Saturday, December 26, 2009

பைக் சர்வீஸ்

பல வேலைகள், பல நாட்களாக தள்ளிப்போகிறது.

வண்டியை சர்வீஸ் விடவேண்டும். இஞ்சினின் குரல் மாறிவிட்டது. நடுக்கத்தில் குழறுகிறது. எவ்வளவு தூரம் ஓடினோம் என்று கணக்கு வைப்பதில்லை. ரொம்ப முக்கியமான பிரச்சினை, குடிக்கிற பெட்ரோலுக்கு ஏற்ப ஓடுவதில்லை.இரண்டு மாதங்களுக்கு முன்பே, சர்வீஸ் விட்டிருக்கவேண்டும். நிறைய வேலைகள். கொஞ்சம் சோம்பல். இந்த வாரம் விட்டு விடக்கூடாது.

தனியார் வங்கியில் ஒன்பது டூ ஆறு வேலை பார்க்கும் ஆனந்த் (அப்பாடி! கதையா மாத்தியாச்சு...), நாளை வண்டியை எப்படியாவது சர்வீஸ் விட்டுவிடுவது என்று முடிவு செய்தான். நாளை வியாழன். சர்வீஸுக்கு கூட்டம் இருக்காது. இந்த வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் அலுவலகம் விடுமுறை. ஊருக்கு செல்ல வேண்டும். இந்த வாரம் விட்டால், இன்னும் ஒரு மாதத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. அதற்கு முன்பு, வண்டியை சர்வீஸ் விட வேண்டும்.

கிளம்பும்போது, மானேஜர் கூப்பிட்டார்.

“ஆனந்த், சனிக்கிழமை ஆபிஸ் வர முடியுமா? கொஞ்சம் ஆடிட் வேலை இருக்குது.”

“இல்லை சார். ஊருக்கு போறேன்.”

“அப்படியா? சரி, அப்ப நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு, அதை பார்க்கலாம்.”

“ஒகே சார். ”

“ஒன்பதரைக்கு நான் ஹெட் ஆபிஸ் போகணும். ஒன்பது மணி. மிஸ் பண்ணிடாதே”

---

ஆனந்த், அலுவலகத்திற்கு பக்கத்தில் வீடு எடுத்து தங்கியிருக்கிறான். சர்வீஸ் ஸ்டேசன் இருப்பதோ, அவன் இருக்கும் இடத்தில் இருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால்.

என்ன செய்யலாம் என்று கணக்கு போட்டான்.

மெக்கானிக் எட்டு மணிக்கு கடை திறப்பதாக சொன்னான். ஏழரைக்கு வீட்டில் இருந்து கிளம்பினால், எட்டு மணிக்கு சர்வீஸ் ஸ்டேசன் போய்விடலாம். வண்டியை விட்டுவிட்டு வேகமாக கிளம்பினால், பஸ்ஸை பிடித்து எப்படியாவது ஒன்பதுக்கு ஆபிஸ் வந்துவிடலாம். மீட்டிங் அட்டெண்ட் பண்ணி விடலாம்.

அப்பொழுதே, மெக்கானிக்குக்கு போன் செய்து காலை எட்டு மணிக்கு வருவதாக சொன்னான். செல்போனில் ஆறு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு படுத்தான். பத்து நிமிடம் தூங்கியவன் எழுந்து, செல்போனின் சத்தத்தை உச்சத்தில் வைத்துவிட்டு, திரும்பவும் தூங்கி போனான்.

---

சரியாக ஆறு மணிக்கு எழுந்துவிட்டான். ஹீட்டரில் தண்ணி வைத்துவிட்டு, பல் துலக்குவது போன்ற மற்ற வேலைகளை வேகவேகமாக முடித்தான். குளிக்க தண்ணீரை மேல் ஊற்றும் போது, ஜில்லென்று இருந்தது. கரண்ட் இல்லை போல!

திரும்ப அடுப்பில் வென்னீர் வைக்கலாம். நேரமாகும். பரவாயில்லை என்று ஐஸ் வாட்டரை மேலே ஊற்றிக்கொண்டு, விரைத்துப்போய் துண்டால் துவட்டினான்.

எப்பொழுதும் காலையில் தான் சட்டையை அயர்ன் செய்து கொள்வான். கரண்ட் இல்லை. வேறு வழியில்லாமல், திங்கள் கிழமை போட்ட சட்டையையே போட்டுக்கொண்டு கிளம்பினான். பக்கத்து டேபிள் லலிதாவுடன், ஆபிஸில் லஞ்ச் சாப்பிடும்போது, சட்டையின் கை ஓரத்தில் லேசாக ரசம் சிந்தியிருந்தது. அன்று, அச்சச்சோ என்றாள். இன்று ஞாபகம் வைத்துக்கொண்டு கவனித்துவிடுவாளோ? கவனிக்க கூடாது என்று வேண்டிக்கொண்டு கிளம்பினான்.

---

எட்டு மணிக்கு சென்று விட்டாலும், மெக்கானிக் எட்டேகாலுக்கு தான் வந்தான். வேக வேகமாக, என்னவெல்லாம் செக் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு பஸ்ஸை பிடிக்க ஓடினான். வண்டியை எடுக்க ஆறு மணிக்கு வர சொல்லியிருந்தான். ஆபிஸ் ஆறு மணிக்கு தான் முடியும். அதுவரை கிளம்ப முடியாது. ஏழு மணிக்கு வந்து எடுத்துவிடலாம். ஒன்பது மணிக்கு ஊருக்கு ரயில். போய் விடலாமா? போக வேண்டும்.

பஸ் அழுக்காக இருந்தது. ‘இதுல எல்லாம் எப்படி தான் போறாங்களோ?’ என்று பஸ்ஸில் வரும் நண்பர்களிடம் கிண்டல் செய்வான். ஊரில் டவுன் பஸ்ஸில் போகும் சமயம், ‘இங்கத்தான் இதுக்கு பேரு, பஸ்ஸு. அங்கயெல்லாம் குப்பை லாரி’ என்பான். எல்லாம் நினைவுக்கு வந்தது. டைம் பார்த்துக்கொண்டான்.

அலுவலகம் உள்ளே போகும் போது, பெரிய முள் ஐந்தில் இருந்தது. மேனேஜர் அறைக்கு சென்று குட் மார்னிங் சொன்னான். பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு மீட்டிங் ரூம் போக சொன்னார். ப்ரிண்ட் எடுக்கும்போதே, மேனேஜர் மீட்டிங் ரூமிற்கு சென்று காத்திருக்க ஆரம்பித்தார். ப்ரிண்டரில் இருந்து பேப்பர்களை எடுத்துக்கொண்டு, மீட்டிங் ரூமை நோக்கி நடக்கும் போது, செல்போன் அலறியது. சவுண்ட் குறைக்க மறந்து போனது நினைவுக்கு வந்தது.

மெக்கானிக் தான்.

”ஹலோ சார். மெக்கானிக் பேசுறேன்.”

“சொல்லுங்க”

“வண்டில சாவியை காணும் சார்”

சொல்லும்போதே, கை பேண்ட் பாக்கெட்டை தடவ, உள்ளே வண்டி சாவி தட்டுப்பட்டது.

.

3 comments:

thiyaa said...

அருமை

சரவணகுமரன் said...

நன்றி தியா

Krishna said...

ரொம்ப த்ரில்..........
ஆனா சாவி இல்லாம கூட மெக்கானிக் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவார்...........