Monday, July 13, 2009

சர்ச்சை சாவர்க்கர்

வரலாற்று நிகழ்வை திரும்பி பார்க்கும் போது அதில் பல வியப்புகள் இருக்கும். வியப்பு மேலிடும் போது, இன்னமும் திரும்பி பார்க்கும் ஆர்வம் துளிர்க்கும்.

காந்தியை கோட்சே சுட்டு கொன்ற அன்று, சாவர்க்கரின் வீடு தாக்கப்பட்டது. கோட்சே உறுப்பினராக இருந்த இந்து மஹாசபையை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் சாவர்க்கர். சில நாட்களில் சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு, கோட்சே காந்தியை கொல்லும் முன்பு சாவர்க்கரை சந்தித்தார் என்பதும் சாவர்க்கர் அவரிடம் ‘வென்று வா’ என கூறி ஆசி வழங்கினார் என்பதும். அதாவது காந்தியை கொல்ல வேண்டுமென்பது சாவர்க்கரின் ஆணை என்பது அவர் மேலான குற்றச்சாட்டு. பிறகு, கோட்சே கூறியிருந்த பதிலில் ‘இது தான் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு என்றும் முன்பொருமுறை காந்தியின் கூட்டத்தில் குழப்பம் விளைத்ததற்கே தங்களை சாவர்க்கர் கண்டித்தார்’ எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் சாவர்க்கர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

-----

சில வருடங்கள் கழித்து அவர் இறந்த பிறகு, இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, சாவர்க்கர் நினைவாக தபால் தலை வெளியிடப்பட்டது. அவரது நூற்றாண்டு விழா, அந்தமான் சிறைச்சாலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிஜேபி ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் காந்தியின் படத்திற்கு எதிரே சாவர்க்கரின் படம் மாட்டப்பட்டது.சாவர்க்கர் யார்? என்ன செய்தார்? அவர் அரசால் கொண்டாடப்படுவதற்கும் தூற்றப்படுவதற்கும் காரணம் என்ன? வேறு வழியில்லை. ப்ளாஷ்பேக் போகத்தான் வேண்டும்.

இலந்தை. சு. இராமசாமியின் ‘வீர் சாவர்க்கர்’.

-----

சாவர்க்கர் மஹாராஷ்ராவில் ஒரு மராத்தி கவிஞருக்கு மகனாக 1883 இல் பிறந்தார். கற்பூர மூளையென்பதால், படிப்பில் கெட்டி. இலக்கியத்திலும் ஆர்வம் அதிகம். புத்தகங்கள் மூலம் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டங்களை அறிந்தார். கல்லூரியில் இது பற்றி பேசினார். கூட்டங்கள் நடத்தினார். அவரை சுற்றி கூட்டம் கூடியது. அபிநவ பாரத் என்ற இயக்கத்தை தொடங்கினார். ஆங்கிலேய அரசு, இவர் மேல் ஒரு கண் வைத்தது.

இந்நிலையில் லண்டனில் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் லண்டனுக்கு கப்பலேறினார். அவர் லண்டன் சென்றது படிப்பதற்கு மட்டுமில்லை. அவருக்கு வேறு திட்டங்கள் இருந்தது. வன்முறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தால், ஆயுதங்களை நெருங்குவதற்காகவும் வெளிநாடு சென்றார். தனது இயக்கத்தை கடல் கடந்து கொண்டு சென்றார். லண்டன் சென்று புரட்சிகள் பற்றி, புரட்சியாளர்கள் பற்றி புத்தகங்கள் எழுதினார். துப்பாக்கி சுட கற்று கொண்டார். அங்கு அவருடைய கூட்டாளி, வ.வே.சு. ஐயர். இந்தியர்களை கூட்டி கூட்டங்கள் நடத்தினார். மற்ற வெளிநாடுகளுக்கும் இந்த எழுச்சியை பரவ செய்தார்.

இந்தியாவில் நடப்பதையும் சாவர்க்கர் கவனித்து வந்தார். துப்பாக்கிச் சூடு, கலகம், ஆயுத கொள்முதல் என்று திட்டங்கள் செல்ல, ஒரு கட்டத்தில் சாவர்க்கர் லண்டனில் கைது செய்யப்பட்டார். பிறகு, இந்தியா கொண்டு வரப்பட்டார். வரும் வழியில் கப்பலில் இருந்து குதித்து தப்பிக்க அவர் செய்த முயற்சி, தோல்வியில் முடிந்தாலும் உலகமெங்கும் அவர் புகழ் பரவ செய்தது. இந்தியாவில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை. ஆயுள் தண்டனை. 25 ஆண்டுகள்.

சில காலம் இந்திய சிறையில் அனுபவித்த பிறகு, அந்தமான் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுபவித்த சோதனைகள் ஏராளம். இருந்தாலும் இலக்கிய பணியில் கவனத்தை செலுத்தினார். மற்ற சிறை கைதிகளுக்கு ஆலோசனைகள் கூறினார். சிறைச்சாலை படத்தில் அம்ரிஷ் பூரி ஒரு கொடூரமான கேரக்டரில் வருவாரே? பாரி. வார்டர். அங்கு அவருடைய கொடுமைகள் எக்கச்சக்கம். சாவர்க்கர் சிறையில் அதிகாரிகளை எதிர்த்து செயல்பட்டாலும், கொஞ்சம் அடங்கிதான் சென்றிருக்கிறார். அவருக்கு சிறையை விட்டு வெளியே வருவதில் தான் ஆர்வமிருந்தது. அதற்காக விண்ணப்பிக்கவும் செய்தார்.

ஆனால் அவ்வளவு சீக்கிரமாக அவரை விட்டு விடவில்லை. 11 ஆண்டுகளுக்கு பிறகு, அவரை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். இந்தியாவில் மூன்று ஆண்டுகள். மொத்தம் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவரின் பார்வை, இந்திய சுதந்திரம் என்பதை விட்டு இந்து மதத்தின் மேல் பதிந்தது. காரணம், சிறையிலும் வெளியிலும் அவர் கண்ட மதமாற்றங்கள். சிறையிலேயே யார் இந்து? என்ற கேள்விக்கு பதிலாக ‘ஹிந்துத்வா’ என்ற புத்தகத்தை எழுதினார். இந்து மதத்தில் இருந்த குறைப்பாடுகளை களைய, சீர்திருத்தங்களை மேற்கொண்டார். முக்கியமாக, தீண்டாமை. அனைத்து சாதியினரையும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வைத்தார். தலித்களை ஆலயப்பிரவேசம் செய்ய வைத்தார். மராத்தி மொழிக்காக இயக்கம் ஆரம்பித்தார்.

83 வயதில் அவர் இறந்தபோது, அவருக்கு அணிவகுப்பு செய்து முழு மரியாதை செய்தது - ஆர்.எஸ்.எஸ்.

-----

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டாலும், இன்று அனைத்து இந்திய மக்களுக்கும் தெரிந்தவராக இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பிஜேபி போன்ற இந்து அமைப்புகள் மட்டும் சாவர்க்கரை ஹீரோவாக தூக்கி பிடித்து கொண்டிருப்பதற்கு காரணம் - சிறையில் அடைக்கப்பட்ட பிறகு சாவர்க்கரிடம் ஏற்பட்ட மாற்றம். அஹிம்சை வழியில் போராடிய காந்தி எந்நிலையிலும் தயக்கமின்றி தைரியமாக ஆங்கிலேய அரசை எதிர்த்த போது, வன்முறை வழியில் சென்ற சாவர்க்கர் சிறையில் எழுதிய மன்னிப்பு கடிதங்கள். சர்ச்சைகளை கிளப்பும் ஹிந்துத்துவாவை உருவாக்கியவர் என்ற பெயர். சமூகப்பணியாக இந்துக்களாக இருந்து முஸ்லீமானவர்களை திரும்பவும் இந்துக்களாக மாற்றியது போன்றவைகளேயாகும்.

சாவர்க்கர் என்றாலே சர்ச்சைதான் போலும். சமீபத்தில் கூட மும்பை கடல் பாலத்திற்கு சாவர்க்கர் பெயரை வைக்க சொல்லி வேண்டுகோள் வைக்கப்பட, ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்பட்டது. காந்திக்களுடனான சண்டை சாவர்க்கருக்கு ஓயாது போல. சாவர்க்கர் என்ற புதிரை அவிழ்ப்பது சுலபமில்லை. ஒன்று முழு ஆதரவாக இருக்கும். இல்லையென்றால், முழு எதிர்ப்பாக இருக்கும். அவரை பற்றிய நேர்மையான பார்வை எங்கும் இருக்காதா?

இலந்தை சு. இராமசாமியின் ‘வீர் சாவர்க்கர்’ புத்தகத்தில், ஆசிரியர் சாவர்க்கரின் முழு வாழ்வையும் பதிவு செய்துள்ளார். சிறையில் அவர் அரசுடன் மேற்கொண்ட அணுகுமுறைகள், அவரின் மதரீதியான செயல்பாடுகள் போன்றவற்றிற்கு கூறப்பட்டுள்ள சாதகமான காரணங்களால், இப்புத்தகம் படித்தபிறகு வருவதென்பதோ, ஹீரோ பிம்பம்தான். தமிழில் சாவர்க்கர் பற்றிய ஒரு புத்தகத்தை கொடுத்து, புதிரின் பல முடிச்சுக்களை அவிழ்த்ததற்காக நூலாசிரியர் இலந்தை சு. இராமசாமிக்கு வாழ்த்துக்கள்.

-----

வீர் சாவர்க்கர் - இலந்தை சு. இராமசாமி
கிழக்கு பதிப்பகம்
புத்தகம் வாங்க இங்கே செல்லவும்

12 comments:

நரேஷ் said...

சரவணகுமரன்,

இலந்தை ராமசாமியின் அந்த புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன், என்னைப் பொறுத்த மட்டில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம் என்றுதான் சொல்ல வேண்டும்.... அதுவும் புத்தகத்தின் அட்டையிலேயே, யார் இந்த சாவர்க்கர் (இந்துத்வாவாதியா, காந்தியைக் கொன்றவரா? இஸ்லாமியர்களின் விரோதியா?) போன்ற கேள்விகளுக்கு பதிலுரைப்பதாகச் சொல்லிவிட்டு, முழுக்க முழுக்க அவர் மீது ஒரு புனித பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகத்தான் இந்த புத்தகம் தோன்றுகிறது!!!

அது ஏனோ, வரலற்றின் பக்கங்களை எழுதுபவர்கள் ஒரு பக்கச் சார்புடையவர்களாகவே உள்ளனர்....உண்மையிலேயே அவருக்கு இந்தளவு முக்கியத்துவம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் பிஜேபி, ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளுக்கு ஏன் வந்த்து??? முற்பாதியில் மிக நல்லவராக இருந்த அவர், பின் பாதியில் தீவிர மதவாதியாக மாறியதன் காரணம், மதாபிமானத்தால் தேசபக்தி போனது ஏன் போன்ற பல விஷயங்கள் வீளக்கப் படவேயில்லை...

இந்தப் புத்தகத்தைப் பற்றிய இன்னொரு விமர்சனப் பதிவு கீழே
http://blog.nandhaonline.com/?p=90

வினோத் கெளதம் said...

சாவர்க்கர் என்றாலே எதோ மத தீவிரவாதி என்பதை போல் ஒரு பிம்பத்தை ஏற்ப்படுத்தி வைத்து உள்ளார்கள்..ஒருவன் ஹிந்து மதத்தின் செயல்ப்பாடுகளை பற்றி எழுதினால் அவன் மதவாதியா..அவரை பற்றி நிறையா பேர் சரியாக தெரிந்துக்கொள்ளவில்லை என்பது மட்டும் நிஜம்..

நல்ல பதிவு..

சரவணகுமரன் said...

//முற்பாதியில் மிக நல்லவராக இருந்த அவர், பின் பாதியில் தீவிர மதவாதியாக மாறியதன் காரணம், மதாபிமானத்தால் தேசபக்தி போனது ஏன் போன்ற பல விஷயங்கள் வீளக்கப் படவேயில்லை...
//

கொடுக்கப்பட்டுள்ள சம்பவங்களின் அடிப்படையில் இதற்கு காரணம் என்று நான் நினைப்பது சிறையில் அவர் இந்து-முஸ்லீம் கைதிகளிடையேயும், வார்டர்களிடமும் கண்ட வேறுபாடு என்பதாகும்.

சரவணகுமரன் said...

//அவருக்கு இந்தளவு முக்கியத்துவம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் பிஜேபி, ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளுக்கு ஏன் வந்த்து//

அவர்களிடம் தேசபக்தியின் மூலமாக இந்து மதம் இருப்பதேயாகும்.

சரவணகுமரன் said...

நந்தாவின் விமர்சனம் நன்றாக இருந்தது. நன்றி நரேஷ்...

சரவணகுமரன் said...

நரேஷ், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங்... இதை அடிக்கடி உங்ககிட்ட சொல்லவேண்டி வருகிறது :-)

வினோத் கௌதமின் பின்னூட்டத்தை பார்க்கவும்.

சரவணகுமரன் said...

நன்றி வினோத்கெளதம்

நரேஷ் said...

சரவணகுமரன்,
எனது பின்னூட்டத்தில் புத்தகத்தின் மீதான மாற்றுப் பார்வையை மட்டுமே நான் வைத்தேன், வரலாற்றை எழுதுபவர்கள் ஏன் ஒற்றைச் சார்புடன் எழுத வேண்டும்??? நீங்கள் புத்தகம் படித்திருப்பீர்கள், என்னுடைய வருத்தம் நூலாசிரியர் எந்த ஒரு மூலையிலாவது, ஒரு சிறு துளியாவது சர்ச்சைக்குரிய விஷயங்களை மாற்று வரலாற்றுப் பார்வையோடு பதிவு செய்திருக்கிறாரா என்பதே. எல்லா இடங்களிலும் ஆசிரியரே சாவர்க்கரின் மனசாட்சியாய் இருந்து பதில் சொல்லுகிறாரே தவிர இரண்டு விஷயங்களையும் சொல்லி வாசகர்களின் கைகளில் முடிவு செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரா???
சாவர்க்கரைப் பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் அந்தமான் சிறைக்கு செல்லும் வரை இருந்த சாவர்க்கர் மட்டுமே வீர் சாவர்க்கர். அதற்குப் பின்பு நடமாடிய சாவர்க்கர் முற்றிலும் வேறு மனிதர். இந்தியாவை இந்து நாடாக மட்டுமே பார்ப்பதற்கு சாவர்க்கருக்கு காரணங்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவை எந்தளவு ஏற்புடையது என்பதே???
“ஆயுள் காலத்திற்கு நாடு கடத்தப்பட்ட என் கதை” என்று 1927ல் சாவர்க்கரால் எழுதப்பட்ட நூலுக்கும், “முதல் இந்திய சுதந்திரப் போர் – 1857″ என்ற நூலுக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது...
சொல்லப்போனால் சாவர்க்கரின் விடுதலைப் போராட்டத்திற்காக இந்திய அரசு நல்ல முறையிலேயே அவரை கவுரவித்திருக்கிறது, ஆனால் அந்தமானில் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 60 வயது முதியவர் சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங், பிரித்வி சிங் போன்ற வீர்ர்கள் பற்றிய சிறு பதிவைக் கூட வரலாற்றில் காண முடிவதில்லை...
எனது வருத்தம் சுதந்திரப் போராட்ட வீர்ர் என்பதற்காக இல்லாமல், அவரது இந்துத்வா கொள்கைக்காக அவரை மிகப் பெரிய மாமனிதராக உருமாற்றிக் காட்டுவதுதான்

நரேஷ் said...

விட்டுப்போன ஒரு விஷயம், அவரை நான் ஒரு தீவிர மதவாதி என்றுதான் சொன்னேனே தவிர மதத் தீவிரவாதி என்று சொல்லவே இல்லை!!!

எப்படியோ நான் கூவறதுக்கும் ஒரு மேடை போட்டுக் கொடுத்ததற்கு நன்றி சரவணகுமரன் :))))

சரவணகுமரன் said...

//எனது வருத்தம் சுதந்திரப் போராட்ட வீர்ர் என்பதற்காக இல்லாமல், அவரது இந்துத்வா கொள்கைக்காக அவரை மிகப் பெரிய மாமனிதராக உருமாற்றிக் காட்டுவதுதான்//

உங்க வருத்தம் நியாயமானது தான்.

//எப்படியோ நான் கூவறதுக்கும் ஒரு மேடை போட்டுக் கொடுத்ததற்கு நன்றி சரவணகுமரன் :))))//

ஹி ஹி :-)

சாணக்கியன் said...

என்னுடைய விமர்சனம்...

http://vurathasindanai.blogspot.com/2009/08/blog-post.html

மேலும் நந்தாவின் பதிவிலும் பின்னூட்டம் இட்டுள்ளேன்..

சரவணகுமரன் said...

சாணக்கியன், உங்கள் விமர்சனம் படித்தேன். நன்றாக இருந்தது.