Thursday, April 29, 2010

ஆகட்டும் பார்க்கலாம்

சன் டிவியில் இருக்கும் போது, ரபி பெர்னார்டுக்கு பிரச்சினை வந்து ரபி விலகியப் பிறகு, அந்த இடத்தில் வந்தவர் வீரபாண்டியன். ஆரம்பக் கால ரபி அளவுக்கு இல்லாததால், இவர் மேல் பெரிய அபிப்ராயம் இல்லை. ’நேருக்கு நேர்’ நிகழ்ச்சி பார்ப்பதும் குறைந்து, ஒரு கட்டத்தில் நின்று விட்டது.

சமீபத்தில் நூலகத்தில் ஒரு புத்தகம் பார்த்தப்போது தான், இவரைப் பற்றி மேலும் சில விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன். இவருடைய தந்தை தியாகி திருநாவுக்கரசு அவர்கள் காமராஜரின் நண்பர். காமராஜருக்காக களத்தில் இறங்கி பல வேலைகள் செய்தவர். காமராஜர் இறந்த பிறகு, அரசியலில் இருந்து விலகிவிட்டார். வீரபாண்டியன் பல்வேறு வானொலிகளில், அரசியல் நிகழ்ச்சிகள் நடத்திய பின்னர், சன் டிவிக்கு வந்திருக்கிறார்.

தந்தைக்கு காமராஜருடன் இருந்த நெருக்கத்தால், சிறுவயதில் இருந்தே வீரபாண்டியனுக்கு காமராஜரிடம் அறிமுகம் இருந்திருக்கிறது. சிறுவனாக இருக்கும் போது, மேடைக்கு சென்று காமராஜருக்கு மாலை அணிவித்திருக்கிறார். கல்லூரி படிக்கும்போது, அங்கு வருகை வந்த காமராஜர் இவர் பெயரை ஞாபகமாக சொல்லி அழைத்திருக்கிறார். இப்படி காமராஜர் மேலான தாக்கம் தந்தை, மகன் இருவருக்கும் இருந்திருக்கிறது.

இவர் தந்தை இவரிடம் வைத்த ஒரு வேண்டுகோள், காமராஜர் பற்றிய தகவல்களை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது. இவரும் தந்தையின் சொல்லுக்கேற்ப, தந்தையிடம் கேட்டது, காமராஜரிடன் பழகிய தலைவர்களிடன் கேட்டது அனைத்தையும் தொகுத்து ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதை தனது தந்தைக்கு அர்பணித்திருக்கிறார்.‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜரின் பஞ்ச் டயலாக். புத்தகம் முழுக்க தகவல் தொகுப்புகள். ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து இரண்டு மூன்று பக்கங்கள் இருக்கிறது. தகவல்கள் விலாவாரியாக இருக்கிறது. இவையெல்லாம் உண்மை என்று அடித்து சத்தியம் செய்திருக்கிறார். ஒவ்வொன்றையும் சொன்னது யார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். கலைஞர், மூப்பனார் என பல தலைவர்கள் இப்புத்தகத்திற்கு பங்களித்திருக்கிறார்கள். சொந்த கட்சியினர் கொள்கைக்கு புறம்பாக இருந்தால் அவர்களை கண்டிப்பதும், மாற்று கட்சியினரின் மக்கள் நல காரியங்களுக்கு அவர்களை பாராட்டுவதும் என காமராஜர் மற்ற தலைவர்களுடன் பழகிய விதம் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

---

காமராஜர் ஒரு கூட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்தப்போது, பக்கத்தில் இருந்த மின்சார கம்பத்தில் ஏறி நின்றுக்கொண்டு ஒருவர், “தலைவர் வாழ்க!” என்று அவரை பார்த்து கத்தியிருக்கிறார்.

இதை கவனித்த காமராஜர், அவரை பார்த்து, “ஏலேய் கிறுக்கா! நான் வாழுறது இருக்கட்டும். நீ செத்துறாதே. கீழே இறங்கி வா...” என அழைத்திருக்கிறார்.

கீழே வந்து மாலை அணிவித்தவர் பெயர், தொழில் எல்லாம் விசாரித்து, தையல்காரர் என்று தெரிந்துக்கொண்டார். செல்லும்போது, “ஒழுங்கா துணியை தையி, இப்படி தொங்காதே!” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

---

இது கலைஞர் சொன்னது.

ஒருமுறை சட்டசபையில், இந்தி எதிர்ப்பு பற்றிய விவாதத்தின் போது, ஒரு திமுக எம்.எல்.ஏ (யாருன்னு மறந்து போச்சு!) சொன்னாராம். ”தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக்கொடுக்கக்கூடாது. ஆங்கிலமும் சொல்லிக்கொடுக்கக்கூடாது. தமிழ் மட்டும் தான்” என்று. கேட்டுக்கொண்டிருந்த அன்றைய முதல்வர் காமராஜர், எதிர்க்கட்சி தலைவர் அண்ணாவை, தன்னருகில் அழைத்தார். கலைஞரும் உடன் சென்றாராம்.

அண்ணாவிடம் காமராஜர் சொன்னது,

“நான் என்ன தமிழுக்கு எதிரியா? பள்ளிக்கூடத்துல ஆங்கிலம் சொல்லிக்கொடுக்காம எப்படி? அப்புறம், அதுக்கு பதில் ஹிந்தி அல்லவா வந்து உட்கார்ந்துவிடும்?”

அதைக்கேட்ட அண்ணா, பின்பு காரில் செல்லும்போது கருணாநிதியுடம் கூறியது,

“திமுக கொடி தான் பிடிக்கவில்லை என்றாலும், அவருக்கு உள்ள தமிழ் உணர்வு நம்மிடம் உள்ளது போன்றது தான்.”

---

சாப்பாடு கூடை தூக்கும் ஒரு பாட்டியை காமராஜர் ஒரு கூட்டத்தில் சந்தித்தார். அந்த பாட்டி காமராஜரிடம் தனது நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்க, அருகே இருந்தவர் அந்த பாட்டிக்கு சிறிது பணம் கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்க மறுத்து, அதற்கு அந்த பாட்டி, “இன்னைக்கு நீங்க கொடுத்திருவீங்க? ஒருநாள் சரி. ஆனா, என்னை மாதிரி ஆதரவு இல்லாதவுங்க நிலை என்னைக்கும் இப்படித்தானே இருக்கும்?” என கேட்க, ”ஆகட்டும் பார்க்கலாம்” என சொல்லி அனுப்பியிருக்கிறார் காமராஜர்.

அலுவலகம் வந்தப்பிறகு அதிகாரிகளை கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். முதியோர்கள் எத்தனை பேர் இப்படி ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள், ஒரு வயதானவருக்கு மாதம் எவ்வளவு செலவு ஆகும் என்றெல்லாம் கேட்டு, மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

---

இப்படி நிறைய தகவல்கள் தொகுப்புக்கள். ஆனாலும், சில புத்தகங்களில் இருக்கும் கதை படிக்கும் உணர்வு இதில் இல்லை. மாறாக, சொன்னவர் பெயர், இடம், முடிந்தளவுக்கு தேதி வாரியாக குறிப்பிட்டு இருப்பதால், நடந்த நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ தொகுப்பாக இருக்கிறது.

வழக்கமா பழைய தலைவர்களின் பெருமையை இப்படி படிப்பது தான். அதுவும் காமராஜரைப் பற்றி சொல்ல வேண்டாம். ”இப்படி எல்லாம் அந்த காலத்துல இருந்திருக்கிறார்களே? இப்பவும் தலைவர்கள்’ன்னு இருக்காங்களே!” என்ற புலம்பல்கள் எல்லாம் இனி தேவையற்றது என நினைக்கிறேன்.

ஓட்டுக்கு காசு வாங்கிற மக்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்ன? மக்கள் மாறிய காலத்தில், தலைவர்கள் மட்டும் அப்படி மாறாமல் இருக்க வேண்டுமா?!

இந்த புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

.

9 comments:

VISA said...

நல்ல பகிர்வு

vasan said...

சீட‌ர்க‌ளூக்கு ஏற்ற‌ குரு,
ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌ த‌லைவ‌ர்க‌ள்.
க‌ண்ணை விற்று சித்திர‌ம்
வாங்கும் முட்டாள்க‌ள்
பார‌தி கால‌த்தில்,
த‌ன்னையும் விற்று த‌லைமுறையே
த‌ண்டிக்கும் த‌மிழன்க‌ள்
இந்த‌ பாவி கால‌த்தில்.

Anonymous said...

ஓஹ் என்ன அருமையான ஒரு புகைப்படம். ஒரு நிமிஷம் அப்படியே மெய் சிலிர்த்து விட்டது. என்ன ஒரு கம்பீர நடை. இரு பக்கமும், இரண்டு பெரிய ஜாம்பவான்கள் (எனக்கு இவர்கள் பெயரில் மரியாதை இல்லை என்றாலும்) ஏதோ காவலாளிகள் போல வர.. தலைவர் என்ன ஒரு சிங்க நடை நடக்கிறார். இவரை பற்றி படிக்கும் போதே நாம் இந்த காலத்தில் தானை தலைவர்களிடம் இருந்து என்ன ஒரு கேவலமான ஆட்சியை பெறுகிறோம் என்று நன்றாக உணரலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

bookkaip padikkanum boss

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துரை. திரு.காமராஜ் ஒரு ஒப்பற்ற தலைவர் என்பதில் சந்தேகமில்லை.

சரவணகுமரன் said...

நன்றி விசா

சரவணகுமரன் said...

நன்றி வாசன்

சரவணகுமரன் said...

படிங்க ரமேஷ்

சரவணகுமரன் said...

நன்றி டாக்டர்