்பவர்கள் அதிகம். ஏதேனும், மத சர்ச்சை கிளம்பும் போது, அதிக பாதிப்பு இல்லாதது, தமிழகம். காரணம்?

இன்று மற்ற மாநிலங்களில் போட்டு கொள்வது போல், தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதியை பெருமையாக போட்டுக் கொள்ளும் வழக்கம் குறைவு. சில திருமணப் பத்திரிக்கைகளில் இருக்கிறது. இருந்தாலும் பேசிக் கொள்ளும் போது, சாதியை பெருமையாக பேசிக் கொள்வது குறைவு. பேசுபவர்களை பார்க்கும் பார்வையும் வேறு. காரணம்?

நான் காரணமாக நினைப்பது பெரியாரைத்தான்.

தமிழ் வலைப்பதிவு உலகில் அதிக விவாதங்களுக்கு உட்படும் ஆளுமை, பெரியார். பெரியார் பற்றிய தகவல்கள் இங்கு ஏராளம். தவிர, புத்தகங்களும் பல உண்டு. பெரியார் எழுதிய சுயசரிதை உட்பட. நானும் சில சிறிய புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆர். முத்துக்குமார் எழுதிய, கிழக்கு பதிப்பகத்தின், பெரியார் புத்தகத்தை முதலில் கண்ட போது, ஒரு சின்ன ஆச்சரியம். அதன் அளவு பற்றியது. பெரியார் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறதே? சிலர் போல், வாழ்க்கையின் ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் கொண்டவரல்ல, பெரியார். துள்ளும் இளம் வயதில் இருந்து, தள்ளாடும் இறுதி காலம் வரை தெரிந்து கொள்ள வேண்டியவர் பெரியார். எப்படி அது, 160 பக்கத்தில்? என்பதுதான் ஆச்சரியம்.நூலாசிரியர், பெரியார் மேல் தனிப்பட்ட ஆர்வம் வைத்திருப்பவர். பல காலமாகவே, பெரியார் பற்றி படித்து வருபவர். அவர், புத்தகத்தை ஆரம்பித்தது, பெரியாரின் அப்பா காலத்தில் இருந்து. பெரியார் அப்பா வாழ்க்கையில் முன்னேறியது, தவமிருந்து பெரியாரை பெற்றது, பெரியாரின் இளமைக்காலம், வணிக வாழ்க்கை, உள்ளூர் செயல்பாடுகள், அரசியல் வாழ்க்கை, போராட்டங்கள், மற்ற தலைவர்களுடனான தொடர்பு என்று அவரது இறுதிக்காலம் வரை நிறைவாகவே இப்புத்தகத்தில் கொண்டு வந்துள்ளார். ஒரே மாதிரி உள்ளது என்று விமர்சிக்கப்படும் எழுத்து வடிவம், இதற்கு பெரிதும் கைக்கொடுத்துள்ளது. இவ்வகை எழுத்து முறையின் பலம், சுருங்க சொல்லுதல், அதை சுவாரஸ்யமாக சொல்லுதல். இது வரலாறை சலிப்பில்லாமல் படிக்க உதவுகிறது.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசால், தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படும் போதும், அதற்கு தனது கடும் எதிர்ப்பை காட்டியவர், பெரியார். தமிழகம் எங்கும் நடந்த போராட்டத்திற்கு மூல காரணம் பெரியார். ஹிந்தி போராட்டத்திற்காக அவர் சொன்னது. “குண்டடிபட்டு இறந்தாலும் குண்டு மார்பில் பாய்ந்திருப்பது நல்லது.”

மக்களின் பல பிரச்சினைக்களுக்கு, குறிப்பாக உரிமை பிரச்சினைக்களுக்கு அவர் காரணமாக கண்டது, சாதியை. கடவுள் நம்பிக்கையை. இல்லாத ஒன்றுக்காக ஏன் இத்தனை பிரச்சினை? என்று கேள்வி எழுப்பியவர்.

“மனிதனை மனிதன் தொடக்கூடாது. பார்க்கக்கூடாது. தெருவில் நடக்கக்கூடாது. கோயிலுக்குப் போகக்கூடாது. பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. இது போன்ற கொள்கைகள் நிரம்பியிருக்கும் ஒரு நாட்டை எதுவும் செய்யாமல், கடவுள் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இம்மாதிரியான மக்கள் உயிரோடு இருப்பதைக் காட்டிலும் இறந்துவிடலாம்.”

சாகும் வரை கடவுள் மறுப்பையும், சாதி ஒழிப்பையுமே தனது கொள்கையாக வைத்து அதற்கேற்ப தனது பாதையை வகுத்துக் கொண்டவர்.

இப்படி ஒரு சமுதாய மாற்றத்திற்கு ஒருவரை காரணமாக சொல்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். எவ்வளவு பெரிய விஷயத்தை தன் நூறாண்டு கால வாழ்க்கையில் செய்துள்ளார் பெரியார்? ஒரு மனிதனால் இப்படியும் வாழ முடியுமா? என்று ஆச்சரியப்படுத்தும்படியான வாழ்க்கை, பெரியாருடையது.

பெரியாரின் ஒவ்வொரு பரிணாமத்தையும் சொல்ல தனித்தனி புத்தகங்களே தேவை. ராஜாஜி, அண்ணா, காமராஜர் என்று ஒவ்வொரு தலைவரிடமும் அவர் கொண்டிருந்த உறவு தேவைப்படும் இடங்களில் கொள்கையடிப்படையிலும், தேவைப்படும் இடங்களில் நட்படிப்படையிலும், இருந்தது. கொள்கை அடிப்படையில் முற்றிலும் வேறுப்பட்டிருந்த ராஜாஜியிடம், தன் சொந்த விவகாரமான திருமணம் பற்றி கலந்தாலோசித்தார். காங்கிரஸை ஒழித்துவிட்டுதான் மறுவேலை என்றிருந்தவர், காமராஜரின் செயல்பாட்டால் காங்கிரஸை ஆதரித்தார். அண்ணாவுடன் சில மனஸ்தாபங்கள் இருந்தாலும், இருவருக்கிடையேயான ஆளமான நேசம் என்றும் குறைந்ததில்லை.

திமுக பிறப்பிற்கு காரணமாக இருந்தது, பெரியார் தன்னுடைய தளபதியாக இருந்த அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், கட்சியின் சொத்தை காக்க, தன் வாரிசாக மணியம்மையை கொண்டு வர, அவரை திருமணம் செய்து கொண்டதும், அதனால் அவருக்கும் மற்ற தலைவர்களுக்கும் ஏற்பட்ட விரிசலும் ஆகும். பெரியாரை குருவாக ஏற்ற அண்ணாவை, ஏன் பெரியார் நம்பவில்லை? கருப்பு சட்டை, இந்திய சுதந்திரம் போன்றவற்றில் அவர்கள் கொண்ட கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணமா? இவ்விவகாரத்தில் பெரியாரின் செயல்பாடு, எனக்கு புதிராக இருந்தது.

பெரியாரின் பிடிவாதத்துடன் கூடிய போராட்டக்குணம், அவருடைய இறுதி நொடி வரை அவரோடிடையிருந்தது. பல மாறுதல்களுக்கு அடிப்படையாக இருந்தது இது. இதுவே அவரை வெறுப்பவர்களுக்கு காரணமும் ஆயிற்று. கடவுள் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டம், தொழிலாளர் உரிமை போன்றவற்றில் அவருடைய பங்கு நமக்கு தெரியும். தமிழ் எழுத்துக்களில் அவர் செய்த மாற்றங்களை எத்தனை பேர் அறிவோம்?

ண, ன, ள போன்ற எழுத்துகளின் நெடில் வடிவங்களை எழுதுவது சிரமமாக இருக்கவே, அவற்றை ணா, னா, ளா என்று மாற்றினார். அதேப்போல், லை, னை, ணை போன்ற எழுத்துகளை எழுதும்போது, முன்பெல்லாம் ஒரு வளைவு பயன்படுத்தப்பட்டது. அதை அறவே ஒதுக்கித் தள்ளிவிட்டார்.

ஒரு தமிழனாக பெரியார் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பெரியாரை பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆரம்பமாக இந்த புத்தகம் ஒரு நல்ல சாய்ஸ்.

பெரியார் கடைசியாக மேடையில் பேசியது.

“கடவுள் என்றால் என்னவென்று சொல்லுங்கள் முதலில். அதைவிட்டுவிட்டு எந்த முட்டாளோ சொன்னான் என்பதற்காக மரம், மட்டை, பாம்பு, பல்லி எல்லாவற்றையும் கடவுள் என்று சொன்னால் அது முட்டாள்தனம். பைத்தியக்காரத்தனம்.”

-----

கிழக்கு பதிப்பகம் வெளியீடு. புத்தகம் வாங்க இங்கே கிளிக்கவும்.

10 comments:

தமிழ் ஓவியா said...

//சாகும் வரை கடவுள் மறுப்பையும், சாதி ஒழிப்பையுமே தனது கொள்கையாக வைத்து அதற்கேற்ப தனது பாதையை வகுத்துக் கொண்டவர்.

இப்படி ஒரு சமுதாய மாற்றத்திற்கு ஒருவரை காரணமாக சொல்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். எவ்வளவு பெரிய விஷயத்தை தன் நூறாண்டு கால வாழ்க்கையில் செய்துள்ளார் பெரியார்? ஒரு மனிதனால் இப்படியும் வாழ முடியுமா? என்று ஆச்சரியப்படுத்தும்படியான வாழ்க்கை, பெரியாருடையது.//

ஆச்சரியப் படும் வாழ்க்கைதான் வாழ்ந்துள்ளார். அப்படி அவர் வாழ்ந்ததால் தான் இன்று உலகமயமாகி உலகமே அவரின் கருத்தை ஆவலுடன் படித்துக் கொண்டிருக்கிறது.

அவருடைய உழைப்பின் வெற்றி ஒடுக்கப்பட்டமக்களின் உயர்வில் தெரிகிறது.

நன்றி தோழர்

வால்பையன் said...

நீங்களும் நானும் ப்ளாக் எழுதக்கூட பெரியார் தான் காரணம்!

பெரியார் ஒரு சரித்திரம்!
வரலாற்றில் தவிர்க்க முடியாத மைல்கல்!

நரேஷ் said...

பெரியார் என்ற ஒற்றைச் சொல் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் அசாதாரமாணது...

அவரைப் பற்றி படித்து புரிந்து கொள்ளுதல் கண்டிப்பாக எல்லா நிலைகளிலும் நடைபெற வேண்டும்...

நல்லதொரு அறிமுகம், நன்றி!!!

சரவணகுமரன் said...

நன்றி தமிழ் ஓவியா

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி வால்பையன்

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்

Sunday Thoughts said...

Thanthai Periyar is great. Only beacause of his hardwork, I am sitting in USA and commeting your blog.

Thanthai Periyar Vazhaga

Sethuraman V said...

Though I belong to the caste he vehmently opposed throughout his life, I adore his humanitarian approach by which he brought self respect to the downtrodden that brought them to centre of the political power. His far reaching social thinking ahead of his times is very much appreciated by one and all. Kudos to the Bertrand Russel of Tamilnadu.

அரவிந்தன் நீலகண்டன் said...

மிக மோசமான இனவாத பார்வையை பகுத்தறிவென்று சொன்ன ஈவெரா உண்மையில் ஒரு பகுத்தறிவற்ற இனவாதி மட்டுமே. பல தனிவாழ்க்கை காரணங்களால் மனநிலை பாதிக்கப்பட்ட ஹிட்லர் போன்ற மானுட குல விரோதி.

Kasthuri Rengan said...

//மனிதனை மனிதன் தொடக்கூடாது. பார்க்கக்கூடாது. தெருவில் நடக்கக்கூடாது. கோயிலுக்குப் போகக்கூடாது. பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. இது போன்ற கொள்கைகள் நிரம்பியிருக்கும் ஒரு நாட்டை எதுவும் செய்யாமல், கடவுள் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இம்மாதிரியான மக்கள் உயிரோடு இருப்பதைக் காட்டிலும் இறந்துவிடலாம்.”//

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றால் சும்மாவா?

இன்னும் பரப்பவேண்டிய பெரிய ஆளுமைகளில் பெரியார் முதன்மையானவர் ஆனால், ஒரு கும்பலிடம் சிக்கி விட்டது அவர் பெயர்...