Monday, June 29, 2009

பொத்தி வெச்ச மல்லிக மொட்டு

எனக்கு பிடிச்ச இளையராஜா பாடல்களில் ஒண்ணு இது. கேட்க ஆரம்பிச்சன்னா, சில சமயம் கேட்டுக்கிட்டே இருப்பேன். அவ்ளோ பிடிக்கும்.

அந்த பாட்டை பற்றி மகேந்திரன்.



பாட்டு கேட்டுக்கிட்டே வாசிங்க.

---

மிகத்தேர்ந்த ஒரு கலைஞன் கோர்த்த ஹிந்துஸ்தானி மெட்டுக்கு, தென்னிந்தியாவின் பிரத்யேக இசையமைப்பு சேர்த்தால் எப்படி இருக்கும்? அறிந்துகொள்ள ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

பாடல் - "பொத்திவெச்ச மல்லிக மொட்டு"
படம் - "மண்வாசனை"
வெளியான ஆண்டு - 1983

வைரமுத்துவின் மண் மணக்கும் வரிகளுக்கு, எஸ்.பி.பி, ஜானகி உயிரளித்திருப்பார்கள். இந்த பாடலை கேட்ட பிறகு, பிடில் (வயலின்) என்பது மேல்நாட்டு இசைக்கருவி என்று கண்டிப்பாக நம்பமாட்டீர்கள். பாடல் முழுவதுமே வயலின் ராஜாங்கம் பிரமாதப்படுத்தியிருக்கும்.



பாடலுக்கு முன் ஒரு சுவாரஸ்யமான செய்தி. எஸ்.பி.பியின் உடன்பிறந்த தங்கை எஸ்.பி.ஷைலஜா, ஒரு அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகி. ராஜா நிறைய பாடல்களில் அவரை அழகாக பயன்படுத்தியிருப்பார். பின்னணிப்பாடலேயானாலும் அண்ணனை தங்கையுடன் காதல் பாட்டுகளைப் பாட வைக்க, ராஜா ஒருபோதும் விழைந்ததில்லை. சிலபாடல்களை இருவரையும் பாட வைத்திருப்பார், அது காதல் உணர்வுடன் கூடிய பாடலாக இருக்காது. உதாரணம் ”புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா...”. முதல் பாதி எஸ்.பி.பி பாடியபின், ஷைலஜா துவங்குவார். நம் கலாச்சாரம் அப்படி.

ஷைலஜாவை பயன்படுத்த ராஜா நினைத்தால் மலேசியா அல்லது மனோவுக்கு அடிக்கும் யோகம். அதேபோல மண்வாசனையிலும் கூட "அரிசி குத்தும் அக்கா மகளே.."வுக்காக மலேசியா, ஷைலஜா கைகோர்த்திருப்பார்கள். ஷைலஜா சொல்லும்
"ம்ஹூம்" க்காகவே மீண்டும் கேட்கலாம்...

பொத்திவெச்ச மல்லிக மொட்டுவின் மிகப்பிரதானமான விஷயம் இசை. பாடல் துவக்கத்தில் (Lead) பிடில் சேர்ந்திசை (Chorus Violin) இப்படிக்கூட இசையமைக்க முடியுமா என்று வியக்க வைக்கும். எப்போதேனும் இசையின்றி பாடல் போக்கை மட்டும் கவனித்துப்பாருங்கள். ஒவ்வொரு வரியிலும் ராஜா மிதப்பார்.. நம்மையும் மிதக்க வைப்பார். ஒவ்வொரு வரியுமே ஒரு ஆலாபனை போலிருக்கும். ராஜாவின் இசைக்கோர்ப்பு என்று நாம் கணிக்கும் இடம் எது தெரியுமா? சரணம் முடிந்து மீண்டும் பல்லவி துவங்கும் இடம்.. "அட வாடக்காத்து சூடு ஏத்துது.." மற்றும் "சின்னக்காம்பு தான பூவத்தாங்குது.." இரண்டு இடங்களும் ராஜாவுக்கே சொந்தமானது..

இரண்டு பேரும் அறிமுகங்களா? என் சிறு வயதில் அம்மா சொன்னது, படத்திற்கு நாயகன் சரியாக அமையாமல், நாயகன் இல்லாமலேயே பாரதிராஜா வெளிப்புற படப்பிடிப்புக்கான பயணத்தை துவக்கினார். மதுரையை கடக்கும்போது அங்கே வளையல் வியாபாரம் செய்து வந்த பாண்டியனை அப்படியே படத்தில் நடிக்க அழைத்துச்சென்றாராம். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. நாயகி ஆஷாவாக இருந்து பெயர் மாற்றம் செய்யப்பட ரேவதி. கலாக்ஷேத்ராவின் மாணவி.

முறைப்பெண்ணை வேண்டுமென்றே ஒரு குழிக்குள் தள்ளி, மாமன் அவளை ஆலம்விழுது மூலம் மேலே தூக்குவதாக பாடல் படமாக்கப்பட்டிருக்கும். இதெல்லாமே சரியாக கவனிக்காமல் போன சின்ன சின்ன கவிதைகள். இதே பாடலின் சோகப்பதிவும் (pathos version) உண்டு. கனியிருப்பக்காய் கவர்ந்தற்று என்பதால் அதை நிறைய கேட்டதில்லை. அப்போதெல்லாம் பாடல்பதிவு முடியும் வரை கவிஞரும் உடனிருப்பார். இதனால் தான் எஸ்.பி.பி, ஜானகியின் தாய்மொழி தெலுங்கு என்பது பாதிபேருக்கு இன்னும் தெரியவில்லை. அழகான கிராமத்து உச்சரிப்பு. அது "மல்லிகை" கூட இல்லை, "மல்லிக" அவ்வளவு தான். இதைக்கேட்கும் போதெல்லாம் இன்னுமொரு 20 வருடம் முன்பே பிறந்திருந்தால் சரியான வயதில் இதை சுடச்சுட ரசித்திருக்கலாமே என்று தோன்றும்.. முறைப்பெண்ணோ அல்லது முறைமாமனோ இருந்து இந்த பாடலை ரசிப்பவர்கள், நிஜமாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தானே?

இனி பாடல்..

பொத்திவெச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சி வெக்கத்த விட்டு
பேசிப்பேசி ராசியானதே..
மாமம்பேர சொல்லி சொல்லி ஆளானதே.. ரொம்ப நாளானதே..

மாலயிடக்காத்து அல்லி இருக்கு,
தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு..
இது சாயங்காலமா மடி சாயுங்காலமா?
முல்லப்பூச்சூடு மெல்ல பாய்போடு..
அட வாடக்காத்து சூடு ஏத்துது..

ஆத்துக்குள்ள நேத்து உன்னநினச்சேன்,
வெக்க நிறம் போக மஞ்சக்குளிசேன்..
கொஞ்சம் மறஞ்சிப்பாக்கவா இல்ல முதுகு தேய்க்கவா?
அது கூடாது இது தாங்காது..
சின்னக்காம்பு தான பூவத்தாங்குது..

பொத்திவெச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சி வெக்கத்த விட்டு
பேசிப்பேசி ராசியானதே..
மாமம்பேர சொல்லி சொல்லி ஆளானதே.. ரொம்ப நாளானதே..
ஆளானதே.. ரொம்ப நாளானதே....


-மகேந்திரன்

---

இப்பவும் லவ் பண்றவுங்க, புதுமண தம்பதிகள் இந்த பாட்டை கேட்கலாம். கண்டிப்பா ரசிப்பீங்க. என்ஜாய்...

12 comments:

Unknown said...

அருமையான பாடல்

மகேந்திரன் said...

நன்றி சரவணன்..

ஆயில்யன் said...

கலக்கலான பாட்டுங்க அதிகம் இனிய இரவில் அப்புறம் சில பல ரேடியோக்களில் கேட்டதுண்டு

ரம்மியமான இசை சொக்க வைக்கும் குரல்கள்

//தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு..
இது சாயங்காலமா மடி சாயுங்காலமா?
முல்லப்பூச்சூடு மெல்ல பாய்போடு..
அட வாடக்காத்து சூடு ஏத்துது.. //

இந்த வரிகளில் ஜானகி அசத்தியிருப்பாங்க !

மொத்ததுல சூப்பரோ சூப்பர் :))

இதே மாதிரி எனக்கு ரொம்ப ஃபீல் பண்ண வைச்ச பாட்டு நிறைய இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தி கேட்ட பாட்டுன்னா “கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள் கூச்சம்”

சரவணகுமரன் said...

நன்றி மணி

சரவணகுமரன் said...

மகேந்திரனுக்கு நன்றியோ நன்றி

சரவணகுமரன் said...

வாங்க ஆயில்யன்

நிலாமதி said...

இனிய வணக்கம் ........நல்ல இசைக்காக எத்தனை முறையும் கேட்கலாம் அமைதியான இரவு வேளையில் ......கேட்ட மனம் எங்கேயோ போகும் ....ஒரு குமரிப்பெண்ணின் ஏக்கம் தாபம். மென்மையான பண்பான் முறையில் சொல்லும் பாடல். பாடல் ப திவுக்கு நன்றி .மீனுமொருமுறை ....என்று பல தடவை கேட்க வைத்த து நன்றி கள். நட்புடன் .நிலாமதி

சரவணகுமரன் said...

நன்றி நிலாமதி

நரேஷ் said...

அருமையான பாடல் எனபதில் சந்தேகமே இல்லை...

ஆனால், நுணுக்கமாக நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் மிக அருமை....

பாட்டை முழுமையாக கேட்க வேண்டும் என்ற ஆசையையும், நான் என்னென்ன மிஸ் பண்ணேன் என்பதையும் தெரிய வைத்தது....

சரவணகுமரன் said...

நரேஷ்,

மகேந்திரன் சார்பில் நன்றி...

Anonymous said...

:)

Unknown said...

உங்கள் பதிவுகள் படிக்க சுகமாக இருக்கிறது..ராஜாவின் பாடல்களைப்பற்றி எழுதினால் கூட சுகம் தான் போங்கள்..

//நாயகன் இல்லாமலேயே பாரதிராஜா வெளிப்புற படப்பிடிப்புக்கான பயணத்தை துவக்கினார். மதுரையை கடக்கும்போது அங்கே வளையல் வியாபாரம் செய்து வந்த பாண்டியனை அப்படியே படத்தில் நடிக்க அழைத்துச்சென்றாராம். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.//

இது உண்மைதான்..இதை நானே இயக்குனர் பாரதிராசா சொல்ல கேட்டிருக்கிறேன். பாண்டியனை கண்டிபிடித்தைப்பற்றி இன்னும் சுவாரிசமான தகவல்கள் சொல்லி இருக்கிறார்.

தொடருங்கள்..